புளூவேல் விளையாட்டால் பாதிக்கப்பட்டு சென்னைக்கு ஓடி வந்த மேற்கு வங்க
கல்லூரி மாணவரை ரயில்வே போலீஸார் பிடித்தனர், பெற்றோருக்கு அளிக்கப்பட்ட
தகவலை அடுத்து சென்னை வந்த பெற்றோரிடம் மாணவரை போலீஸார் ஒப்படைத்தனர்.
மேற்கு
வங்கத்தில் இருந்து கல்லூரி மாணவர் ஒருவர் புளூவேல் விளையாட்டால்
பாதிக்கப்பட்டு கடந்த சனிக்கிழமை இரவு வீட்டிலிருந்து வெளியேறி ரயிலில்
சென்னைக்கு தப்பி வந்து விட்டதாக ரயில்வே போலீஸாருக்கு அந்த மாநில போலீஸார்
புகைப்படத்துடன் தகவலை அனுப்பினர்.
இதையடுத்து மேற்கு வங்க போலீஸார் அனுப்பிய மாணவரின் புகைப்படத்துடன்
சென்னை ரயில்வே போலீஸார் சென்ட்ரல் வந்த அனைத்து ரயில்களையும்
கண்காணித்தனர். சந்தேகப்படும்படியாக யாராவது சுற்றுகிறார்களா? என ரயில்
நிலையம் முழுவதும் கண்காணித்தனர்.
ஹவுராவில் இருந்து வந்த கோரமண்டல்
எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த ஒரு வாலிபர் சந்தேகப்படும் படியாக சுற்றிக்
கொண்டிருந்தார். அவரைப் பிடித்த போலீஸார் மேற்கு வங்க ரயில்வே போலீஸார்
அனுப்பி வைத்த படத்தை வைத்து ஒப்பிட்டு பார்த்தபோது அதே மாணவர் என்பது
தெரிந்தது.
உடனடியாக அவரை அழைத்துச் சென்ற ரயில்வே பாதுகாப்பு படை
போலீஸார் விசாரித்து சோதனையிட்டபோது புளூவேல் விளையாட்டால் பாதிக்கப்பட்டது
தெரிய வந்தது. விளையாட்டு தொடர்பான படங்களையும் எழுதி வைத்திருந்ததையும்
போலீஸார் கைப்பற்றினர். பிறகு கல்லூரி மாணவருக்கு கவுன்சிலிங்
வழங்கப்பட்டது.
17 வயதான அந்த கல்லூரி மாணவரின் தந்தை மேற்கு
வங்கத்தில் தனியார் கல்லூரி நடத்தி வருகிறார். மாணவர் மீட்கப்பட்டது
குறித்து மேற்கு வங்கத்தில் உள்ள மாணவரின் பெற்றோருக்கு தகவல்
தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் விமானம் மூலமாக சென்னைக்கு
புறப்பட்டு வந்தனர்.
பின்னர் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாரை
சந்தித்த பெற்றோர்களிடம் மாணவரை ஒப்படைத்த அதிகாரிகள் பெற்றோருக்கு அறிவுரை
கூறினர். மாணவருக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டதால் அவர் தற்கொலை
மனப்பான்மையிலிருந்து மாறியதையும், இனி மாணவரை எப்படி பராமரிக்க வேண்டும்
என்பதையும் போலீஸார் அறிவுரையாக சொல்லி மாணவரை பெற்றோருடன் அனுப்பி
வைத்தனர்.
No comments:
Post a Comment