Latest News

மாடு கடத்தியதாக சந்தேகப்பட்டு இன்னொரு இளைஞர் அடித்துக் கொலை

ஹரியானா மாநிலம் நூஹ் என்ற கிராமத்தில் வசிக்கும் ரக்பர் கான் என்பவர் மாடுகளை கடத்தியதான சந்தேகத்தில் அடித்துக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக போலீஸ் இருவரை கைது செய்துள்ளது.

ரக்பரின் மனைவி
சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டவர்கள் இந்து அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, கொலைக்கு அரசியல் கோணம் உருவாகிறது.

"ராஜஸ்தானில் இருந்து மாடுகள் கடத்திக் கொண்டு சிலர் நடந்து ஹரியானாவுக்கு ஓட்டிச் செல்கின்றனர்" என்று ராஜஸ்தான் மாநிலம் அல்வர் மாவட்டம், ராம்கட் காவல்நிலையத்திற்கு தகவல் வந்தது.

சம்பவ இடத்திற்கு போலீசார் செல்லும்போது ரக்பர் படுகாயமடைந்திருந்தார். ராஜஸ்தான் மாநிலம் அல்வர் நகரைச் சேர்ந்த பசு பாதுகாவலர்கள் என்று கூறிக்கொள்ளும் கும்பல் செய்த மூன்றாவது கொலைவெறிச்செயல் இது.
கடந்த ஆண்டு பஹ்லூ கான் என்பவரும், பிறகு உமர் என்பவரும் மாடு திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு இந்தக் கும்பலினால் அடித்துக் கொல்லப்பட்டனர்.
ரக்பர்
காவல்துறையினர் பதிவு செய்திருக்கும் முதல் தகவல் அறிக்கையின்படி, சம்பவம் இரவு 12.41 மணிக்கு நடைபெற்றது. இந்த சம்பவம் பற்றிய தகவல் கொடுத்தவர் நவல் கிஷோர் ஷர்மா என்பவர். இவர் விஷ்வ ஹிந்து பரிஷத்துடன் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் நடந்த பகுதியை சேர்ந்த சிலர் ரக்பரை அடித்து உதைத்திருக்கின்றனர். படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார்.

இறப்பதற்கு முன் ரக்பர் கான் கொடுத்த மரண வாக்குமூலத்தில், அடையாளம் தெரியாத சிலர் தன்னைத் தாக்கியதாக கூறியதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மறுபுறம் பாரதிய ஜனதா கட்சியின் ஹரியானா மாநில சட்டமன்ற உறுப்பினர் ஞான் தேவ் ஆஹுஜா இந்த வழக்கில் போலீசாரின் நடவடிக்கை மேல் சந்தேகம் எழுப்பியிருக்கிறார்.
செய்தியாளர்களிடம் பேசிய ஆஹுஜா, தங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ரக்பரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துவிட்டதாக தெரிவிக்கிறார்.
ரக்பரை பிடிக்கும்போது அவர் ஓட முயற்சித்ததால் காயமடைந்துவிட்டதாக ஆஹுஜா கூறுகிறார்.

சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் சொன்ன நவல் கிஷோர், பிரபல ஹிந்தி பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், சம்பவ இடத்திற்கு போலீசாருடன் தானும் சென்றதாக தெரிவித்தது இந்த வழக்கில் முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் ரக்பரை அல்வரின் ராம்கட் நகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது காலை நான்கு மணியாகிவிட்டதாக தெரிவித்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில் சம்பவ இடத்திற்கும், மருத்துவமனைக்கும் இடையிலான தூரம் நான்கு அல்லது ஐந்து கிலோமீட்டர்களே.

சம்பவ இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட மாடுகள் ராம்கட்டில் உள்ள மாட்டுப்பண்ணைக்கு கொண்டு செல்லப்பட்ட பிறகுதான் மருத்துமனைக்கு ரக்பர் கொண்டுச் செல்லப்பட்டதாக சில ஊடக செய்திகள் கூறுகின்றன.

இந்த கொலையில் நீதி விசாரணை வேண்டுமென பாரதிய ஜனதா கட்சியினர் கோருகின்றனர்.
கொலை செய்தது யார்? காரணம் என்ன?
கறவை மாடுகளை வாங்குவதற்காக ரக்பருடன் சென்ற அஸ்லம், வன்முறை கும்பலிடம் இருந்து தப்பித்து, அருகில் இருக்கும் லாலாவண்டி காட்டுப் பகுதிகளில் மறைந்திருந்து உயிர் பிழைத்தார்.

மாடுகளை வாங்கிக் கொண்டு தாங்கள் வாகனத்தில் வர விரும்பியதாகவும், ஆனால் மாடுகள் வாகனத்தை பார்த்து மிரண்டதால், நடத்தி அழைத்து வந்துக் கொண்டிருந்ததாக அஸ்லம் கூறுகிறார்.

பிபிசியிடம் பேசிய அவர், அடுத்த நாள் காலையில் தன்னுடைய கிராமத்திற்கு திரும்பிய பிறகுதான் ரக்பர் இறந்த விஷயம் தெரியவந்ததாக கூறினார்.
வன்முறை கும்பலிடமிருந்து தப்பித்து உயிர் பிழைத்த அஸ்லம்
உண்மையில் ரக்பரும் அஸ்லமும் மாடுகளை கடத்தினார்களா என்பது இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை என்கிறார் அல்வர் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் அனில் பெனிவால். தற்போது இரண்டு மாடுகளும் ராம்கரில் உள்ள ஒரு மாட்டுப் பண்ணையில் வைக்கப்பட்டுள்ளன.

ரக்பர் மாடுகளை கடத்துவதாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் 2014ஆம் ஆண்டு அவருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரக்பரும், அஸ்லமும் நூஹ் பகுதியில் உள்ள கோல்காவ் என்ற கிராமத்தில் வசிப்பவர்கள். ரக்பரின் சகோதரர் இர்ஷாதிடம் பிபிசி பேசியது. தனது சகோதரரின் இறப்புக்கு காரணம் தெரியவில்லை என்று அவர் கூறுகிறார். அவர் ஏன், எதற்காக கொல்லப்பட்டார் என்று தெரியவில்லை என்று வருத்தத்துடன் கூறுகிறார்.
ரக்பரின் சகோதரர் இர்ஷாத்
பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, ரக்பரின் உடல் முழுவதும் படுகாயங்கள் இருந்தன. விலா எலும்புகள் உடைந்துவிட்டன, நுரையீரலில் நீர் நிரம்பியிருந்தது.

கர்பிணி மனைவி
28 வயது ரக்பரின் மனைவி அஸ்மீனா கர்பிணி. கணவர் இறந்த துக்கத்தில் அழுது கொண்டேயிருக்கிறார். அடிக்கடி மூர்ச்சையாகிறார். அஸ்மீனாவின் தாயார் அவரை தேற்ற முயன்றாலும் தோற்றுப்போகிறார். 

கால்நடைகளை பராமரித்து, அவற்றிலிருந்து கிடைக்கும் பாலை விற்பதே தங்கள் தொழில் என்று சொல்கிறார் ரக்பரின் தந்தை சுலேமான்.
ரக்பரின் மனைவி அஸ்மீனா கர்பிணி அடிக்கடி மயங்கி விழுகிறார்
போகவேண்டாம் என்று எச்சரித்தேன்
மூன்று மாடுகளை வைத்திருந்த ரக்பர், குழந்தை பிறந்து குடும்பமும் பெரியாதாகப் போகிறது, எனவே தனது தொழிலையும் விரிவுபடுத்தலாம் என்ற நினைப்பில் மேலும் இரண்டு கறவை மாடுகளை வாங்க அல்வருக்கு சென்றார்.

அல்வருக்கு போகவேண்டாம், தற்போது நிலைமை சரியாக இல்லை என்று தாங்கள் எச்சரித்ததை ரக்பர் கேட்டிருந்தால் அவர் இன்று உயிருடன் இருந்திருப்பார் என்று சொல்லி துக்கப்படுகிறார் சுலேமான்.
ரக்பரின் தந்தை சுலேமான்
மேவாத் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்திருப்பதாக சொல்கிறார் நூஹ் சட்டமன்ற உறுப்பினர் ஹாகிர் ஹுசைன். இங்குள்ள மக்கள் பல பரம்பரைகளாக மாடுகளை வளர்ப்பது மற்றும் பால் விற்பனைத் தொழிலும் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.

இங்கு, இந்துக்களை விட முஸ்லிம் மக்களே மாடு வளர்க்கும் தொழிலில் அதிக அளவில் ஈடுபட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
நூஹ் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஜாகிர் ஹுசைன்
`மேவாத் பகுதியில் மாடு வளர்ப்பு தொடர்பாக இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே பிரச்சனைகள் எதுவுமே இருந்ததில்லை, பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடக்கும் வன்முறை சம்பவங்களின் மையப்புள்ளி ராஜஸ்தான் மாநிலம் தான்` என்கிறார் ஹரியானா சட்டமன்ற முன்னாள் துணை சபாநாயகரும், ராம்லீலா சமிதி மற்றும் கோசாலைக் குழு ஆயுள் உறுப்பினருமான ஆசாத் முகம்மது. 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் சுரேந்திர சிங்கை கேல்காவில் நாங்கள் சந்தித்தோம். ராஜஸ்தானிலும், ஹரியானாவிலும் நடைபெறும் மாடு தொடர்பான வன்முறை சம்பவங்கள் திட்டமிட்டு நடத்தப்படுவதாக அவர் குற்றம் சாட்டுகிறார்.

'மேவாத் மக்கள் தங்கள் தேசபக்திக்கு சான்றிதழ் வழங்க வேண்டியிருக்கிறது. அவர்களுடைய முன்னோர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர்கள். தங்கள் மண்ணையும் அரசையும் காப்பதற்காக பாபர், அக்பர் என பிற ஆக்ரமிப்பாளர்களிடமும் போராடியவர்களின் வழித் தோன்றல்களின் நாட்டுப் பற்று பற்றி தற்போது கேள்விகள் எழுப்பப்படுகின்றன'.
அரசு தரவுகளின்படி, 2017 ஏப்ரல் 13ஆம் தேதியன்று பஹ்லு கான் கொல்லப்பட்டது முதல் தற்போது ரக்பர் கொல்லப்பட்டது வரை இந்தியாவின் பல இடங்களிலும் மொத்தம் 44 பேர் மாடு தொடர்பான சம்பவங்களால் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

ஜார்கண்டில் மதம் பிடித்த கும்பல் 13 பேரை கொன்றது என்றால், மகாராஷ்டிர மாநிலத்தில் எட்டு பேர் கொல்லப்பட்டனர்.
அண்மையில் மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா, கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு இனிப்பு கொடுத்து, மாலை அணிவிப்பது போன்ற புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

அல்வரில் கடந்த வெள்ளியன்று (ஜூலை 20) பின்னிரவில் ரக்பர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக துரித நடவடிக்கைகளை எடுக்குமாறு ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் வசுந்தரா ராஜே சிந்தியா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் ஞான் தேவ் ஆஹுஜா காவல்துறையின் நடவடிக்கைகளின் மீது சந்தேகம் எழுப்பியதை அடுத்து, ஜெய்பூர் வட்டார குற்றவியல் மற்றும் புலனாய்வுத்துறையின் காவல்துறை கண்காணிப்பாளர் அளவிலான அதிகாரி விசாரணை செய்யவேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

1 comment:

  1. எப்போதுதான் திரப்போகிறது இந்த பிரச்சனை. விரைவில், இதற்கான முடிவு தேர்தல் களத்தில், இன்ஷா அல்லாஹ்!!

    ReplyDelete

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.