
மயிலாடுதுறை தமிழ் சங்கம் சார்பில் "தமிழுக்காக வாழ்வோம் தமிழாய் வாழ்வோம்" என்ற தலைப்பில் மயிலாடுதுறையில் சிறப்பு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் சென்னை அறிவியல் நகரம் அமைப்பின் துணை தலைவரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சகாயம், தமிழ் சான்றோர்களுக்கு விருதுகள் வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:- இந்தியா, கிராமங்களின் தேசம். கிராமத்தில் பிறந்ததால் நான் பெருமைபடுகிறேன். விவசாயி மகன் என்ற பெருமையும் எனக்கு உண்டு. நான் ஒரு ஐ.ஏ.எஸ். அலுவலர் என்ற பெருமையும், ஒரு நேர்மையான அலுவலர் என்ற கர்வமும் எனக்கு உண்டு. இத்தனையும் தாண்டி தமிழ் மொழி பேசும் குடும்பத்தில் பிறந்த தமிழர் என்ற பெருமை என்றைக்கும் எனக்கு உண்டு.
எந்த மொழியையும் கற்றுக்கொள்ளக்கூடிய ஆற்றல் பெற்றவர்கள் தமிழர்கள். இந்தி மொழி உள்பட அனைத்து மொழிகளையும் கற்று கொள்ளும் திறன் படைத்தவர்கள். தேவைக்கேற்ப அவர்கள் கற்று கொள்வார்கள். அதே நேரத்தில் எதையும் திணிப்பது இனிக்காது. உலகத்தில் உள்ள மொழிகளை வரிசைப்படுத்தும்போது தமிழை பண்பாட்டு மொழி என்று கூறியுள்ளனர். ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழி அறிந்த பாரதியார் யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என்கிறார்.
நம்முடைய பெருமைகளை நம்மை விட மேலை நாட்டவர்கள் உணர்ந்துள்ளனர். தமிழ் மொழியை நேசிப்பது என் தாயை நேசிப்பதற்கு ஒப்பானது. இது தான் நெறி.அடுத்த தலைமுறைக்கு தமிழை கொண்டு செல்வதில் தீவிரமாக இருக்க வேண்டும். அதற்கு இன்றே திட்டமிட்டுசெயல்பட வேண்டும். அப்போதுதான் நாம் தமிழை வாழ்விக்கக்கூடிய மகத்தான பணியை செய்வோம். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சிகளை முத்துக்கனியன் தொகுத்து வழங்கினார்.
No comments:
Post a Comment