
மத்திய அரசு உத்தரவைத் தொடர்ந்து இந்திய விமானப்படை விமானி அபிநந்தன்
சம்பந்தப்பட்ட வீடியோக்களை யூ டியூப் நீக்கியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் நடந்த்திய தாக்குதலுக்கு இந்திய
விமானப்படை பதிலடி தந்த போது, எதிர்பாராத விதமாக இந்திய போர் விமானம்
ஒன்று விபத்தில் சிக்கியது. அப்போது, அந்த விமானத்தில் இருந்த இந்திய
விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது.
இந்திய விமானி தங்கள் வசம் இருப்பதாக வீடியோ ஆதாரத்தை வெளியிட்டது
பாகிஸ்தான். அதில், அபிநந்தன் காயங்களுடன் இருக்கும் காட்சிகள் இருந்தது
பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்திய விமானப்படை வீரரின் காயமடைந்த தோற்றத்தை வீடியோவாக வெளியிட்டது
தொடர்பாக பாகிஸ்தானுக்கு இந்திய வெளியுறவுத் துறை கடும் கண்டனம்
தெரிவித்தது. அத்துடன், பாகிஸ்தான் கைது செய்துள்ள அபினந்தனை உடனடியாக
விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
இதற்கிடையில், அபிநந்தன் தொடர்பான 11 வீடியோ பதிவுகள், 'யூ-டியூப்’
தளத்தில் வெளியாயின. அவை உலகம் முழுவதிலும் சமூக வலைத்தளங்களில் வைரலாக
பரவியது. இதனால், அபினந்தன் தொடர்பான வீடியோக்களை நீக்கவேண்டும் என யூ
டியூப் நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
அதன் தொடர்ச்சியாக தற்போது அபிநந்தன் தொடர்பான வீடியோக்களை நீக்கி விட்டதாக
யூ டியூப் அறிவித்துள்ளது. இதை மத்திய அரசு வட்டாரங்களும்
உறுதிப்படுத்தியுள்ளன.
No comments:
Post a Comment