கேரளாவில் இரண்டாவது முறையாக ஏற்பட்டுள்ள மழைப் பிரளயம் ஆளும் கட்சியான சிபிஐ-க்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வருடம் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு முழுமையான நிவாரணங்கள் இன்னும் சென்றடையவில்லை. நிவாரண பணத்தை ஆளும் மாநில அரசு சரியாக மக்களுக்குக் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எதிர்க்கட்சிகள் சார்பில் பிரதானமாக வைக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், தற்போது ஆளும்கட்சிக்கு தலைக்குனிவை ஏற்படுத்தும் வகையில் மற்றொரு சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
traffic
ஆளும் சிபிஎம் அமைச்சரவையில் மீன்வளத்துறை மற்றும் துறைமுகத் துறை அமைச்சராக இருப்பவர் ஜெ.மெர்ஸிக்குட்டி அம்மா. இவர் நேற்றுமுன்தினம் சுதந்தரதினத்தை முன்னிட்டு பத்தினம்திட்டாவில் கொடியேற்றிவிட்டு கொல்லம் திரும்பிக்கொண்டிருந்தார். அவரது காருக்குப் பின்னால் அந்தப் பகுதியின் எஸ்.பி ஹரிசங்கரும் அமைச்சருக்குப் பாதுகாப்பாக வந்துகொண்டிருந்தார். அப்போது மய்யாற்றுகராவில் ஒரு மண்டபம் அருகே அமைச்சர் மற்றும் எஸ்.பி-யின் வாகனம் டிராஃபிக்கில் மாட்டிக்கொண்டது.
மண்டபத்தில் திருமணம் நடந்துகொண்டிருந்ததால் திருமணத்துக்கு வந்திருந்த வாகனங்கள், டூரிஸ்ட் வாகனங்களால் டிராஃபிக் ஏற்பட அமைச்சர் மெர்ஸிக்குட்டியின் கார் இருபது நிமிடம் நெரிசலில் நின்றது. டிராஃபிக்கில் கார் சிக்கியதால் டென்ஷனான அமைச்சர் மெர்ஸிக்குட்டி தனக்குப் பின்னால் வந்த அந்தப் பகுதியின் எஸ்.பி ஹரிசங்கரிடம் இதுதொடர்பாக அப்போதே வாய்மொழி புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது. புகாரின் அடிப்படையில் அங்கு பணியில் இருந்த ஒரு எஸ்.ஐ உட்பட மூன்று காவலர்களை அழைத்த எஸ்.பி வாகன நெரிசலை உடனே சரிசெய்யாததைக் கண்டித்ததுடன் அவர்கள் மூன்று பேரையும் சஸ்பெண்டு செய்துள்ளார்.
kerala minister Mercykutty Amma
இது தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது. பொதுமக்கள் பலரும் அமைச்சர் மெர்ஸிக்குட்டிக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்துவருகின்றனர். ``அமைச்சராக இருந்தால் டிராபிக்கில் நிற்காமல் செல்ல வேண்டும் என்று சட்டம் ஏதும் இருக்கிறதா? சாலை விதிகள் அனைவருக்கும் சமம் தானே'' என அமைச்சரை பொதுமக்கள் வசைபாடி வருகின்றனர். இதுதொடர்பாக பேசியுள்ள மெர்ஸிக்குட்டி, ``நான் அங்கு 20 நிமிடத்துக்கும் மேல் நின்றுகொண்டிருந்தேன். ஒரு குறுகிய சாலையில் நிறுத்தப்பட்ட சுற்றுலாப் பேருந்தால் ஒரு கிலோமீட்டருக்கு மேல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒரு அற்ப விஷயத்துக்காக நான் இவ்வளவு நேரம் சிக்கித் தவித்தது இதுவே முதல் முறை. இருப்பினும் நான் எந்த அதிகாரியையும் சஸ்பெண்டு செய்யச் சொல்லி உத்தரவிடவில்லை. என்கூட அந்த எஸ்.பி-யும் வந்திருந்தார். அங்கு என்ன நடந்தது என்பதை அவரே பார்த்தார்" என விளக்கம் அளித்தார்.



No comments:
Post a Comment