அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைசெல்வன் ஆகியோர் டி.டி.வி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்ததால், அவர்கள் மீது கட்சி தாவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக் கொறடா ராஜேந்திரனும், சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகமும் இணைந்து சபாநாயகர் தனபாலை சந்தித்து, கடந்த ஏப்ரல் மாதம் புகார் அளித்தனர்.
அரசுக் கொறடாவின் இந்தப் புகாருக்கு, தி.மு.க தலைவர் ஸ்டாலின் கடுமையான கண்டனம் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், ' சபாநாயகர் தனபால், நடுநிலை தவறி மூன்று எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுத்தால், தி.மு.க சார்பில் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, இந்த மூன்று எம்.எல்.ஏ-க்களிடமும் விளக்கம் கேட்டு, சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். பின்னர் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர வேண்டும் எனப் பேரவைச் செயலரிடம் தி.மு.க மனு அளித்தது. இதை ஏற்ற சபாநாயகர், ஜூலை 1-ம் தேதி நம்பிக்கையில்லாத் தீர்மானம் நடைபெறும் என அறிவித்தார்.
இது இப்படியிருக்க, இன்று கூடிய தமிழக சட்டமன்றத்தில், 'சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வலியுறுத்த மாட்டோம். அப்போதைய சூழல் தற்போது இல்லை. அதனால், தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தப்போவதில்லை' என தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தி.மு.க-வின் இந்த மனநிலைக்குக் காரணம் அறிந்துகொள்ள, அக்கட்சியின் எம்.எல்.ஏ பூங்கோதை ஆலடி அருணாவை தொடர்புகொண்டு பேசினோம். " எங்கள் கட்சித் தலைவர் கூறியதைப்போல் சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் அப்போது தேவைப்பட்டது. இப்போது உள்ள சூழ்நிலையில் அது தேவையில்லை. எங்கள் தலைவரின் முடிவே எங்கள் முடிவு.
தங்க தமிழ்ச்செல்வன் எங்கள் கட்சியில் இணைந்திருப்பது எங்கள் கட்சி வலுப்படுவதைக் காட்டுகிறது. தி.மு.க-வின் கொள்கை நடைமுறைகளைப் பார்த்து இங்கு வருபவர்களை ஏற்றுக்கொள்வது எல்லா கட்சிக்கும் உள்ள பொதுவான விசயம்தான். ஒரு திறமையான தலைவர், சிறப்பாகச் செயல்படும் கட்சி, தங்களின் கொள்கைக்கு ஏற்றவாறு இருந்தால் பலபேர் இங்கு வரத்தான் செய்வார்கள். அப்படி வந்தவர்களை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம்" என நிதானமாகக் கூறினார்.
தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி இதுபற்றி நம்மிடம் பேசும்போது, " தி.மு.க தலைவர் ஸ்டாலினின் இந்த அறிவிப்பு எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம், தேர்தலுக்கு முன்னர் வழங்கப்பட்டது. இடைத்தேர்தலுக்குப் பிறகு, அ.தி.மு.க 9 தொகுதிகளில் வெற்றிபெற்றதால், தி.மு.க-வுக்கு போதிய பெரும்பான்மை இல்லாமல் இருப்பதும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வாபஸ் பெற்றதற்கான காரணமாக இருக்கும். தேர்தலுக்கு முன் தங்கள் எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என தி.மு.க நினைத்தது. ஒருவேளை இடைத்தேர்தலின் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க வெற்றிபெற்றிருந்தால் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்திருக்கலாம். இதில் எண்ணிக்கை மட்டுமே முக்கியமாகக் கருதப்படுகிறது.
அ.தி.மு.க, அ.ம.மு.க-வில் அதிருப்தியடைந்த எம்.எல்.ஏ-க்கள், நிர்வாகிகள், தி.மு.க-வுக்கு வரும் சூழ்நிலை அதிகமாகிக்கொண்டே வருகிறது. அ.தி.மு.க-வில் ஜெயலலிதா மறைவால் கட்சி இரண்டாகப் பிளவுபட்டது, தேர்தல் தோல்வி, தேர்தலில் டி.டி.வி-யின் வியூகம் போன்றவைதான் அதிருப்திக்கான காரணங்களாக இருக்க முடியும். அதனால்தான் செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன் போன்றவர்கள் தி.மு.க-வில் இணைந்துள்ளனர். அதேபோல், அ.தி.மு.க-விலும் பெரிய ஆளுமை இல்லை என நினைத்துத்தான் சிலர் தினகரனை நம்பிச் சென்றனர். அங்கும் அவர்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை என்றவுடன், அனைவரும் தி.மு.க-வுக்கு வருகின்றனர். வருங்காலத்தில் தி.மு.க-வுக்கு வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கத்தான் வாய்ப்புகள் அதிகம். ஆளுமை மிக்க தலைமையை உருவாக்க அ.தி.மு.க தவறினால், கட்சித் தாவல்களும் தொடரும்" என்று கூறினார்.
No comments:
Post a Comment