
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தஞ்சையில் அ.தி.மு.க. சார்பில்
நடத்தப்பட்ட போராட்டத்தில் மேடைக்கு முன் வரும் தொண்டர்கள் முன்னாள்
அமைச்சர் வைத்திலிங்கத்துக்கு வணக்கம் வைத்த பின்னரே அமர வேண்டும் என
நிபந்தனை விதிக்கப்பட்டது.
காவிரி
மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்
வைத்திலிங்கம் தலைமையில் தஞ்சாவூரில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில்
முன்னாள் எம்.எல்.ஏ,முன்னாள் மேயர், என முக்கிய நிர்வாகிகள் மேடையிலேயே
தூங்கி விழுந்தனர். மேலும், மேடைக்கு முன் வரும் தொண்டர்களை, அமைச்சரை
(வைத்திலிங்கம்) பார்த்து கும்பிட்டுவிட்டு அப்படியே போய் உட்காருங்கள் என
நிர்வாகி ஒருவர் சொல்லி கொண்டே இருந்தார்.
காவிரிக்காக நடக்கும் இந்த உயிர் போராட்டத்தில் கூட இப்படி நடந்து
கொள்கிறார்களே என வேதனைப்பட்டு புலம்பினர் நிர்வாகிகள் சிலர்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்கவும்,
காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை அமைக்கவும், காவிரி நதி நீர்ப்
பங்கீட்டில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டவும், தமிழகத்தின்
வாழ்வாதாரத்தையும், தமிழக விவசாயிகளின் நலன்களை காத்திடவும் மத்திய அரசை
வலியுறுத்தி தஞ்சாவூர் அ.தி.மு.க. வடக்கு, தெற்கு மாவட்டங்கள் சார்பில்
தலைமை தபால் நிலையம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இதில்,
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு,
செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் நிர்வாகிகள்
கலந்துகொண்டனர். இந்த உண்ணாவிரதப் போராட்டம் தமிழகம் முழுவதும் நடந்தாலும்,
தஞ்சாவூரில் நடைபெறும் போராட்டத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
தினகரன் மிகப்பெரிய அளவில் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கடந்த 25-ம் தேதி
நடத்தியிருந்தார். அப்போது, இதுபோல் அ.தி.மு.கவினரால் கூட்டத்தைக் கூட்ட
முடியுமா என சவால் விட்டு பல நிர்வாகிகள் பேசினார்கள்.
அது
மட்டுமல்லாமல் இடையில் வைத்திலிங்கத்திற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு
சிகிச்சை எடுத்து வந்தார். அதனால் அவர் தஞ்சாவூர் பக்கம் தலைகாட்டாமல்
இருந்தார். இதனால் வைத்திலிங்கம் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொள்வாரா
எனச் சந்தேகம் எழுந்தது. ஆனால், திட்டமிட்டபடி இதில் கலந்துகொள்வேன் என
நிர்வாகிகளிடம் கூறிய வைத்திலிங்கம், தினகரனுக்குக் கூடிய கூட்டத்தை விட
நாம் அதிகம் கூட்டம் கூட்ட வேண்டும் என நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி இன்று காலை முதலே போராட்டத்திற்கு வேன், லோடு ஆட்டோ உள்ளிட்ட பல
வாகனங்களில் தொண்டர்கள் அழைத்து வரப்பட்டனர்
மேடைக்குக் கீழே இருந்த
நிர்வாகி ஒருவர், `அமைச்சர் வந்து விட்டார் (இன்றும் வைத்திலிங்கத்தை
அப்படிதான் அழைக்கிறார்கள்), அவரைப் பார்த்து கும்பிட்டு விட்டு அப்படியே
போய் உட்காருங்கள் எனச் சொல்லிக்கொண்டே இருக்க அதன் படியே செய்தனர்
தொண்டர்கள். பின்னர், உண்ணாவிரதத்திற்கு வந்தவர்களை வைத்திலிங்கமும்,
துரைக்கண்ணுவும் மாறி மாறி கும்பிட்டபடியே இருந்தனர். பின்னர் காலை 10.30
மணிக்கு மேல் ஒருமுறையும், மதியம் 1.45 மணிக்கு மேல் ஒரு முறையும்
வைத்திலிங்கம் சுற்றுலா மாளிகைக்குச் சென்று விட்டு வந்தார். `அண்ணன்
இப்பத்தான் உடல்நிலை தேறியிருக்கார். அதான் கொஞ்சம் ரிலாக்ஸாக வெளியே
போயிட்டு வர்றார்' என்றார் நிர்வாகி ஒருவர்.
மேடையில் பேசிய
நிர்வாகிகள் எல்லாம் மத்திய அரசை பற்றி அதிகம் விமர்சிக்காமல், தி.மு.கவை
மட்டும் காய்ச்சி எடுத்தனர். நிர்வாகிகளின் பேச்சுக்கு இடையில் ஆர்கெஸ்ட்ரா
குழுவினர் எம்.ஜி.ஆர். பாட்டைப்பாடி தொண்டர்களை குஷிப்படுத்திக்
கொண்டிருந்தனர். அதையும் மீறி முன்னாள் எம்.எல்.ஏ. ரெத்தினசாமி, மேயர்
சாவித்திரி கோபால் மற்றும் பல முக்கிய நிர்வாகிகள் மேடையிலேயே தூங்கி
விழுந்தனர். இதைக்கண்ட மற்ற நிர்வாகிகள், `ஏற்கெனவே நாம் மத்திய அரசிற்கு
இணக்கமாக இருக்கிறோம் என்றும் நாடாளுமன்றத்தில் நம் எம்.பி-க்கள் செய்த
போராட்டத்தைக் கூட நாடகம் என்றும், இந்த உண்ணாவிரதம் கூட கண் துடைப்புதான்
என்றும் விமர்சிக்கிறார்கள் எதிர்கட்சியைச் சேர்ந்தவர்கள். அதற்கு
ஏற்றார்போல் முக்கிய நிர்வாகிகள் காவிரிக்காக நடைபெறும் போராட்டத்தில்
உணர்வோடு இல்லாமல் இப்படி மேடையிலேயே தூங்குகிறார்களே' என வேதனைப்பட்டுக்
கொண்டனர்.
No comments:
Post a Comment