குஜராத்தில்
மொத்தம் உள்ள 182-ல் 89 தொகுதிகளுக்கு வரும் 9-ம் தேதி முதல்கட்ட தேர்தல்
நடைபெறுகிறது. இதில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 977 பேர்
போட்டியிடுகின்றனர். இதில் 54 பேரின் மனுக்கள் முழுமையாக பூர்த்தி
செய்யப்படவில்லை. மற்ற 923 பேர் தாக்கல் செய்த வேட்பு மனுக்களில்
இடம்பெற்றுள்ள தகவலை ஆய்வு செய்த ஒரு தொண்டு நிறுவனம், ஒரு அறிக்கையை
வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
மொத்த வேட்பாளர்களில் 21 சதவீதம் பேர் அதாவது 198 பேர் தங்களுக்கு ரூ.1
கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இதில்
76 பேர் பாஜக, 60 பேர் காங்கிரஸ், 7 பேர் என்சிபி, 6 பேர் ஆம் ஆத்மி, 2
பேர் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர்கள். 25 சுயேச்சை வேட்பாளர்களும்
இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். மற்றவர்கள் சிறிய கட்சிகளைச்
சேர்ந்தவர்கள்.
இதில் அதிகபட்சமாக ராஜ்கோட்-மேற்கு தொகுதியில்
காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் இந்திராணி ராஜ்யகுருவுக்கு ரூ.141.22 கோடி
சொத்து இருப்பது தெரியவந்துள்ளது. இவர் மாநில முதல்வரும் பாஜக
வேட்பாளருமான விஜய் ருபானியை எதிர்த்து போட்டியிடுகிறார்.
அடுத்தபடியாக
போடாட் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சவுரவ் படேலுக்கு
(முன்னாள் நிதியமைச்சர்) ரூ.123.78 கோடி சொத்து உள்ளது. இந்தப் பட்டியலில்
ரூ.113.47 கோடி சொத்துடன் மற்றொரு பாஜக வேட்பாளரான தன்ஜிபாய் படேல்
(வாத்வான் தொகுதி) 3-ம் இடத்தில் உள்ளார்.
923 வேட்பாளர்களில் 847
பேர் தங்களுடைய வருவாய் ஆதாரத்தைக் குறிப்பிட்டுள்ளனர். இதன்படி, 8 பேரின்
ஆண்டு வருவாய் ரூ.1 கோடிக்கும் அதிகம். ஆண்டு வருவாய் அடிப்படையில்
ரூ.113.47 கோடியுடன் தன்ஜிபாய் படேல் முதலிடம் பிடித்துள்ளார்.
580
பேர் 5, 8, 10, 12-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளனர். எழுத்தறிவு
உள்ளதாக 76 பேரும் படிக்கவில்லை என 17 பேரும் தெரிவித்துள்ளனர். 57 பேர்
பெண்கள். 40 சதவீதம் பேர் (367) 25 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள். 51
சதவீதம் பேர் (473) 41 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள். 82 பேர் 61 -80 வயது
பிரிவினர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment