
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் மசோதா மற்றும் காஷ்மீரை இரண்டாக பிரிப்பதற்கான மசோதா லோக்சபாவில் இன்று (ஆக.,6) வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.ஜம்மு - காஷ்மீருக்கு தற்காலிகமாக வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்துகள் அரசியல் அமைப்புச் சட்டத்தின் 370 மற்றும் 35 - ஏ பிரிவுகளை மத்திய அரசு நேற்று ரத்து செய்தது. இதைதொடர்ந்து ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்கான மசோதா பெரும்பான்மை ஆதரவுடன் ராஜ்யசபாவில் நேற்று(ஆக.,05) நிறைவேறியது. வெற்றி: இந்நிலையில், லோக்சபாவில் காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்கான மசோதா, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதற்கான மசேதா இன்று(ஆக., 6) தாக்கல் செய்யப்பட்டது.370 பிரிவை ரத்து செய்வதற்கான மசோதா குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை வழங்கும் மசோதாவை ரத்து செய்வதற்கு, ஆதரவாக 351 ஓட்டுகளும், எதிராக 72 ஓட்டுகளும் பதிவானது. காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவுக்கு ஆதரவாக 361 ஓட்டுகளும், எதிராக 66 ஓட்டுகளும் பதிவானது. இரண்டாக பிரிகிறது: லோக்சபா, ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்ட நிலையில், மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அவரது ஒப்புதலுக்கு பின் சட்டசபை உள்ள யூனியன் பிரதேசமாக காஷ்மீரும், சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக்கும் பிரிக்கப்படும்.
பிரதமர் மோடியின் மிகப்பெரிய வெற்றியாக இது பார்க்கப்படுகிறது. இவ்வெற்றியை நாடு முழுவதும் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். கூட்டத்தொடர் நிறைவு: இதனையடுத்து லோக்சபா கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். ஆக்.,7 வரை பார்லி., கூட்டத்தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்றே தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஒத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது. முக்கிய மசோதாக்கள்: முத்தலாக், தேசிய மருத்துவ கமிஷன், அணைகள் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய மசோதாக்கல் இக்கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டது. மேலும் காஷ்மீரை இரண்டாக பிரிப்பதற்கான மசோதாவும் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.
No comments:
Post a Comment