ஜார்க்கண்டில், ஆள் கடத்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக
தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து பணியாற்றும் ஐந்து பெண்கள்
வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கூண்ட்டி
மாவட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தச் சென்ற தன்னார்வ குழுவின் ஐந்து
பெண்கள் கடத்தப்பட்டு கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டனர்,
கடத்தப்பட்டவர்கள் சிறுநீர் அருந்துமாறு கட்டாயப்படுத்தப்பட்டதாக
ஜார்க்கண்ட் மாநில கூடுதல் டி.ஜி.பி. ஆர்.கே மாலிக் தெரிவித்தார்.
நடந்தது என்ன?
ஜார்க்கண்ட்
மாநிலம் கூண்ட்டி மாவட்டம் அட்கி பிளாக்கில் உள்ள கோசாங் கிராமத்தில்,
ஜூன் மாதம் 19ஆம் தேதி காலை சுமார் 12 மணி அளவில் இந்த கொடூரமான சம்பவம்
நடந்தது.
கோசாங் சதுக்கத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள ஆர்.சி.
மிஷன் பள்ளியில் இருந்து ஐந்து பெண்கள் கடத்திச் செல்லப்பட்டதாக
கூறப்படுகிறது. இந்த கடத்தல் சம்பவம் குறித்த தகவல்களை போலிசாருக்கு
தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டில் பள்ளியின் தலைமையாசிரியர் ஃபாதர்
அல்ஃபான்சோ ஆயிந்த் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த மிஷனரி
பள்ளியின் வளாகத்தில் உள்ள பிரம்மாண்டமான புளிய மரத்தின் கீழே, ஆள் கடத்தல்
தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் தெருவோர நாடகம் நடந்துக்
கொண்டிருந்தது.
நாடகத்தை பார்ப்பதற்காக கிட்டத்தட்ட 300
குழந்தைகளும், கணிசமான அளவில் கிராம மக்களும் கூடியிருந்தனர். இந்த
நாடகக்குழுவில் ஐந்து பெண்களும், மூன்று ஆண்களும் இருந்தனர்.
நாடகம்
நடந்துக் கொண்டிருந்தபோது, அங்கு இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஐந்து
பேர் அவர்களிடம் சில கேள்விகள் கேட்டனர். பிறகு குழுவினரின் காரிலேயே
நாடகத்தில் நடித்தவர்களை உட்காரச் செய்து, ஆள் அரவமில்லாத காட்டுப்
பகுதிக்கு கொண்டு சென்றார்கள்.
கடத்தல் சம்பவம் நடந்த போது
அங்கிருந்த மார்டின் சோய் என்ற கிராமவாசி கூறுகிறார், "நாடகம் தொடங்கிய
பிறகு, அவர்கள் சதுக்கத்திற்கு வந்தார்கள். பின்னர் அதில் நடித்துக்
கொண்டிருந்த பெண்களை கடத்தினார்கள். இதற்கு முன்னர் நான் அவர்களை
பார்த்ததில்லை. அவர்கள் கோசாங்கை சேர்ந்தவர்கள் அல்ல. கடத்தியவர்களை
அவர்கள் அடித்ததாக ஒரு செய்தி அன்று மாலை கிராமத்தில் பரவியது.
அப்போது
அந்த பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்ட விவரம் எங்களுக்கு தெரியாது.
கிராமத்திற்கு போலீஸ் வந்து சொன்ன போதுதான், அந்த பெண்கள் பாலியல்
பலாத்காரம் செய்யப்பட்டதை நாங்கள் தெரிந்து கொண்டோம். பள்ளியின் தலைமை
ஆசிரியரான ஃபாதர் அல்ஃபான்சாவை கைது செய்வதற்காக ஜூன் 21ஆம் தேதியன்று பெண்
போலீசார் உட்பட சுமார் 300 போலீஸ்காரர்கள் கிராமத்திற்கு வந்தனர். அவர்கள்
தலைமை ஆசிரியரையும், இரண்டு கன்னியாஸ்திரிகளையும் அழைத்துச் சென்றார்கள்"
என்று அவர் தெரிவித்தார்.
ஃபாதர் அல்ஃபான்சா எப்படிப்பட்டவர்? என
மார்ட்டினிடம் கேட்டோம். அவர் மிகவும் நல்லவர், கிராம மக்கள் அவர் மீது
மிக்க மரியாதை வைத்திருக்கிறார்கள் என்று பதிலளித்தார் மார்ட்டின்.
ஜார்க்கண்ட்
மாநிலம் கூண்ட்டி மாவட்டத்தில் உள்ள கோசாங் கிராமத்திற்கு வாகனத்தில்
செல்ல வேண்டுமானால் மேற்கு சிங்பூம் மாவட்டத்தின் பந்த் என்ற கிராமத்திற்கு
முதலில் செல்ல வேண்டும்.
அங்கிருந்து செல்லும் குறுகிய சாலை,
வளைந்தும், நெளிந்தும் செல்கிறது. மேடும் பள்ளமுமான, குண்டும் குழிகளும்
நிறைந்த பாதையில் பயணித்தால், அரை மணி நேரத்தில் கோசாங் கிராமத்தை
சென்றடையலாம்.
பொது போக்குவரத்து சேவைகள் குறைவாகவே இருப்பதால், பெரும்பாலான மக்கள் நடந்தே செல்கின்றனர்.
தலைமையாசிரியர் கைது தொடர்பாக எழும் கேள்விகள்
இங்கு
வசிக்கும் பழங்குடியின மக்கள், பல தசாப்தங்களுக்கு முன்னரே கிறித்துவ
மதத்தை ஏற்றுக்கொண்டனர். இப்போது இந்த பகுதியில் கிறித்துவ மதம் நன்றாக
வேரூன்றிவிட்டது.
இந்த
வன்புணர்வு விவகாரத்தை பற்றி விசாரிக்க கோசாங் வந்து சேர்ந்த ஜார்கண்ட்
முக்தி மோர்ச்சா சட்டமன்ற உறுப்பினர் பெளலுஸ் சோரன், மிஷனரி பள்ளியின்
தலைமையாசிரியர் கைது செய்யப்பட்டது குறித்து கேள்வி எழுப்புகிறார்.
"அரசாங்கம், ஆர்.எஸ்.எஸ் சொல்வதை கேட்டு கிறித்துவ விரோத போக்கை
கடைபிடிக்கிறது. அதனால்தான் நடைபெற்ற சம்பவத்துடன் தேவாலயத்தின் பெயரை
தொடர்பு படுத்துகிறார்கள். ஜார்கண்ட் மாநிலம் முழுவதும் கிறித்துவ
பிரச்சாரகர்கள் மீது பிரிவு 107இன் கீழ் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
போலீசும், நிர்வாகமும் கற்பனை கதைகளை புனைந்து, அரசியல்வாதிகளை திருப்தி
செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்" என்று குற்றம் சாட்டுகிறார் சோரேன்.
'காவல்துறைக்கு
கடத்தல் சம்பவம் பற்றிய தகவலை தராதது குற்றம் என்றால், முதலமைச்சர்
நேரடியாகவே இங்கு வந்து நேரடியாக கள ஆய்வு செய்யட்டும். நெட்வொர்க்கே
இல்லாத கிராமத்தில் இருந்து எப்படி உடனடியாக தகவல்களை கொடுக்கமுடியும்
என்று சொல்லட்டும்' என்று கூறினார்.
பாதிக்கப்பட்ட பெண்கள் என்ன சொல்கின்றனர்?
கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளான ஐந்து பெண்களும் பழங்குடியினத்தை
சேர்ந்தவர்கள். கூண்ட்டி மாவட்டத்தை சேர்ந்த அவர்களில் ஒருவர் கைம்பெண்,
இருவர் திருமணமாகாதவர்கள். தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து
பணியாற்றும் இவர்கள் அனைவரும், அரசுத் திட்டங்கள் தொடர்பாக மக்களுக்கு
விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தெருவோர நாடகங்கள் நடத்துவார்கள். இதன்
மூலம் கிடைக்கும் பணம் தான் அவர்கள் வாழ்வாதாரம்.
பாதிக்கப்பட்டவர்கள்
போலீஸில் கொடுத்த புகாரில், 'அவர்கள் மூன்று பேர் இருந்தார்கள்.
துப்பாக்கி முனையில் எங்கள் ஆடைகளை அவிழ்க்க வைத்து, புகைப்படமும்,
வீடியோவும் எடுத்தார்கள். அந்தரங்க உறுப்புகளில் மரக்குச்சிகளை
செருகினார்கள். சில மணி நேரங்களுக்கு பிறகு எங்களை அதே மிஷனரி பள்ளியில்
விட்டுச்சென்றார்கள்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"எங்களுடன்
இருந்த ஆண்களை சிறுநீர் குடிக்கச் சொல்லி வற்புறுத்தினார்கள், அவர்களை
கடுமையாக தாக்கினார்கள். பத்தல்கடி பகுதிக்குள் அனுமதி இல்லாமல் வரக்கூடாது
என்று அச்சுறுத்தினார்கள். போலீசின் ஏஜெண்டுகள் என்றும், தீகு மொழியில்
துண்டுப் பிரசுரங்களை வழங்கியதாகவும் எங்கள் மீது குற்றம் சாட்டினார்கள்"
என்று புகாரில் மேலும் கூறப்பட்டுள்ளது.
கொடுமையான அனுபவத்தை
எதிர்கொண்ட அனைவரும் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். கூண்ட்டிக்கு வந்ததும்,
நெட்வர்க் கிடைத்த உடனே, தங்களுக்கு நடத்தப்பட்ட கொடுமையை பற்றி சமூக சேவகி
லக்ஷ்மி பாக்லாவிடம் சொன்னார்கள்.
"எனக்கு தகவல் தெரிந்தபோது
இரவாகிவிட்டது. நாங்கள் அனைவரும் மிகவும் பயந்து போய்விட்டோம். நான்
கூண்ட்டியில் இல்லாததால் யாரிடமும் உடனடியாக தொடர்பு கொள்ள முடியவில்லை.
அடுத்த நாள் என்னுடைய நண்பர் ஒருவர் மூலமாக இந்த தகவலை ராஞ்சியில் உள்ள
போலீஸ் ஏ.டி.ஜி அனுராக் குப்தாவுக்கு தெரியப்படுத்தினேன்" என்று அவர்
தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்த தகவலை உடனே கூண்ட்டி எஸ்.பியிடம்
எ.டி.ஜி தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பெண்களை புகார் கொடுக்கச் சொன்னார்.
அதையடுத்து, புதன்கிழமை இரவு புகார் பதிவு செய்யப்பட்டது.
போலீஸ் என்ன சொல்கிறது?
இந்த வழக்கில், மிஷனரி பள்ளியின் தலைமையாசிரியர் ஃபாதர் அல்ஃபான்சோ உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜார்கண்ட்
போலீஸ் செய்தித் தொடர்பாளரும் கூடுதல் டி.ஜி.பி.யுமான ஆர்.கே.மாலிக் இந்த
சம்பவம் பற்றி விரிவாக கூறுகிறார், ''பத்தல்கடி போராட்டக் குழுவின்
ஆதரவாளர்கள் மற்றும் தீவிரவாதிகளுக்கு இந்த சம்பவத்தில் தொடர்பிருக்கலாம்
என்று நம்புகிறோம். இந்த திட்டத்திற்கு மூல காரணமாக இருந்தவரை
கண்டறிந்துவிட்டோம். இரண்டு காவல் நிலையங்களில் தனித்தனியாக இரண்டு
புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இரண்டு வழக்குகளிலும் விசாரிப்பதற்காக
தலைமையாசிரியர் ஃபாதர் அல்போன்ஸை கைது செய்துள்ளோம். குற்றம் சுமத்தப்பட்ட
மற்றவர்களை விரைவிலேயே கைது செய்துவிடுவோம்" என்றார்.
பழங்குடியின
மக்களின் பத்தல்கடி இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் ஷங்கர்
மஹ்லியிடம், இதுபற்றி பிபிசி பேசியது. '' அரசாங்கத்தின் விருப்பத்திற்கு
ஏற்ப போலீசார் கட்டுக்கதைகளை சொல்கிறார்கள். நாங்கள் ஆட்சி அதிகாரத்தை
கேட்டால் எங்களை சிக்க வைக்க அரசு முயல்கிறது. நக்சல்கள் என்றும், ஓபியம்
விவசாயம் செய்வதாகவும் எங்கள் மீது குற்றம் சாட்டியவர்கள், இப்போது நாங்கள்
பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவதாக குற்றம் சுமத்துகிறார்கள். இதில்
எள்ளளவும் உண்மை இல்லை" என்று அவர் கூறுகிறார்.
இதற்கிடையில், இந்த
கூட்டுப் பாலியல் வன்புணர்வு சம்பவம் தொடர்பாக கோசாங் கிராம பஞ்சாயத்து
கூடி, சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைவரையும் தண்டிக்கவேண்டும் என்று
தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
No comments:
Post a Comment