கிரண்பேடியின் அறிக்கைகள், செயல்பாடுகள் அனைத்தும் மாநில அரசுக்கு
எதிராகவும், மாநில அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடும்
விதத்திலும் உள்ளது. புதுச்சேரியில் மாநில நிர்வாகியின் (துணைநிலை ஆளுநர்)
செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என முதல்வர்
நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்து இலங்கை
கடற்படையால் கைது செய்யப்பட்டு, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள
புதுச்சேரி மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினேன். கடந்த
4 மாதத்திற்கு முன்பு 6 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். இலங்கை பறிமுதல்
செய்து வைத்திருந்த 10 படகுகளில் 8 படகுகள் திரும்ப கொடுக்கப்பட்டன.
தீபாவளி தினத்தில் கைது செய்யப்பட்ட 6 மீனவர்களையும், படகுகளையும் மீட்டுத்
தரும்படி கேட்டுக்கொண்டேன். அப்போது கைது செய்யப்பட்ட 6 பேரில் 5 பேர்
மீது சாதாரண வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது, ஒருவர் மீது போதை
வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சாதாரண வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களை
விடுவிக்கவும், அவர்களது படகுகளை திரும்பப் பெறவும் நடவடிக்கை
எடுப்பதாகவும், மீதமுள்ளவர்களை வழக்கறிஞர் உதவியுடன் விடுவிக்க மத்திய அரசு
நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.
மத்திய கலாச்சாராத்
துறை அமைச்சர் மகேஷ் வர்மாவை சந்தித்து முருங்கப்பாக்கத்தில் உள்ள கைவினை
கிராமத்திற்கு அருகில் ₹14 கோடியில் கலையரங்கம் கட்டுவதற்கு மத்திய அரசு
ஒப்புதல் அளிக்க கேட்டுக்கொண்டேன். அதற்கு ஒப்புதல் அளிப்பதாக மத்திய
அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
நியமன
எம்எல்ஏக்களுக்கு ஊதியம் வழங்கக்கோரிய விஷயத்தில் சபாநாயகர் வைத்திலிங்கம்
தெளிவாக உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதொடர்பான வழக்கு சென்னை
உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆகவே அதுபற்றி கருத்து கூற
விரும்பவில்லை.
இருப்பினும் சபாநாயகர் உத்தரவுக்கு உயர்நீதிமன்றம்
தடையேதும் பிறப்பிக்காத சூழலில், ஊதியம் வழங்கக்கோரி அதிகாரி அனுப்பிய
கடிதத்திற்கு சபாநாயகர் வைத்திலிங்கம் விளக்கமாக பதில் அளித்துள்ளார். இனி
உயர்நீதிமன்றம்தான் முடிவு செய்ய முடியும்.
புதுச்சேரி மாநில
நிர்வாகி ( துணைநிலை ஆளுநர்) கிரண்பேடியின் அறிக்கைகள், செயல்பாடுகள்
அனைத்தும் மாநில அரசுக்கு எதிராகவும், மாநில அரசின் செயல்பாடுகளுக்கு
முட்டுக்கட்டை போடும் விதத்திலும் உள்ளது. புதுச்சேரியில் மக்களால் தேர்வு
செய்யப்பட்ட அரசுதான் இங்குள்ளது. ஜனாதிபதி ஆட்சி இங்கு இல்லை.
உரிமை இல்லைலை
புதுச்சேரி
யூனியன் பிரதேச சட்ட விதிமுறையின்படி அரசின் செயல்பாடுகளை நடத்துவது
முதல்வர், அமைச்சரின் வேலை. நேரடியாகவோ, மறைமுகமாகவோ தலையிட மாநில
நிர்வாகிக்கு உரிமையும், அதிகாரமும் இல்லை. விதிமுறைகளை கடைபிடிக்காமல்
உண்மைக்கு புறம்பாக செய்திகளைக்கூறி, அரசின் செயல்பாடுகளில் தலையிடுவதை
மாநில நிர்வாகி வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
இதுவரை 15 முறை சட்ட
விதிகளை குறிப்பிட்டு மாநில நிர்வாகிக்கு கடிதம் எழுதியுள்ளேன். ஆனால் அவர்
தனக்குத்தான் முழு அதிகாரம் இருப்பதாக நினைத்து அரசின் தினசரி செயல்களில்
தலையிட்டு வருகிறார். சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருப்பது மாநில
அரசின் கடமை. அதற்கு காவல்துறை அதிகாரிகளும், துறை அமைச்சரும் உள்ளனர்.
ஏற்கெனவே
டிசம்பர் 31-ம் தேதியும், ஜனவரி 1ம் தேதியும் புத்தாண்டை கொண்டாட
புதுச்சேரிக்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் எனவே காவல்துறை,
பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை ஆகிய துறைகளை
ஒருங்கிணைத்து அவர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கை
எடுக்க தலைமை செயலருக்கு உத்தரவிட்டுள்ளேன்.
தற்போது தலைமை செயலர்
பொறுப்பில் இருக்கும் அன்பரசுவும் துறை அதிகாரிகளை அழைத்துப்பேசிஇதுபற்றி
உத்தரவிட்டுள்ளார். காவல்துறை தலைவருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை முடுக்கி
விட உத்தரவிட்டுள்ளேன்.
இந்நிலையில் மாநில நிர்வாகி, புத்தாண்டை
முன்னிட்டு போலீஸ் அதிகாரிகளை அழைத்து கூட்டம் போட்டுள்ளார். அவர் போட்டி
அரசு நடத்துகிறாரா? மாநில அரசின் செயல்பாடுகளில் தலையிட மாநில நிர்வாகிக்கு
உரிமையில்லை.
கருத்து தெரிவிக்க நினைத்தால் எழுத்துப் பூர்வமாக
செயலருக்கும், அமைச்சர்களுக்கும் தெரிவிக்கலாம். ஆனால் மக்களால் தேர்வு
செய்யப்பட்ட அரசு நிர்வாகத்தில் தலையிட உரிமையில்லை.
இதுதொடர்பாக
மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளேன்.
அரசின் தின செயல்பாடுகளை பார்க்கும் பணி அமைச்சர்களுக்குத்தான் உண்டு என
பதில் கடிதமும் அங்கிருந்து வந்திருக்கிறது.
ஆனால் புதுச்சேரி
மாநில நிர்வாகி மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை மதிப்பதில்லை.
யூனியன் பிரதேசத்திற்கான சட்ட விதிகளையும் கடைபிடிப்பதில்லை. தன்னிச்சையாக
செயல்படுகிறார். இது கண்டனத்திற்குரியது.
மாநில அரசை விமர்சனம்
செய்கிறார். அவர் மாநில நிர்வாகியா? எதிர்க்கட்சித் தலைவரா? என புதுச்சேரி
மக்களுக்கு சந்தேகம் வந்துள்ளது. மாநில நிர்வாகியாக பொறுப்பேற்று ஒன்றரை
ஆண்டு ஆகிறது. அவர் மாநில வளர்ச்சிக்கு செய்த பங்கு என்ன? பொருளாதார
முன்னேற்றத்திற்கு செய்த பங்கு என்ன?
அரசு பற்றி குறை கூறுவதும், அதிகாரிகளை அழைத்து பேசுவதையுமே நாள்தோறும் செய்து வருகிறார்.
டெல்லி
நிர்வாகம் வேறு; புதுச்சேரி நிர்வாகம் வேறு. உச்சநீதிமன்றமும் அரசின்
அன்றாட பணிகளில் தலையிட மாநில நிர்வாகிக்கு அதிகாரமில்லை என விளக்கம்
அளித்துள்ளது. எனவே மாநில நிர்வாகியின் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்
காலம் வெகு தொலைவில் இல்லை.
2018-ல் அதிகார மாற்றம் வரும் என
எதிர்க்கட்சி தலைவரைப்போல் மாநில நிர்வாகி பேசுகிறார். இப்படி பேசும் அவர்
எதிர்க்கட்சி தலைவரா? என்ற கேள்வி எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.
மாநில
நிர்வாகி தன்னை உணர்ந்து கடமையை செய்ய வேண்டும். அதிகாரத்திற்கு உட்பட்டு
செயல்பட வேண்டும். அவரவரின் அதிகாரத்திற்கு உட்பட்டு செயல்பட்டால்
பிரச்சினையில்லை என்று கூறினார்.
No comments:
Post a Comment