
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காகத் திருச்சிக்கு வருகைதரும்
தமிழக ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்க தி.மு.க திட்டமிட்டுள்ளது.
வரும்
21-ம் தேதி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 34 வது
பட்டமளிப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காகத் தமிழக ஆளுநர் பன்வாரிலால்
புரோஹித் முதல்நாள் மாலையே திருச்சிக்கு வருகிறார். திருச்சி அரசினர்
சுற்றுலா மாளிகையில் தங்கப்போகும் அவர், அடுத்த நாள் மதியம் 2.30 மணிமுதல்
3.30 மணி வரை பொதுமக்கள்,சமூக ஆர்வலர்கள், மக்கள் பிரதிநிதிகள், தொண்டு
நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும்
பொதுநலஅமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரிடம் கோரிக்கை மனுக்களைப்
பெறுகிறார்.
அதோடு திருச்சி ஶ்ரீரங்கம் உள்ளிட்ட கோவில்களுக்கும் தூய்மை இந்தியா
திட்டத்தின்கீழ் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்கிறார். இதற்கான இடம் தேர்வுப்
பணி நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால்
புரோஹித், திருச்சி ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளை அழைத்து ஆய்வு செய்வதற்கு
எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தைத் தி.மு.க
அறிவித்துள்ளது.
இதுகுறித்து திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க செயலர்
கே.என்.நேரு, வடக்கு மாவட்டச் செயலர் காடுவெட்டி தியாகராஜன் ஆகியோர்
இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், ``திருச்சி பாரதிதாசன்
பல்கலைக்கழகத்தில் பிப்ரவரி 21-ம் தேதி நடைபெறும் பட்டமளிப்பு விழாவில்
பங்கேற்கும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அதன் பின்னர், மாவட்ட
ஆட்சியர் உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகளையும் அழைத்து ஆய்வு செய்து
ஆலோசனைகளையும் உத்தரவுகளையும் வழங்க உள்ளதாகத் தெரிகிறது.
இந்தச்
செயல் மாநில சுயாட்சி கொள்கைக்கு விரோதமாகவும் மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரங்களைப் பறிக்கும் வகையிலும் உள்ளது.
தமிழக ஆளுநரின் செயலைக் கண்டித்து பிப்ரவரி 21-ம் தேதி காலை 9.30 மணிக்கு
திருச்சி - புதுக்கோட்டை சாலையில் சுப்பிரமணியபுரம் ஜெயில்கார்னர்
பகுதியில் தி.மு.க சார்பில் கறுப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட, மாநகர, அனைத்து ஒன்றிய, நகர
நிர்வாகிகள்,அனைத்து அணியினர் உள்ளிட்டோர் பங்கேற்க வேண்டும் எனக்
கூறப்பட்டுள்ளது. ஆளுநர் வருகையும், அதற்கு தி.மு.க உள்ளிட்ட
எதிர்க்கட்சிகள் தெரிவிக்கும் எதிர்ப்பும் பெரும் பரபரப்பை
உண்டாக்கியுள்ளது.
No comments:
Post a Comment