Latest News

தூத்துக்குடி போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்திய வேதாந்தாவை விரட்டியடித்த ஒடிஷா திராவிட ஆதி குடிகள்!

லாஞ்சிகர்: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் வீரமரணம் அடைந்த 13 போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தியிருக்கின்றனர் ஒடிஷாவின் திராவிடர் இனப் பழங்குடிகளான டோங்கிரியாக்கள்...இவர்களும் தூத்துக்குடி ஸ்டெர்லைட்டை நடத்தும் வேதாந்தா குழுமத்தின் பாக்சைட் ஆலையை எதிர்த்து 17 ஆண்டுகாலம் வீரம்செறிந்த போராட்டத்தை நடத்தியவர்கள்தான் இந்த திராவிடர் இன பழங்குடிகள்.

டோங்கிரியா கோண்டுகள்.. திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த குயி மொழி பேசுகிற மக்கள். ஒடிஷாவின் கலஹாண்டி, ராயகடா மாவட்டங்களில் விரிந்து கிடக்கிறது நியாம்கிரி மலை.

டோங்கிரியா கோண்ட் திராவிடப் பழங்குடிகளின் தாயக பிரதேசம். பாக்சைட் தாது வளம் உள்ளது இந்த மலைப் பகுதி. இதனால் பாக்சைட் தாது வெட்டி எடுத்து அலுமினிய சுத்திகரிப்பு ஆலை அமைக்க வேதாந்தா குழுமத்துக்கு முதலில் அனுமதி வழங்கப்பட்டது. 

ஆனால் பாக்சைட் தாது சுரங்கங்களை அமைப்பதன் மூலம் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வந்த மலைகளில் இருந்து தாங்கள் அகதிகளாக, வேதாந்தா குழுமம் கட்டிக் கொண்டுக்கும் லைன் வீடுகளில் அடைக்கப்படுகிறோம்... இனத்தின் எதிர்காலமே பாக்சைட் சுரங்கங்களில் புதைக்கப்படுகிறோம் என உணர்ந்து வீறு கொண்டு எழுந்தனர். 17 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் திரள் மற்றும் சட்டப் போராட்டங்களை முன்னெடுத்தனர் டோங்கிரியா கோண்ட் மக்கள்.

உச்சநீதிமன்றம் தலையிட்டு டோங்கிரியா இன மக்களின் கிராமசபைகளின் முடிவே இறுதியானது என உத்தரவிட்டு வேதாந்தாவின் லாஞ்சிகர் அலுமினிய சுத்தகரிப்பு ஆலையை இழுத்து மூட வைத்தது. ஆனாலும் ருசி கண்ட பூனை வேதாந்தா குழுமமோ, எப்போது வேண்டுமானாலும் அலுமினிய சுத்தகரிப்பு தொழிற்சாலையை திறந்துவிடும் என்கிற பெரும் பீதியில்தான் இந்த மக்கள் இன்னமும் அச்சத்துடன் இருக்கின்றனர்.

இந்த மக்களின் போராட்டத்தை 'அவதார்' திரைப்படத்தை ஒப்பிட்டு ஆய்வாளர்கள் எழுதியிருக்கின்றனர். இம் மக்கள்தான் வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை இழுத்து மூடக் கோரி நடத்திய போராட்டத்தில் போலீசார் படுகொலை செய்த 13 தமிழர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி சுவரொட்டிகளை நியாம்கிரி மலைப் பகுதிகளில் ஒட்டியிருக்கின்றனர்.

அத்துடன் வேதாந்தா எப்போதும் இங்கே மீண்டும் வந்துவிடக் கூடாது என முன்னைவிட ஆக்ரோஷத்துடன் களம் காணவும் தயாராகிவிட்டனர். வேதாந்தாவை இந்தியாவை விட்டு வெளியேற வலியுறுத்தி ஜூன் 5-ந் தேதியன்று லாஞ்சிகரில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற மிகப் பிரமாண்ட பேரணியையும் டோங்கிரியா இன மக்கள் நடத்தியுள்ளனர்.
இப்போது லாஞ்சிகரும் தகிக்கிறது!
source: oneindia.com

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.