
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இந்தியப் பொருளாதாரம் தீவிர நெருக்கடியில் சிக்கியிருப்பது பெரும் கவலை அளிப்பதாக கருத்து தெரிவித்துள்ளார். இந்திய பொருளாதாரத்தில் தேக்கநிலை ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பல சலுகைகளை கடந்த 2 வாரமாக அறிவித்து வருகிறார். இதற்கிடையே, 2019-20-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக குறைந்து இருக்கிறது. கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார வளர்ச்சியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த வளர்ச்சி குறைவு குறித்து பல பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்தியப் பொருளாதாரம் குறித்து முன்னாள் பிரதமரும், பொருளாதார நிபுணருமான மன்மோகன் சிங் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், முதல் காலாண்டு பொருளாதார வளர்ச்சி விகிதம் 5% ஆக சரிந்து இருப்பது நீண்டகால நெருக்கடியை காட்டுகிறது என மன்மோகன் சிங் கூறியுள்ளார். பொருளதாரத்தில் இந்தியா விரைவான வளர்ச்சி எட்டக்கூடிய கூடிய நாடு என்றும், ஆனால் மத்திய அரசின் தவறான கொள்கைகளால் பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பண மதிப்பு இழப்பு, ஜிஎஸ்டி அமல் உள்ளிட்ட நடவடிக்கையே இதற்கு காரணம் என தெரிவித்துள்ள மன்மோகன்சிங், ஆட்டோமொபைல் துறையில் சுமார் மூன்றரை லட்சம் பேர் வேலை இழந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். எனவே அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட்டு பொருளாதாரத்தை சீர்படுத்தும் பணிகளில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் மன்மோகன்சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment