
சிறுநீரக கோளாறு காரணமாக இலங்கை சிறையில் அவதியுற்று வரும் ராமேஸ்வரம்
மீனவர் பூண்டிராஜ் என்பவர் தன்னை விடுதலை செய்து இந்தியாவிற்கு அனுப்ப
நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாக்
நீரிணை பகுதியில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை
கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாகக் கூறி சிறைபிடித்துச் செல்வதை வழக்கமாக
கொண்டுள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இலங்கை கடற்படையினரால் சிறை
பிடிக்கப்படும் மீனவர்கள் குறுகிய காலத்திற்குள்ளாகவே விடுதலை செய்யப்பட்டு
இந்தியாவிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள். ஆனால் தற்போது அது
போன்று விடுதலை செய்யாமல் நீண்ட காலம் இலங்கை சிறையில் இருக்கும் நிலை
உள்ளது.
இந்நிலையில், கடந்த மாதம் 16-ம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து
மீன்பிடிக்க சென்ற இரு படகுகளையும் அதில் இருந்த 12 மீனவர்களையும் இலங்கை
கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர். விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்களை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க நீதிமன்றம்
உத்தரவிட்டது. இவ்வாறு சிறை வைக்கப்பட்ட மீனவர்களில் பூண்டிராஜ் என்பவர்
சிறுநீரக கோளாறினால் பாதிக்கப்பட்ட நோயாளி ஆவார். சிறையில்
அடைக்கப்பட்டிருந்த பூண்டிராஜுக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்ட
நிலையில் 2 நாட்கள் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சைக்கு பின் சிறையில் அடைக்கப்பட்ட பூண்டிராஜுக்கு தற்போது மீண்டும்
உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. சிறுநீரக நோயினால் அவதிப்படும் தனக்கு
கால்கள் வீங்கியுள்ளதாகவும், சிறுநீரக நோய் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும்,
எனவே தன்னை சிறையில் இருந்து விடுவித்து சிகிச்சைக்காக இந்தியாவிற்கு
அனுப்ப உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தங்கச்சிமடத்தில் உள்ள தனது
குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதையடுத்து நோயாளியான மீனவர்
பூண்டிராஜுவை விடுதலை செய்து இந்திய அழைத்து வர மத்திய, மாநில அரசுகள்
நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment