
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அதிமுக எம்பிகள்
கூண்டோடு தற்கொலை செய்வோம் என்று நவநீதிகிருஷ்ணன் எம்பி கூறியதை தமிழிசை
சவுந்தரராஜன் கேலி செய்துள்ளார். ராஜினாமா செய்யச் சொன்னாலே அதிமுக
எம்பிகள் வரமாட்டார்கள், தற்கொலை செய்யவா வரப்போகிறார்கள் என்று அவர்
கேள்வி எழுப்பியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் நாளைக்குள்
அமைக்கப்படுமா என்ற பரபரப்புகள் ஒருபுறமிருக்க, ராஜ்யசபாவில் அதிமுக எம்பி
பேசிய பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மத்திய அரசு உச்சநீதிமன்ற
தீர்ப்புப் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தமிழக மக்கள்
சொல்வது போல அதிமுக எம்பிகள் ராஜினாமா செய்யப்போவதில்லை, தற்கொலை செய்வோம்
என்று ஆவேசமாக பேசினார்.
தொடர்ந்து நாடாளுமன்றத்திற்கு வெளியேயும், தமிழக மக்களுக்காக
பயன்படாத உயிர் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன என்று தொடர்ந்து
உணர்ச்சிப்பூர்வமாக பேசி வருகிறார். நவநீதகிருஷ்ணனின் இந்த பேச்சுக்கு
தமிழக அரசியல் கட்சியினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
இந்நிலையில்
சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன்
செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று
சொன்னாலே ஒருவர் கூட வரமாட்டார்கள், தற்கொலை செய்து கொள்ள அதிமுக எம்பிகள்
வருவார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
உணர்ச்சிபூர்வமாக
பேசாமல், ஆக்கபூர்வமாக சிந்திக்க வேண்டும். தமிழகத்திற்கு நல்ல திட்டங்களை
கொண்டு வரும் முனைப்பில் பாஜக உள்ளது. முற்போக்குத்தனமான திட்டங்கள்
இல்லாததால் தான் தமிழக விவசாயிகளுக்கு பிரச்னை என்றும் தமிழிசை
சவுந்திரராஜன் கூறியுள்ளார்.
source: oneindia.com
No comments:
Post a Comment