
வி ரைவில், இந்தியாவில் புல்லட் ரயில் ஓடப்போகிறது.
அகமதாபாத்துக்கு 2 மணி நேரத்தில் சென்று விடலாம் என்கிற கனவுடன் வாழ்ந்து
வரும் மும்பைவாசிகள், கடும் அதிர்ச்சியைச் சந்தித்துள்ளனர். வெயிலின்
தாக்கத்தால் தண்டாவளம் வளைந்து நெளிந்துபோக, இலை தழைகளைப் போட்டு
குளுமைப்படுத்திக்கொண்டிருந்த ரயில்வே ஊழியர்களைப் பார்த்து, மும்பை ரயில்
பயணிகள் அதிர்ந்தார்கள். நம்ம ஊர் அமைச்சர் ஒருவரை மிஞ்சும் வகையில்
ரயில்வே அதிகாரி ஒருவரின் ஐடியாதான் இது.
மும்பையில்
வெயில் இப்போதே கொளுத்தத் தொடங்கியுள்ளது. இரு நாள்களுக்கு முன், வெயிலின்
அளவு 40 டிகிரி செல்ஷியஸ்ஸைத் தொட்டது.
அம்பர்நாத்-பத்லாபூர் புறநகர் ரயில் நிலையங்களுக்கிடையே தண்டவாளம் வளைந்து
இருந்தது. தக்க சமயத்தில் பார்த்த ரயில் ஓட்டுநர், அதிகாரிகளுக்குத் தகவல்
கொடுத்தார். நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவார்கள் என்று காத்திருந்த
ரயில் பயணிகள், ரயில்வே ஊழியர்களின் செய்கையைப் பார்த்து வாய்விட்டுச்
சிரித்தார்கள். வந்த வேகத்தில், அருகில் இருந்த மரத்தின் இலை தழைகளைப்
பறித்து, தண்டவாளத்தின்மீது பரப்பியதைக் கண்டு பயணிகளுக்கு தலையே
சுற்றியது. வைகை அணையில் மிதக்கவிட்ட தெர்மக்கோல் போலவே தண்டவாளத்தைக்
குளுமைப்படுத்த போடப்பட்ட இலை தழைகளும் காற்றில் பறந்துபோய்விட்டன
என்பதுதான் கிளைமாக்ஸ்.
''புல்லட் ரயில் விடப்போகிறோம்
என்கிறீர்கள்... தண்டவாளம் வளைவதைத் தடுக்க வேறு நவீன தொழில்நுட்பம்
இல்லையா... இலைதழைகளை வைத்து குளுமைப்படுத்துகிறீர்களே'' என்று பயணிகள்
அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தார்கள். அதிகாரிகள் அவர்களைச்
சமாதானம்செய்தனர். கோடைக்காலத்தில், தண்டவாள பராமரிப்பாளர்களை அதிக
கவனத்துடன் சிரத்தை எடுத்துப் பணி புரியுமாறு அதிகாரிகள்
அறிவுறுத்தியுள்ளனர்.
கோடைக்காலத்தில் அதிக வெப்பம் காரணமாக
தண்டவாளம் வழக்கத்தைவிட நீளமாகும். இதை ஈடுகட்டவே, தண்டவாளத்தில் சிறிய
இடைவெளி விடப்பட்டிருக்கும். அதையும் மீறி வளைந்த தண்டவாளத்தின்மீது
கவனிக்காமல் ரயில் இயக்கப்பட்டால், விபத்துக்கு வழி வகுத்துவிடும்.
No comments:
Post a Comment