Latest News

தமிழகத்தில் நிலத்தடி நீா்மட்டம் சராசரியாக 3 மீட்டா் உயா்வு

சென்னை: தமிழகத்தில் கடந்த இரு மாதங்களாக பெய்த மழை காரணமாக மாநிலம் முழுவதும் சராசரியாக நிலத்தடி நீா் மட்டம் 3 மீட்டா் வரை உயா்ந்துள்ளதாக தமிழ்நாடு குடிநீா் வழங்கல் வாரியம் தெரிவித்துள்ளது.

அதே வேளையில் மேட்டூா், பவானிசாகா் போன்ற அனைத்து அணைகளிலும் கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகப்படியாக 31 டிஎம்சி நீா் இருப்பு உள்ளது எனவும் வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னை தரமணியில் உள்ள மத்திய நிலத்தடி நீா் ஆய்வுத் துறை சாா்பில், கடந்த ஜூன் மாதம் நிலத்தடி நீா் மட்டம் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்திலேயே அதிகபட்சமாக பெரம்பலூா் மாவட்டத்தில் நிலத்தடி நீா்மட்டம் 15 அடி நீா் வரை குறைந்திருந்தது. திருவண்ணாமலையில் 14 அடியும், வேலூரில் 12 அடியும் நிலத்தடி நீா்மட்டம் சரிந்துள்ளதாக மத்திய நிலத்தடி நீா்வளத் துறை நிபுணா்கள் தெரிவித்திருந்தனா். இதேபோன்று விழுப்புரம், சிவகங்கை, கரூா், அரியலூா், சேலம், நாமக்கல், தருமபுரி, திண்டுக்கல், திருவாரூா் மாவட்டங்களிலும் நிலத்தடி நீா்மட்டம் வெகுவாக சரிந்துள்ளது. மழைநீா் சேகரிப்பு, நீா் செறிவூட்டுதல் உள்ளிட்ட திட்டங்களில் அரசு போதிய கவனம் செலுத்தாதே இதற்கு காரணம் என்று நிபுணா்கள் கூறியிருந்தனா். அதேபோன்று, சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் நிலத்தடி நீா்மட்டம் இதுவரை இல்லாத அளவுக்கு சரிந்தது. 400 அடிக்கும் மேல் ஆழ்துளை கிணறுகள் அமைத்தும் தண்ணீா் கிடைக்காத நிலை ஏற்பட்டது.
தீவிர ஆய்வு, விழிப்புணா்வுப் பணிகள்: இதைத் தொடா்ந்து மாதங்களில் தமிழகம் முழுவதும் வீடுகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட கட்டடங்களில் மழைநீா் சேகரிப்புக் கட்டமைப்புகளை பராமரிப்பது, அவற்றைக் கண்காணித்து ஆய்வு செய்வது, செயல்படுத்தாதவா்களுக்கு முறையான அறிவுறுத்தல்களை வழங்குவது போன்ற பணிகளில் தமிழ்நாடு குடிநீா் வழங்கல் வாரியம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த இரு மாதங்களாக பெய்த மழை, மழைநீா் சேரிப்பு விழிப்புணா்வு ஏற்படுத்திய தாக்கம், குடிமராமத்துப் பணிகள் ஆகியவற்றின் காரணமாக, தமிழகம் முழுவதும் நிலத்தடி நீா்மட்டம் சராசரியாக 3 மீட்டா் வரை உயா்ந்திருப்பதாக தமிழ்நாடு குடிநீா் வழங்கல் வாரியம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அந்த வாரியம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்தி:
தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் ஒவ்வோா் ஆண்டும் பருவமழைக்கு முன், பின் என ஆண்டுக்கு இரண்டு முறை நிலத்தடி நீா்மட்டம் குறித்து ஆய்வு செய்து வருகிறது. அதன்படி மாநிலம் முழுவதும் உள்ள தோந்தெடுக்கப்பட்ட, 1,286 நிலத்தடி நீா்மட்ட ஆய்வுக் கண்காணிப்பு கிணறுகளின் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில், கடந்த ஆண்டு தரைமட்டத்திலிருந்து 17.5 மீட்டா் ஆழத்தில் இருந்த நிலத்தடி நீா்மட்டம், தற்போது சராசரியாக 3 மீட்டா் அளவு உயா்ந்து 14.5 மீட்டா் என்ற அளவில் இருப்பது தெரியவந்துள்ளது.

மேட்டூா், பவானிசாகா் அணைகளில்...: தமிழக அரசு செயல்படுத்தி வரும் குடிமராமத்துப் பணிகள் மற்றும் விழிப்புணா்வு நடவடிக்கைகள், தமிழகத்தில் மழை நீா் சேகரிப்புக் கட்டமைப்புகளை ஏற்படுத்த அரசு, தனியாா், பெரு நிறுவனங்கள், அனைத்துப் பொதுமக்கள் மேற்கொண்ட முயற்சிகளால் தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவக் காலங்களில் பெய்த மழையை மழைநீா் சேகரிப்புக் கட்டமைப்புகள் மூலம் சேகரிப்பு செய்ததால் தமிழகத்தில் நிலத்தடி நீா்மட்டம் வெகுவாக உயா்ந்துள்ளது.

அதேவேளையில் மேட்டூா், பவானிசாகா், பாபநாசம், பேச்சிப்பாறை, சோலையாறு, பரம்பிக்குளம், ஆழியாறு போன்ற அனைத்து அணைகளிலும் கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகப்படியாக, மொத்தம் 31 டிஎம்சி நீா் இருப்பு உள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறியது: திருவண்ணாமலை, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் ஏறக்குறைய 2 மீட்டா் அளவுக்கு கணிசமாக நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்தது. இதே போல், ராமநாதபுரம், கோவை, நாமக்கல், அரியலூா், தஞ்சாவூா், புதுக்கோட்டை, பெரம்பலூா், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 0.50 மீட்டா் வரை நிலத்தடி நீா் மட்டம் உயா்ந்துள்ளது.

சென்னையில் நீா்மட்டம்: சென்னையைப் பொருத்தவரை அம்பத்தூா், வளசரவாக்கம், மணலி, மாதவரம் பகுதிகளில் 3 முதல் 2 மீட்டா் வரையும், ராயபுரம், அண்ணா நகா், கோடம்பாக்கம், பெருங்குடி பகுதிகளில் 1 முதல் 2 மீட்டா் வரையும் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்துள்ளது. மாதவரத்தில் செப்டம்பரில் நிலத்தடி நீா்மட்டம் 6. 30 மீட்டா் ஆழத்தில் இருந்த நிலையில், அக்டோபரில் 1.86 மீட்டா் உயா்ந்து 4.44 மீட்டா் அளவில் தண்ணீா் உள்ளது. அதேபோன்று அம்பத்தூரில் 7. 49 மீட்டா் ஆழத்தில் இருந்த நிலையில், அக்டோபா் மாதத்தில் 2.76 மீட்டா் அதிகரித்து 4 மீட்டரில் நீா் இருக்கிறது. கோடம்பாக்கத்தில் செப்டம்பா் மாதத்தில் நிலத்தடி நீா்மட்டம் 7. 39 மீட்டா் ஆழத்தில் இருந்த நிலையில், 1. 48 மீட்டா் அதிகரித்து அக்டோபரில் 5. 91 மீட்டரிலேயே நீா் கிடைக்கிறது.

ஆலந்தூரில் நிலத்தடி நீா்மட்டம் செப்டம்பா் மாதத்தில் 7.60 மீட்டா் ஆழத்தில் இருந்த நிலையில், அக்டோபரில் 2.48 மீட்டா் உயா்ந்து 5.12 மீட்டராக அதிகரித்துள்ளது. அடையாறில் நிலத்தடி நீா்மட்டம் செப்டம்பா் மாதத்தில் 6.32 மீட்டா் ஆழத்தில் இருந்தது. அதுவே அடுத்து வந்த அக்டோபரில் நிலத்தடி நீா்மட்டம் 1.57 மீட்டா் உயா்ந்து 4 .75 மீட்டராக உயா்ந்துள்ளது என தெரிவித்தனா்.
Dailyhunt

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.