தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான
போராட்டத்தின் போது, நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் மனிதாபிமானமற்ற செயல்
என்றும், அரசியல் விதிகளுக்கு எதிரானது என்றும் சமூக செயற்பாட்டாளர் மேதா
பட்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமூக செயல்பாட்டாளர் மேதா பட்கர்,
நர்மதா ஆற்றின் குறுக்கே சர்தார் சரோவர் அணை கட்டுவதை எதிர்த்து மக்களைத்
திரட்டி 'நர்மதா பச்சாவோ அந்தோலன்' அமைப்பின் மூலம் போராட்டம் நடத்தியவர்.
சமூக உரிமை போராட்டங்களுக்காக நாடு முழுவதும் நன்கு அறியப்பட்ட மேதா
பட்கர், நாடு முழுவதும் நடைபெறும் மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவாக குரல்
கொடுத்து தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய
மக்கள் மீது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டைக் கண்டிக்கவும்,
போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் உயிரிழந்தவர்களின்
குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கவும் இன்று தூத்துக்குடி வந்தார்.
மக்கள்
இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு மேதா பட்கரின் வருகையை
ஒருங்கிணைத்திருந்தது. அதன்படி, இன்று காலை 10.20 மணிக்கு மேதா பட்கர்
சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துகுடி வந்தார். விமான நிலையத்தில்
செய்தியாளர்களிடம் பேசிய மேதா பட்கர், "தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்
ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம்
மனிதாபிமானமற்ற செயல் என்றும், அரசியல் விதிகளுக்கு எதிரானது என்றும்
குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய மேதா பட்கர், "கடந்த 20
ஆண்டுகளுக்கும் மேலாக தூத்துக்குடியில் வேதாந்தா குழுமத்தின் ஒரு அங்கமாக
இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலை இந்திய நிறுவனமே அல்ல. இந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு
எதிராக கடந்த 1998 முதல் இன்று வரை ஸ்டெர்லைட் ஆலைக்கு போராட்டம்
தொடர்ந்து நடந்து வருகிறது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பசுமைத்
தீர்ப்பாயம், உச்ச நீதிமன்றம் என எத்தனை தீர்ப்புகள் வழங்கப்பட்டாலும்,
அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல், ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்கி
வருகிறது. மத்திய அரசும் ஸ்டெர்லைட் போன்ற கார்ப்பரேட் ஆலைகளுக்கு ஆதரவாக
சுற்றுச்சூழல் விதிகளை குறைத்துகொண்டே வந்துள்ளது.
மக்கள் தங்கள்
கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு மறைந்த முதலமைச்சர்
ஜெயலலிதா இருந்தபோது குறைந்தபட்சம் அனுமதியாவது கிடைத்தது. ஆனால், தற்போது
மக்களுக்குப் போராட அனுமதியும் கிடைக்கவில்லை.
ஆட்சியாளர்களுக்கு
மக்களின் பிரச்சனையும் தெரியவில்லை. இந்த போராட்டத்தின் போது நிகழ்ந்த
வன்முறை ஏற்றுக்கொள்ளக்கூடியது இல்லை. நர்மதா அணை கட்டும் பணியின் போது
மக்களின் பிரச்சனைகளை புரிந்துகொள்ளாமல் செயல்பட்ட மோடி, தற்போது பிரதமராக
உள்ள மோடி அதே நிலைப்பாட்டை மேற்கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது" என்று
வருத்தம் தெரிவித்தார்.
மேலும், செய்தியாளர்களிடம் தொடந்து பேசிய
மேதா பட்கர், "ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது, நடந்த
வன்முறையைக் காரணம் காட்டி 200க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது
செய்துள்ளனர். அவர்கள் மீது பொய்வழக்குப் பதிவு செய்திருப்பது
கண்டிக்கத்தக்கது." என்று தனது கண்டனத்தை தெரிவித்தார்.
இதைத்
தொடர்ந்து, மேதா பட்கர் தூத்துக்குடியில் உள்ள பேய்க்குளம் பகுதிக்கு
சென்றார். அங்கே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில்
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த செல்வ சேகர் குடும்பத்தினரைச் சந்தித்து
ஆறுதல் கூறினார். மேலும் அப்பகுதியில் போலீசாரின் தாக்குதலில்
பாதிக்கப்பட்ட மக்களிடம் பேசினார். பின்னர் அங்கிருந்து திருநெல்வேலி அரசு
மருத்துவமனைக்கு சென்று, அங்கே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில்
போலீஸார் நடத்திய தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை
சந்தித்து நலம் விசாரித்தார். போராட்டத்தின்போது போலீஸார் நடத்திய வன்முறை
குறித்தும் கேட்டறிந்தார்.
அங்கிருந்து புறப்பட்ட மேதா பட்கர்
ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்த ஸ்னோலின் குடும்பத்தினரைச் சந்திக்க
லைன்ஸ்டோன் பகுதிக்கு சென்றார். அதுவரை மேதா பட்கருக்கு பாதுகாப்புக்காக
வந்த இன்ஸ்பெக்டர் வனிதா தலைமையிலான போலீஸாரை லைன்ஸ்டோன் மக்கள் தங்கள்
குடியிருப்பு பகுதிக்குள் உள்ளே நுழைய எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால்,
அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து போலீஸார்
லைன்ஸ்டோன் பகுதிக்குள் வரவில்லை.
இதையடுத்து, ஸ்னோலின்
குடும்பத்தாரைச் சந்தித்த மேதா பட்கர் அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர், போராட்டத்தில் போலீஸார் நடத்திய வன்முறை குறித்து கேட்டறிந்தார்.
பின்னர், இன்று மாலை மதுரையில் நடைபெற உள்ள ஒரு கருத்தரங்கில் பங்கேற்க
மதுரைக்கு புறப்பட்டு சென்றார்.
source: oneindia.com
No comments:
Post a Comment