
கேரளாவில்
கட்டாயமாக மதம் மாற்றப்பட்டதாகக் கூறப்பட்ட பெண் ஹாதியா தன்னை யாரும்
கட்டாயப்படுத்தவில்லை எனவும் தான் ஒரு முஸ்லிம் என்றும் அதிரடியாகக்
கூறியிருக்கிறார். கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் கே.எம்.அசோகன். இவரது மகள்
அகிலா.
இவர் முஸ்லிமாக மதம் மாறி ஷபின் ஜகான் என்ற முஸ்லிமைத்
திருமணம் செய்து கொண்டார். அவரது பெயரையும் ஹாதியா என மாற்றிக் கொண்டார்.
முஸ்லிம் இளைஞர்கள் திட்டமிட்டே இந்துப் பெண்களைக் காதலித்து, அவர்களை மதம்
மாற்றுவதாக கேரளாவில் ஒரு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த
முறைக்கு அவர்கள் லவ் ஜிகாத் என்று பெயரும் வைத்திருக்கின்றனர். லவ்
ஜிகாத்தில்தான் அந்தப் பெண் திருமணம் செய்யப்பட்டிருக்கிறார் என்றும்
புகார் கூறி வந்தனர்.
இந்தச் சூழ்நிலையில் தனது மகள் திருமணத்தை
எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் பெண்ணின் தந்தை வழக்குத்
தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்தத் திருமணத்தை
அவசரமாகவும் ரகசியமாகவும் நடந்தி உள்ளதாக சந்தேகம் ஏற்படுகிறது என
குறிப்பிட்டது. மேலும் இந்த விவகாரத்தில் லவ் ஜிகாத் சதி இருக்கலாமோ என்ற
சந்தேகம் எழுகிறது எனவும் கூறி திருமணத்தையும் ரத்து செய்து உத்தரவிட்டது.
இதையடுத்து
அந்தப் பெண்ணின் கணவர் ஷபின் ஜகான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
செய்தார். அதில், ‘‘24 வயதாகும் மேஜரான பெண்ணுக்கு யாரை திருமணம் செய்து
கொள்ள வேண்டும், எந்த மத நம்பிக்கையைப் பின்பற்ற வேண்டும் என்று முடிவு
செய்யும் உரிமை உள்ளது’’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கை உச்சநீதிமன்றம்
விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. ஷபின் ஜகான் சார்பில் மூத்த
வழக்கறிஞர்கள் கபில் சிபல், இந்திரா ஜெய்சிங் ஆகியோர் ஆஜராயினர்.
“நீதிமன்றம் திருமணத்தை ரத்து செய்தது துரதிருஷ்டவசமானது. சம்பந்தப்பட்ட
பெண்ணை சந்திக்க கணவருக்குக் கூட அனுமதி வழங்கவில்லை. அந்தப் பெண்ணை
அழைத்து இந்த நீதிமன்றம் விசாரிக்க வேண்டும். அந்த பெண்ணின் வீட்டை சுற்றி
போலீஸார் உள்ளனர். அவரை சந்திக்க யாரையும் அனுமதிக்கவில்லை” என
கபில்சிபல், இந்திரா ஜெய்சிங் ஆகியோர் வாதிட்டனர். பெண்ணின் தந்தை
சார்பில் மூத்த வழக்கறிஞர் மாதவி திவான் வாதிட்டார். ‘‘ சில சதி வேலைகளால்
அகிலா மனரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளார். பெண்ணை ஆஜர்படுத்த வேண்டும் என்று
நீதிமன்றம் உத்தரவிட்டால் அதில் பெண்ணின் தந்தைக்கு எந்த ஆட்சேபனையும்
இல்லை’’ என்றார்.
இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு
விசாரிக்குமாறு கூறியது உச்சநீதிமன்றம். பல கட்டங்களை கடந்து வந்த
இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும் 27 தேதி மீண்டும் விசாரணைக்கு வர
உள்ளது. இந்நிலையில் ஹாதியாவும் அவரது பெற்றோரும் டெல்லி செல்வதற்காக
கோட்டயம் விமான நிலையம் வந்தனர். அப்போது ஹாதியா இஸ்லாமிய பெண்ணைப் போல
பர்தா அணிந்து வந்திருந்தார். அவரை ஊடகத்தினர் நெருங்க முயற்சித்தனர்.
அப்போது
பாதுகாவலர்களும் பெற்றோரும் ஹாதியாவை விமான நிலையத்தினுள்ளே ஊடகத்தினர்
நெருங்க விடாமல் தள்ளிச் சென்றனர். அவர்களைக் கடந்து ஹாதியா
ஊடகத்தினருக்குக் கேட்கும் படி சத்தமாக, “நான் ஒரு முஸ்லிம். என்னை யாரும்
கட்டாயப்படுத்தவில்லை. நான் என் கணவருடன் சேர்ந்து இருக்க விரும்புகிறேன்”
எனக் கூறினார். இவரது வாக்குமூலம் பல சந்தேகங்களுக்கு விடை அளித்துள்ளது.
இதனிடையே உச்சநீதிமன்ற அறிவுறுத்தல் பேரில் இவ்வழக்கை விசாரித்த தேசிய
புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் ‘ஹாதியா மனம் விரும்பிதான் திருமணம் செய்து
கொண்டுள்ளார்’ என்று கூறியுள்ளனர். 27ம் தேதி இந்த வழக்கு
உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள நிலையில் ஹாதியா இப்படிக்
கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment