
சென்னை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியின், கொள்கை பரப்புச் செயலாளராக பதவி வகித்த, தங்க தமிழ்ச்செல்வன் அந்த கட்சியில் இருந்து விலகி, நாளையே, திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் தொலைக்காட்சி சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், எடப்பாடி பழனிச்சாமி அரசைப், புகழ்ந்து பேசினார் தங்க தமிழ்ச்செல்வன்.
இதையடுத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவினர், அவர் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் மீம்ஸ்கள் மற்றும் விமர்சனங்களை இணையதளத்தில் உலவ விட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அக்கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு, தினகரன் பற்றி, கடும் விமர்சனத்துடன் தங்க தமிழ்ச்செல்வன் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். பேடித்தனமாக தினகரன் செயல்படுபவர், என்றெல்லாம் கடுமையாக விளாசியிருந்தார். இந்த ஆடியோ லீக்காகி பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தினகரன், அமமுக கட்சியை விட்டு விலகுவதற்கு தங்க தமிழ்செல்வன் தயாராக இருக்கிறார். யாரோ பின்னாலிருந்து அவரை இயக்குகிறார்கள். என்னை நேரில் பார்த்தால் பெட்டிப்பாம்பாக அடங்கி விடுவார் என்று பதிலடி கொடுத்தார்.

இருப்பினும் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தங்கதமிழ்செல்வன், நான் திமுக அல்லது அதிமுக கட்சியில், இணையப்போவதில்லை. சிறிது காலம் அரசியலில் இருந்து விலகி இருக்கப் போகிறேன் என்று தெரிவித்து இருந்தார். ஆனால், திடீரென நாளை திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அறிவாலயத்தில் வைத்து, தங்கதமிழ்செல்வன் திமுகவில் இணைய உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இதையொட்டி தேனி மாவட்டத்திலிருந்து தங்க தமிழ்ச்செல்வன் ஆதரவாளர்கள், சென்னை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இந்த இணைப்பு நிகழ்வுக்குப் பிறகு தனது சொந்த மாவட்டமான தேனியில் மிகப்பெரிய இணைப்பு விழா, ஒன்றையும் நடத்தி வலிமையை காட்ட தங்க தமிழ்ச்செல்வன் முடிவு செய்துள்ளாராம். முன்னதாக, தங்க தமிழ்ச்செல்வனை கட்சியில் சேர்க்கக் கூடாது என தேனி மாவட்ட அதிமுகவினர் தீர்மானம் நிறைவேற்றியிருந்தனர். இதன் பின்னணியில் ஓபிஎஸ் இருந்ததாகவும் கூறப்பட்டது. எனவே அவர் திமுக செல்ல முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

ஏற்கனவே அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியில் இருந்த, முன்னாள் அதிமுக அமைச்சர், செந்தில்பாலாஜி திமுகவில் இணைந்தார். இது கரூர் மாவட்டத்தில் அந்த கட்சிக்கு பெரும் பலமாக மாறியுள்ளது. இதேபோல அதிமுக பலமாக உள்ள தேனியில், திமுக தன்னை பலப்படுத்திக் கொள்ள, தங்க தமிழ்ச்செல்வனை பயன்படுத்துவதாகத் தெரிகிறது. இதுபோன்ற அரசியல் மாற்றங்களால் பரபரப்பு நிலவுகிறது.
No comments:
Post a Comment