Latest News

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரம் - கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் மனு மீது செப்-5 ல் தீர்ப்பு

புது தில்லி: ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பை வரும் 5-ம் தேதிக்கு ஒத்தி வைத்து தில்லி நீதிமன்றம் திங்களன்று உத்தரவிட்டது.

கடந்த 2006-ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது.

இந்த முதலீடு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்கு கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும், அதற்குப் பதிலாக அவரது நிறுவனங்களுக்கு லஞ்சப் பணம் கைமாறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை கடந்த ஆண்டு ஜூலை 19-ம் தேதி ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவை, தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு விசாரணையானது சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி முன் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது, ப.சிதம்பரம் சம்பந்தப்பட்டுள்ள ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைக்கக் கோரி சிபிஐ, அமலாக்கத் துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதன்படி ஒத்திவைக்கப்பட்ட வழக்கானது நீதிபதி ஓ.பி. சைனி முன் திங்களன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ, அமலாக்கப்பிரிவு தரப்பு, ப.சிதம்பரம், அவரின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஓ.பி. சைனி,, இந்த வழக்கில் ப.சிதம்பரம், அவரின் மகன் கார்த்தி சிதம்பரம் இருவரும் தாக்கல் செய்துள்ள முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை வரும் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.