
மறைந்த முன்னாள்
முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளன்று 500 மதுக்கடைகளை மூட தமிழக அரசு
திட்டமிட்டுள்ளது. இந்தியா முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில்
உள்ள மதுக்கடைகள் மூட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து
மது கடைகள் மூடப்பட்டது. இதனால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதை அடுத்து
கிராமங்களில் புதிதாக மது கடைகள் திறக்க திட்டமிடப்பட்டது. அப்போது தமிழகம்
முழுவதும் பல இடங்களில் பெண்கள் புதிதாக திறக்கப்படும் மது கடைகளுக்கு
எதிராக போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. பின்னர் தற்போது மீண்டும்
தமிழகத்தில் மூடப்பட்ட டாஸ்மாக கடைகள் திறக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான
பிப்ரவரி 24ஆம் தேதியன்று 500 மதுக்கடைகளை மூட தமிழக அரசு
திட்டமிட்டுள்ளது. மூடப்படும் 500 கடைகளுக்கான பட்டியலை தயாரிக்க அனைத்து
மாவட்ட டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகளுக்கும் தகவல் சென்றுள்ளது. ஜெயலலிதா
பிறந்தநாள் அறிவிப்பாக இது வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது அனைத்து கட்சிகளும்
படிப்படியாக மது விலக்கை அமல்படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்தது
குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment