
ஜெகனுக்கு கெட்ட பெயர் வாங்கி கொடுத்துவிட்டேன்…..! என் பதவியை ராஜினாமா செய்கிறேன்….! என்று திடீர் பரபரப்பைக் கிளப்பியுள்ளார் முனிசிபல் சேர்மன் ஒருவர்.
'போலீசாருடன் கடுமையாக நடந்து கொண்டு தவறு செய்துவிட்டேன். கட்சிக்கும் முதல்வருக்கும் கெட்ட பெயர் வாங்கிக் கொடுத்து விட்டேன். என் மீது நம்பிக்கையோடு முனிசிபல் சேர்மன் பதவியை ஒப்படைத்த எங்கள் எம்எல்ஏவுக்கு என்னால் கெட்ட பெயர். அதனால் மன்னிப்பு கேட்டு ராஜினாமா செய்கிறேன்' என்று பரபரப்பு செய்தி வெளியிட்டார் சின்னா….!
ஒய்.எஸ்.ஆர் கட்சித் தலைவர் ஒருவர் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டுவிட்டார். தன் இயல்பை உணர்ந்ததால் கட்சித் தலைவருக்கு தன்னால் கெட்ட பெயர் வந்து விட்டதாக வருந்தி தன் சேர்மன் பதவியையும் ராஜினாமா செய்துவிட்டார்.
இது கிருஷ்ணா மாவட்டம், ஜக்கய்யபேட்டையில் நடந்த சம்பவம். ஜக்கய்யபேட்டை முனிசிபல் சேர்மன் 'இன்டோர் இராஜகோபால்' என்கிற 'சின்னா ' மீது ஏற்கெனவே சில வழக்குகள் காவல் துறையில் பதிவாகி உள்ளன. ரவுடிகள் குறித்த பட்டியலில் இடம் பெற்றிருப்பவர்களின் புகைப்படங்களை சேகரிக்கும் பணியில் இருந்த காவல் துறையினர், அது தொடர்பாக ரவுடிகளுக்கு போன் செய்து போட்டோக்களை சேகரித்து வருகிறார்கள்.
சின்னா மீது கூட வழக்கு பதிவாகி, ரவுடி ஷீட்டில் இருப்பதால் உள்ளூர் எஸ்பி ஞாயிறன்று சின்னாவுக்கு போன் செய்து, அவரது போட்டோவை அனுப்பும்படி கேட்டுள்ளார் .
உடனே முனிசிபல் சேர்மன் சின்னா தனது ஆதரவாளர்களோடு காவல்நிலையத்துக்குச் சென்றார். சட்டையை கழற்றி விட்டு அரை நிர்வாணமாக தர்ணாவில் அமர்ந்து விட்டார். சமாதானப்படுத்த முயன்ற கான்ஸ்டபிளின் வார்த்தையை அவர் கேட்கவில்லை .
சற்று நேரத்தில் சிஐ, எஸ்ஐ., மற்றும் இதர காவலர்கள் அங்கு வந்து சேர்ந்தனர். சின்னாவிடம் பேச முயன்றனர். அப்போது முனிசிபல் சேர்மன் சின்னா போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவர்களை கெட்ட வார்த்தைகளால் திட்டினார். எனவே போலீசார் சின்னா மீதும் அவருடைய ஆதரவாளர்கள் மீதும் மற்றுமொரு வழக்கைப் பதிவு செய்தனர்.
இந்த விவகாரம் ஜக்கய்யபேட்டையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பலரும் பேசக் கூடிய விஷயமாகவும் மாறிப் போனது.
முனிசிபல் சேர்மன் பதவியில் உள்ள தலைவர் இவ்வாறு நடந்து கொள்வது பற்றி கடுமையாக விமர்சிக்கப்பட்டது. தன் மேல் விமர்சனங்கள் வருவதை கவனித்த சின்னா சற்று தணிந்தார்.
செய்த தவறை உணர்ந்து திங்களன்று இரவு போலீசாரிடம் பகிரங்க மன்னிப்புக் கோரினார்.
ஜக்கய்யபேட்டை எம்எல்ஏ 'சாமினேனி உதயபானு' வுக்கு நடந்த மக்கள் விருது நிகழ்ச்சியில் பங்கேற்று தன் பச்சாதாபத்தை வெளியிட்ட சின்னா, பகிரங்க மன்னிப்பு கேட்டார். தன் முனிசிபல் சேர்மன் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை எம்எல்ஏ உதயபானவிடம் ஒப்படைத்தார்.
இருப்பினும் சின்னாவின் ராஜினாமாக் கடிதம் மீது கட்சி எந்தவித முடிவு எடுக்கப் போகிறது என்பதைத் தெரிந்து கொள்ள ஜக்கய்யபேட் மக்கள் அனைவரும் ஆவலாக உள்ளனர்.
No comments:
Post a Comment