
தென்காசி: குற்றால அருவிகளில் மிதமான அளவில் தண்ணீர் கொட்டி வரும் நிலையில், நீண்டவரிசையில் காத்திருந்து சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்கின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய மாதங்களில் பெய்யும் தென்மேற்கு பருவமழையால், குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிக்கும். இந்நிலையில், கடந்த சில தினங்களாக மழை இல்லாத காரணத்தால் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது.
மெயினருவி, ஐந்தருவியில் மிதமான அளவிலேயே தண்ணீர் கொட்டுகிறது. சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. மெயினருவி, ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் நீண்டவரிசையில் நின்று மகிழ்ச்சியுடன் குளித்து செல்கின்றனர்.
குளிர்ந்த காற்றின் பின்னணியில், அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் குற்றாலத்தில் ரம்மியமான சூழல் நிலவுகிறது. இதனிடையே, தேனி, நெல்லை, கன்னியாகுமரி, திண்டுக்கல் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருவதால், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வார நாட்களில் பணிச் சுமையில் இருக்கும் பலர், வார கடைசியில், குற்றால அருவிகளில் குளித்து மகிழ்ந்து புத்துணர்வுடன் திரும்பிச் செல்கின்றனர். கூட்டம் அதிகரித்திருப்பதால், வியாபாரம் களைக்கட்டி உள்ளது.
source: oneindia.com
No comments:
Post a Comment