ஜெயலலிதா அறையில் சோதனை நடத்தப்பட்டதா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு வருமான வரித்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு வருமான வரித்துறை அதிகாரி அளித்த தகவல்:
''சசிகலாவின் உறவினர்கள் நடத்தி வரும் நிறுவனங்கள் மூலம் வரி ஏய்ப்பு
செய்ததாக பொருளாதார நுண்ணறிவு பிரிவு அளித்த தகவல், ஆவணங்கள் அடிப்படையில்
பல மாதங்களாக கண்காணித்துதான் இந்த சோதனையை நடத்தினோம். இந்த சோதனையில்
70-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரூ.1430
கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், 5 கிலோ தங்கம், ரூ.7 கோடி ரொக்கப் பணம்
கைப்பற்றப்பட்டது.
சோதனையின் அடிப்படையில் 15 வங்கிக் கணக்குகள்
முடக்கி வைக்கப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் சீல் வைக்கப்பட்ட இடங்களில்
மீண்டும் திறந்து விசாரணை நடத்துவோம். கைப்பற்றபட்ட எலக்ட்ரானிக் சாதனம்
மூலம் ,போலி நிறுவனத்தை கண்டுபிடித்துள்ளோம். போலி நிறுவனங்களின் பணப்
பரிமாற்றம் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்.
போயஸ் தோட்டத்தில்
சசிகலா, பூங்குன்றன் அறைகளில் ஆவணங்கள் பதுக்கி வைத்துள்ளதாக கிடைத்த தகவல்
அடிப்படையில், நீதிமன்ற அனுமதியுடன் 5 அறைகளில் சோதனை நடத்தினோம். அதில்
சசிகலாவுக்கு சொந்தமான நான்கு அறைகளும், பூங்குன்றனுக்கு சொந்தமான ஒரு
அறையும் அடங்கும். ஜெயலலிதாவின் அறையில் சோதனை நடத்தவில்லை.
ஐந்து
அறைகளில் நடந்த சோதனையில் 1 லேப்டாப், 2 டேப்லட், ஏராளமான பென் ட்ரைவ்கள்
கைப்பறப்பட்டன. அதை ஆய்வு செய்யும் பணியும், அதில் உள்ள தகவல்களை
சேகரிக்கும் பணியும் நடந்து வருகிறது. இந்த சோதனைக்காக ஐந்து அறைகளின்
சாவியை, இளவரசி மகள் ஷகிலா கணவர் ராஜராஜனிடம் இருந்து வாங்கி சோதனை
நடத்தினோம்.
கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், மற்றவர்களிடம் நடத்தப்பட்ட
விசாரணை அடிப்படையில் தேவைப்பட்டால் நீதிமன்ற அனுமதியுடன் சசிகலா மற்றும்
இளவரசியிடம் சிறைக்குச் சென்று விசாரணை நடத்துவோம். சோதனையின் போது தமிழக
போலீஸார் சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்ததால் துணை ராணுவத்தை அழைக்கும்
அவசியம் ஏற்படவில்லை.
சோதனையில் கிடைத்த தகவல்கள், மற்றவர்களிடம்
நடத்திய விசாரணைகள் அடிப்படையில் சசிகலா குடும்பத்தினர் வெளிநாடுகளில்
முதலீடு செய்திருந்தால் அந்த முதலீடுகள் குறித்தும் விசாரணை நடத்துவோம்,
பினாமி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கான முகாந்திரம் இருக்கிறதா
என்பது குறித்தும் ஆய்வு செய்ய உள்ளோம்.
முன்பெல்லாம் டிரைவர்களோ,
வேலையாட்களோதான் பினாமிகளாக இருப்பார்கள். ஆனால் தற்போது இவர்களே
பினாமிகளாக இருப்பது இல்லை. பினாமிகள் வெளியாட்களாகத்தான் இருக்கிறார்கள்.
அவர்களை கண்டறிவது என்பது தற்போதைய காலத்தில் சிரமம். அதனை உறுதிப்படுத்த
விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.''
இவ்வாறு வருமான வரித்துறை உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment