'அ.தி.மு.க-வினர் சொல்வதை, கேட்பதைச் செய்துகொடுக்காத அதிகாரிகள், இந்த
மாவட்டத்திற்குத் தேவையில்லை' என அமைச்சர் மணிகண்டன் பேசியது சர்ச்சையை
ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர்
மணிகண்டனின் அதிரடி நடவடிக்கைகளால் வெறுப்படைந்த ராமேஸ்வரம் நகராட்சியில், 2
முறை சேர்மனாக இருந்த அர்ச்சுணன், அ.தி.மு.க அவைத் தலைவர் பிச்சை உள்ளிட்ட
முக்கியப் பிரமுகர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர், தினகரன்
அணிக்குத் தாவிவிட்டனர். இந்நிலையில், எஞ்சியிருக்கும் கட்சிக்காரர்களைத்
தக்க வைப்பதற்காக, ராமேஸ்வரத்தில் அமைச்சர் மணிகண்டன் தலைமையில் செயல்வீரர்
கூட்டம் நடைபெற்றது.
மாநாடுகளுக்கு அழைத்து செல்வது போல கட்சி செயல்வீரர் கூட்டத்திற்கும் பணம்
கொடுத்து, வயது முதிர்ந்த பெண்கள் உட்பட ஏராளமானோரை அமைச்சரின்
ஆதரவாளர்களான கே.கே.அர்ச்சுணன், குணசேகரன் ஆகியோர் கூட்டியிருந்தனர்.
கூட்டத்தில்
பேசிய அமைச்சர் மணிகண்டன், ''மாவட்டத்தில் உள்ள கட்சிக்காரர்கள் சிலர்
செயல்படாமல் உள்ளனர். அவர்களுக்குச் செய்ய வேண்டிய எல்லாவிதமான
கவனிப்புகளும் சென்றுகொண்டுதான் இருக்கின்றன. கிளைச் செயலாளர்கள் முதல்
ஒன்றியச் செயலாளர் வரை யார் யாருக்கு என்னென்ன சேரவேண்டுமோ அது சேர்ந்து
கொண்டுதான் இருக்கிறது. ஆனால், மாவட்டத்தில் உள்ள ஒரு குழப்பவாதி
(அன்வர்ராஜா) யின் பேச்சைக் கேட்டு, கட்சிக்குத் துரோகம் இழைத்துவிட்டு,
குக்கரைத் தேடி சென்றிருக்கின்றனர். அந்த குழப்பவாதி, மாவட்டத்தில் யார்
அமைச்சராக வந்தாலும், மாவட்டச் செயலாளராக வந்தாலும் அவர்மீது அம்மாவிடம்
புகார் செய்வதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இதுவரை 12 மாவட்டச்
செயலாளர்கள் அவரது தூண்டுதலால் மாற்றப்பட்டிருக்கிறார்கள். தனக்கு எதிராக
இருப்பவர்கள்மீது புகார் கடிதம் எழுதுவதே அவரது வேலையாகிவிட்டது. என்னையும்
அமைச்சர் பதவியிலிருந்து மாற்ற நினைத்தார். அது நடக்கவில்லை. இப்ப
இருக்கிற நிலைமையில், சில முட்டாள்கள் ஒன்றுசேர்ந்துகொண்டு தலைமையிடம்
புகார் சொல்லியுள்ளனர். என்னை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினால், இங்கு
யாரை அமைச்சராக ஆக்க முடியும். கட்சியை விட்டு போகிறவர்கள் போகட்டும். நான்
தடுக்கவில்லை.
கட்சித் தொண்டர்கள் தவிர வேறு யாருக்கும் நான் நிதி
ஒதுக்குவதில்லை. ராமேஸ்வரம் அமைச்சரான நான் சொல்லியும்கூட கட்சிக்காரர்
ஒருவருக்கு ராமேஸ்வரம் நகராட்சி அதிகாரியாக இருந்தவர் கேட்டதைச்
செய்துதரவில்லை. உடனடியாக அவரை அந்தப் பதவியிலி ருந்து மாற்றிவிட்டேன்.
பணத்தைக் கொடுத்து மீண்டும் இங்கு பதவிக்கு வந்தார். மறுபடியும் அவரை
மாற்றினேன். அ.தி.மு.க-வினர் சொல்வதை, கேட்பதைச் செய்துகொடுக்காத
அதிகாரிகள் நமக்குத் தேவையில்லை. இந்த மாவட்டத்தில் இருக்கவேண்டியதில்லை.
நாம் சொல்வதைத்தான் அவர்கள் கேட்க வேண்டும். எனவே, எதுவாக இருந்தாலும்
என்னிடம் வாருங்கள். நான் செய்துதருகிறேன். முதியோர் இல்லம் நடத்துபவர்களை (
தினகரன் அணிக்கு சென்றவர்கள்) நம்பிப் போகாதீர்கள்'' என்றார்.
தொடர்ச்சியாக
அதிகாரிகளைக் காய்ச்சி எடுத்துவரும் அமைச்சர், தற்போது தன் கட்சிகாரர்கள்
சொல்வதைத்தான் கேட்க வேண்டும் என பகிரங்கமாக எச்சரித்திருப்பது சர்ச்சையை
ஏற்படுத்தியிருக்கிறது.

No comments:
Post a Comment