சூடு பிடித்து விட்ட குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தலில் அதிகமான
பிரச்சாரக்கூட்டங்களில் பிரதமர் நரேந்தர மோடி கலந்து கொள்கிறார். இதுபோல்
எந்த மாநில தேர்தலுக்கும் ஒரு பிரதமர் களம் இறங்கியதில்லை எனக்
கருதப்படுகிறது.
குஜராத் சட்டப்பேரவையின் 182 தொகுதிகளுக்கு வரும்
டிசம்பர் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இருகட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதன்
முடிவுகள் இமாச்சலப்பிரதேச சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளுடன் சேர்த்து
டிசம்பர் 18-ல் வெளியாகிறது. இவற்றில், குஜராத் மாநில சட்டப்பேரவை
தேர்தலில் நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் ஒரு கடுமையான போட்டி
நிகழ்கிறது. காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதாவிற்கும் இடையிலான
நேரடிபோட்டியில் பிரதமர் மோடி முக்கிய அங்கம் வகிக்கிறார்.
இம்மாநிலத்தில் தொடர்ந்து 12 வருடங்களுக்கும் மேலாக முதல்வராக இருந்தவர்
மோடி. இதனால், அவருக்குப்பின் குஜரத்தில் முக்கியத் தலைவராக பாஜகவில்
எவரும் வளரவில்லை. இதன் காரணமாக அதன் வெற்றிக்கான முழுப்பொறுப்பும் பிரதமர்
மோடி மீது மீண்டும் விழுந்திருக்கிறது. இதை ஏற்று தேர்தல் அறிவிப்பிற்கு
முன்பாகவே அவர் பத்திற்கும் மேற்பட்டப் கூட்டங்களை குஜராத்தில் நடத்தி
விட்டார். ஒரு சிறிய இடைவெளிக்கு பின் நவம்பர் 2 முதல் தன்
பிரச்சாரக்கூட்டங்களை துவக்குகிறார்.
குஜராத்தில் புகழ்பெற்ற
அக்ஷர்தாம் கோயிலின் 25 ஆவது ஆண்டுவிழா நவம்பர் 2-ல் கொண்டாடப்பட உள்ளது.
இதன் ’விளக்கு ஒளிகள் திருவிழா’வை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். இதை
தொடர்ந்து குஜராத்தின் தேர்தல் பிரச்சாரக்
கூட்டங்களிலும் மோடி பேசத்
துவங்குகிறார். தொடர்ந்து அடுத்த 40 நாள் வரையிலும் அவருக்கு 50
கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இத்துடன், குஜராத் மாநிலங்களின்
மூலைமுடுக்குகளிலும் பெரிய திரைகள் அமைத்து பிரதமர் மோடியின் பிரச்சாரங்கள்
ஒளிபரப்பப்பட உள்ளது. கடந்த இருதேர்தல்களிலும் இவ்வாறு மோடியின்
பிரச்சாரம் செய்யப்பட்டது.
இதுபோல், குஜராத் மாநில தேர்தலின்
முழுப்பொறுப்பும் பிரதமர் மோடியின் சுமையாக வருவது முதன்முறையல்ல. இதற்கு
முன் 2007-ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலிலும் மோடியே முக்கியப்
பிரச்சாரகராக இருந்தார். அதை அடுத்த சட்டப்பேரவை தேர்தலிலும் சுமார் 175
பிரச்சாரக் கூட்டங்களில் மோடி பேசியிருந்தார். இதனால், கிடைத்த வெற்றி
மோடியை பிரதமராக பாஜக முன்னிறுத்த உதவி இருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment