இ ந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கக்கூடிய முதன்மையான மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. அதே நேரத்தில் தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, கிட்டத்தட்ட 40 சதவிகிதம் அளவுக்கு சேவைத்துறையைச் சார்ந்துள்ளது. கணினித்துறையில் தமிழகத்தைச் சேர்ந்த பல லட்சம் பேர் அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் திறம்படப் பணியாற்றி வருகின்றனர். ஆனால், தமிழகத்தில் கணினி சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர்களின் வாழ்வு என்னவோ கேள்விக்குறியான நிலையில்தான் உள்ளது.
``நான் அரசுப் பள்ளியில் கணினி ஆசிரியராகப் பணியாற்றுகிறேன். பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் வழங்கப்படும் தொகுப்பூதியத்தில்தான் பணியாற்றுகிறேன். என் சம்பளத்தைச் சொன்னால் நம்பமாட்டீர்கள். மாதத்திற்கு 6,000 ரூபாய்தான். ஆனால் படித்த படிப்பு என்னவோ எம்.எஸ்சி (கணினி அறிவியல்) ., பி.எட். ஆசிரியர் பணி மீதான காதலால்தான், அதிக சம்பளம் ஈட்டக்கூடிய ஐ.டி நிறுவனங்களுக்கு வேலைக்குப் போகாமல் ஆசிரியர் பணிக்காகவே முயன்று வருகிறோம்" எனப் பேச ஆரம்பிக்கிறார்கள் அரசுப் பள்ளிகளில் கணினி ஆசிரியர் பணியிடத்தை எதிர்பார்த்துக் காத்திருப்போர்.
தமிழகத்தைப் பொறுத்தமட்டில் ஆசிரியர்கள் போராட்டம் கடந்த சில மாதங்களாக என்றிருந்த நிலைமாறி, கடந்த சில வருடங்களாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. தமிழகத்தில் வேலையில் உள்ள ஆசிரியர்களின் போராட்டம் ஒருபுறமிருக்க, கணினி ஆசிரியர்களின் வாழ்நிலை இன்னும் மோசமாக உள்ளது என்றே கூறலாம். அரசுப் பள்ளிகளில் கணினி ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் பல ஆண்டுகளாக முழுமையாக நிரப்பப்படாமல்தான் உள்ளது.
இந்த நிலையில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள 814 கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கான தகுதித் தேர்வு, கடந்த 23-ம் தேதி (ஜூன்) தமிழகம் முழுவதும் 119 மையங்களில் நடைபெற்றது. இந்தத் தேர்வை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். கணினி மூலமாக நடைபெற்ற இந்தத் தேர்வின்போது பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றதாகப் புகார் எழுந்தது. பல மையங்களில் அடங்கிய தேர்வு அறைகளில் கணினிகளின் சர்வர்கள் முறையாக வேலை செய்யாததால் தேர்வில் பங்கேற்ற பலரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதுபோன்று பாதிப்புக்கு உள்ளானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசின் சார்பில் 'பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும்' எனத் தேதி எதுவும் குறிப்பிடாமல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்துப் பேசிய தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் குமரேசன், ``கணினி அறிவியல் ஆசிரியர்களின் 14 வருடப் போராட்டங்களுக்குப் பிறகு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. கிட்டத்தட்ட 800-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் இல்லாத நிலைதான் தொடர்ந்து வருகிறது. இதைப் பூர்த்தி செய்வதற்காகத்தான் இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. ஆனால், கணினி ஆசிரியர்களுக்கான தேர்வு நடத்தப்பட்டபோது, முறையான முன்னேற்பாடுகளில் தமிழக அரசு கவனம் செலுத்தவில்லை. ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான கணினிகள் முறையாக இயங்கவில்லை என்றால், மேற்பார்வையாளர்கள் அதுபற்றி உயர் அதிகாரிகளிடம் அந்தத் தகவலைப் பதிவு செய்ய வேண்டும்.
தேர்வுகளை நடைமுறைப்படுத்துவதில் அரசு உரியவகையில் செயல்பட்டிருந்தால் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தீர்வு கண்டிருக்க முடியும். ஆனால் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை பதிவிறக்கம் செய்ய முடியாமல், தேர்வுக்கு ஓரிரு நாள்களுக்கு முன்னர்தான் இணையதளத்தில் வெளியிடப்பட்டு, பிரின்ட் எடுக்க முடிந்தது. அதேபோல் தேர்வுகள் நடைபெறும்போது பிரச்னை ஏற்பட்ட இடங்கள்கூட தனியார் கல்லூரிகள்தான். பல அரசுப் பள்ளிகளில் மடிக்கணினிகளை வைத்துதான் தேர்வுகள் நடத்தப்பட்டன. அங்கு எந்தவித பிரச்னைகளும் ஏற்படவில்லை. தனியார் கல்லூரிகளை இதுபோன்ற தேர்வுகளுக்கு அரசு நாடாமல் அரசுப் பள்ளிகளிலேயே தேர்வுகளை நடத்தியிருக்க முடியும். தேர்வு நடைபெறும் நேரத்திற்கு சில மணி நேரத்திற்கு முன்பே கணினிகளையும், அவை இணைக்கப்பட்டுள்ள சர்வர்களையும் உரிய தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டு முறையாகச் சோதித்திருந்தால் இந்தப் பிரச்னை ஏற்பட்டிருக்காது. அப்படியே பிரச்னை ஏற்பட்டாலும் அவற்றுக்குத் தீர்வு கண்டிருக்க முடியும்.
தமிழகத்தில் கணினி ஆசிரியர்களின் வாழ்வு ஏற்கெனவே மிக மோசமான நிலையில் உள்ளது. பல பள்ளிகளில் கணினி ஆசிரியர்களாகப் பணியாற்றுவோரின் சம்பளத்தை வெளியே சொல்ல முடியாத நிலை உள்ளது. சில ஆயிரம் ரூபாய் மாதச் சம்பளம் பெற்றுக்கொண்டு அவர்கள் வேலை செய்கிறார்கள். இப்போதுதான் முதல்முறையாக பி.எட் முடித்த கணினி ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்க தேர்வு நடத்தப்பட்டுள்ளது. ஆனால், அந்தத் தேர்வும் இப்படி குளறுபடியாக நடத்தப்பட்டிருப்பது வருந்தத்தக்கது. கணினி மூலமாகத் தேர்வுகளும் இப்போதுதான் முதல்முறையாக நடந்துள்ளது. ஆனால், இந்தத் தேர்வை சோதனை முறையில் வைக்கப்படும் ஒரு மாதிரி தேர்வைப் போன்று நடத்தியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுதேர்வு என அறிவித்திருந்தாலும் எப்போது தேர்வு நடைபெறும் என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை. வெளிமாநிலங்களில் இருந்து பலர் இங்கு வந்து இந்தத் தேர்வெழுதியுள்ளனர்" என்றார்.
'அறிவியல் வளர்ச்சிக்கு ஆசிரியர்களின் வாழ்வு முக்கியமானது' என்பதை அரசு நினைவில் வைத்துச் செயல்பட வேண்டும் என்பதே கணினி ஆசிரியர்களின் கோரிக்கையாக உள்ளது.
No comments:
Post a Comment