
கண்ணீர்
வற்றிப்போனத் தமிழ்நாட்டு உழவர்களின் கண்களில் ரத்தம் கசிவதற்குள் காவிரி
மேலாண்மை வாரியம் அமைய வேண்டும் என்று ஒரு விவசாயி மகனாகக் கும்பிட்டுக்
கேட்டுக் கொள்கிறேன் என்று கவிஞர் வைரமுத்து உருக்கமாக வேண்டுகோள்
விடுத்துள்ளார்.
காவிரி நதி நீர்
பங்கீட்டு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பினை சமயத்தில்
வழங்கியுள்ளது. அந்தத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஆறு
வார கால அவகாசம் அளித்திருந்தது. அநத அவகாசம் வியாழனுடன் நிறைவடைய உள்ளது.
ஆனால் இன்னும் இது தொடர்பாக மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் கண்ணீர் வற்றிப்போனத்
தமிழ்நாட்டு உழவர்களின் கண்களில் ரத்தம் கசிவதற்குள் காவிரி மேலாண்மை
வாரியம் அமைய வேண்டும் என்று ஒரு விவசாயி மகனாகக் கும்பிட்டுக் கேட்டுக்
கொள்கிறேன் என்று கவிஞர் வைரமுத்து உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வியாழன் அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
வரலாற்றுக்கு
நினைவு தெரிந்த நாளிலிருந்து நெற்களஞ்சியம் என்று கொண்டாடப்படும் தஞ்சைப்
பாசனப்பரப்பு பாலைவனமாகிவிடுமோ என்ற அச்சம் தமிழ்ச் சமூகத்தில் நிலவுகிறது.
'விளைந்தால்
விலையில்லை, விலையிருந்தால் விளைச்சலில்லை' என்ற சந்தைக் கலாச்சாரத்தால்
விவசாயி வீழ்ந்து கிடக்கிறான். இப்போது காவிரியில் தண்ணீரும் கண்களில்
கண்ணீரும் வற்றிப்போன பிறகு என்ன செய்வான் பாவம் ஏழைத் தமிழ் உழவன்?
உச்ச
நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழ்நாட்டுக்கான உரிமைத் தண்ணீரைக் குறைத்துக்
கொடுத்தது. அந்தக் குறைந்த தண்ணீரையாவது காவிரி மேலாண்மை வாரியம் பெற்றுக்
கொடுக்கும் என்ற நம்பிக்கையின்மீது இப்போது நம்பிக்கை இல்லாமல் செய்வது
நியாயமா?
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு
'ஸ்கீம்' என்ற சொல்லைச் சுட்டியிருக்கிறது. கிளி என்றாலும் கிள்ளை
என்றாலும் ஒன்றுதான். 'ஸ்கீம்' என்றாலும் காவிரி மேலாண்மை வாரியம்
என்றாலும் ஒன்றுதான் என்று உச்ச நீதிமன்றத்திற்கு விளக்க வேண்டிய மத்திய
அரசே உச்ச நீதிமன்றத்திடம் விளக்கம் கேட்பது விசித்திரமாய் இருக்கிறது.
உச்ச
நீதிமன்றத் தீர்ப்பே எங்கள் உழவர்களின் வேட்டியைக் கிழித்து விட்டது.
மத்திய அரசோ, கிழிந்த வேட்டியையும் பறிக்கப் பார்க்கிறது. உழவர்கள் வேட்டி
இழந்தால் நாடு நிர்வாணமாகிவிடும்.
அரசியலின் பற்சக்கரங்களுக்கு மத்தியில் விவசாயிகளின் விலா எலும்புகள் நொறுங்கும் சத்தம் கேட்கத் தொடங்கிவிட்டது.
இந்தியாவின்
'கல்ச்சர்' என்ன என்று கேட்டபோது, 'அக்ரிகல்ச்சர்' என்றார் வல்லபாய்
பட்டேல். அவரை நேசிக்கிறவர்கள் இதை மறந்திருக்க மாட்டார்கள்.
மீண்டும் மீண்டும் நீதிமன்றத்திற்குள்ளேயே சுற்றுவது, கொக்கு விழுங்கிய மீனைத் தொண்டைக்குள் இறங்கித் தேடுவதாகிவிடும்.
கண்ணீர்
வற்றிப்போனத் தமிழ்நாட்டு உழவர்களின் கண்களில் ரத்தம் கசிவதற்குள் காவிரி
மேலாண்மை வாரியம் அமைய வேண்டும் என்று ஒரு விவசாயி மகனாகக் கும்பிட்டுக்
கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment