தமிழகத்தில்
கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் பிறப்பைக் கண்காணிக்க தமிழக அரசு
திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், கர்ப்பணி பெண்கள் ஆன்-லைன் மூலம் பதிவு
செய்தால் மட்டுமே அவர்களின் குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் வழங்கப்படும்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்ப்பிணி பெண்கள் தங்களை பதிவு செய்து கொள்ள பிக்மி (PICME) என்ற மென்பொருள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசின் சுகாதாரத்துறை பிரிவில் உள்ள தேசிய சுகாதாரக்குழுவின்
இணை இயக்குனர் மருத்துவர் உமா இதுகுறித்து பிபிசி தமிழிடம் விளக்கினார்.
தமிழகத்தை
பொறுத்தவரை அக்டோபர் 2017 முதல் பிக்மி சி ஆர் எஸ் என்ற இணைப்பு செயலி
பயன்பாட்டில் உள்ளதாக குறிப்பிட்ட அவர், இதன் மூலமாக கிராம மற்றும்
நகர்புரங்களில் உள்ள கர்ப்பிணி பெண்கள் இதில் பதிவு செய்யும் பட்சத்தில்,
அவர்களுக்கு கிடைக்கக்கூடிய தாய் சேய் நல கவனிப்பு அனைத்தும் இதில்
பதிவேற்றப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், இந்த தகவல்கள் மத்திய அரசிற்கும் சமர்ப்பிக்கப்படும்.
முன்னதாக,
தனியார் மருத்துவமனையை மட்டுமே அதிகளவில் நாடும் நகர்புற கர்ப்பிணி
பெண்கள் தமிழக அரசின் கட்டுப்பாட்டினுள் வராமல் இருந்ததாக தெரிவித்த உமா,
தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணும் அரசின் கண் பார்வையில்
இருக்கவும், அனைவருக்கும் தரமான சேவை கிடைக்க வேண்டும் என்ற தொலைநோக்கு
பார்வையுடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
கிராம
சுகாதார செவிலியர் மூலமாகவோ, வீட்டில் இருந்தே இணையம் மூலமாகவோ, அருகில்
இருக்கக் கூடிய சேவை மையம் அல்லது 102 எண்ணுக்கு அழைத்தும் பிக்மியில்
கர்ப்பிணி பெண்கள் பதிவு செய்து கொள்ளலாம்.
பதிவு உறுதி
செய்யப்பட்டப்பின், தனித்துவ எண் ஒன்று அனைவருக்கும் வழங்கப்படும். இந்த
எண் இருந்தால் மட்டுமே, உங்கள் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வாங்க
முடியும்.
இதன்மூலம் தமிழகத்தில் உள்ள கர்ப்பிணிகளின் சரியான
எண்ணிக்கை அரசிற்கு கிடைப்பதோடு, அவர்களின் நலன் எப்படி இருக்கிறது என்ற
தகவல்களும் கிடைக்கும் என்று மருத்துவர் உமா தெரிவித்தார்.
கடந்தாண்டு
இது அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, தற்போது அதிகளவிலான கர்ப்பிணிகள்
அரசின் கண்காணிப்புக்குள் வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
இதனால்,
தமிழகத்தில் உள்ள அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் தாய் சேய் நல கவனிப்பு
நன்றாக கிடைப்பதோடு, வரும் காலங்களில் மகப்பேறு மரண விகிதத்தை குறைக்க
இத்திட்டம் பயனுள்ளதாகும் என்றும் உமா தெரிவித்தார்.
மக்கள் கருத்து என்ன?
அரசின்
இந்த முடிவை வரவேற்றுள்ளார் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அபி. ஆனால்,
"எங்கள் பகுதியில் ஒரே ஒரு மருத்துவமனை மட்டும்தான் உள்ளது. போதிய வசதிகள்
இல்லை. அதை சரி செய்வது அவசியம்" என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
இது
போன்ற திட்டம் இருப்பதே தெரியாது எனவும் சில பெண்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்கிறார் சேலம்
மாவட்டத்தை சேர்ந்த ராஜலஷ்மி.
இந்த எண் எந்த சிரமும் இல்லாமல் உடனடியாக கிடைப்பதாக சமீபத்தில் குழந்தை பெற்ற சிலர் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment