மேற்கு வங்காளம் மாநிலத்தில் சாரதாநிதி நிறுவன மோசடி வழக்கு
தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை
நடத்த கொல்கத்தா மாநகர போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் வீட்டுக்கு சிபிஐ
அதிகாரிகள் நேற்று மாலை சென்றனர்.அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த
போலீசார், சி.பி.ஐ. அதிகாரிகளை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதுகுறித்து
உள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, கமிஷனர் வீட்டிற்கு
வந்த சிபிஐ அதிகாரிகள் குழுவை போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச்
சென்று விசாரித்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
மேற்கு வங்காளம் மாநில போலீசாரின் நடவடிக்கை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ.
தரப்பில் இன்று வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு நாளை
விசாரிக்கப்படவுள்ளது.மத்திய அரசின் கைக்கூலியாக செயல்படும் சி.பி.ஐ.யை
வைத்து எதிர்க்கட்சிகளை மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு மிரட்டி வருவதற்கு
கண்டனம் தெரிவித்து மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி
கொல்கத்தா நகரில் நேற்றிரவில் இருந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
அவருக்கு
ஆதரவாக பல்வேறு மாநில கட்சி தலைவர்களும், முதல் மந்திரிகளும் கருத்து
வெளியிட்டு வருகின்றனர். மத்தியில் ஆளும் பா.ஜ.க. மற்றும் அதன் ஆதரவு
கட்சியினர் மம்தாவின் போக்குக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். மாநிலத்தின் பல
பகுதிகளில் மத்திய அரசை கண்டித்தும் மம்தாவின் நிலைப்பாட்டுக்கு
ஆதரவாகவும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு
வருகின்றனர்.
இந்நிலையில், கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள்விளையாட்டு
அரங்கத்தில் நடைபெற்றுவரும் விவசாயிகள் பேரணியில் 'பேஸ்புக் லைவ்' மூலம்
தர்ணா போராட்டம் நடத்திவரும் இடத்தில் இருந்து மம்தா பானர்ஜி இன்று மாலை
உரையாடினார்.மத்திய அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் அரசு
பணியாளர்களும் தற்போது இலக்காகி விட்டனர். மக்கள் பேசவே பயப்படுகின்றனர்.
மக்களின் ஜனநாயக உரிமைகள் அச்சுறுத்தலுக்குள்ளாகி வருகிறது என தனது
பேச்சினிடையே குறிப்பிட்ட மம்தா பானர்ஜி, எனது தர்ணா போராட்டம் வரும் 8-ம்
தேதி வரை தொடரும் எனவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment