தூய்மையான குடியிருப்புக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சமும், இரண்டாம்
பரிசாக ரூ.1.5 லட்சமும் வழங்கப் போவதாக மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது.
தமிழகத்திலேயே
மதுரை மாவட்டத்தில்தான் டெங்கு பாதிப்பும், மரணங்களும் அதிகமாக உள்ளன.
மதுரை அரசு மருத்துவமனையில் நாளொன்றுக்கு சராசரியாக 650 உள்நோயாளிகள்
காய்ச்சலுக்கு சிகிச்சை பெற அனுமதிக்கப்படுகின்றனர்.
குறிப்பாக மாநகராட்சி பகுதியில் கொசு உற்பத்தியும், டெங்கு பாதிப்பும்
அதிகமாக இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை வந்த சுகாதாரத் துறை
அமைச்சர் விஜயபாஸ்கரும், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனும் அதிருப்தி
தெரிவித்தனர். அதனால், மாநகராட்சியில் டெங்குவை ஒழிக்க வீடு, வீடாக மாவட்ட
ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்து வருகின்றனர்.
குப்பைகளை
அப்புறப்படுத்தாமலும், தண்ணீர் தேங்கி கொசு உற்பத்திக்கு ஏதுவான நிலையிலும்
உள்ள வீடுகளுக்கு ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரையும், வணிக
வளாகங்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும், மருத்துவமனைகளுக்கு 1 லட்சம் ரூபாய்
வரையும் அபராதம் விதித்து வருகின்றனர். ஆனாலும், கொசு ஒழிந்தபாடில்லை.
டெங்கு பாதிப்பும் குறைந்தபாடில்லை. மாநகராட்சியில் 50 சதவீத துப்புரவு
பணியாளர்கள் பற்றாக்குறையால் குப்பைகளை அகற்றும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது வடகிழக்கு பருவமழையும் தொடங்கிவிட்டதால் டெங்கு பாதிப்பு தொடர
வாய்ப்புள்ளது. அதனால், டெங்கு காய்ச்சலை ஒழிக்கவும், பொதுமக்களுக்கு
விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கொசு உற்பத்தியில்லாமல் சுத்தமாக வீடுகளை
வைத்திருக்கும் குடியிருப்புகளுக்கு பரிசு வழங்கும் திட்டத்தை மதுரை
மாநகராட்சி அறிவித்துள்ளது.
மதுரை ஆண்டாள்புரம் அக்ரினி குடியிருப்பு
வசுதாரா வளாகத்தில் மாநகராட்சி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி சார்பில் கொசு
ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், மாநகராட்சி
ஆணையர் அனீஷ் சேகர் கூறியதாவது:
நாம் தினமும் அரை கிலோ முதல் ஒரு
கிலோ வரை குப்பைகளை உருவாக்குகிறோம். குப்பைகளை கையாளுவது மாநகராட்சிக்கு
சவாலாக இருக்கிறது. ஒவ்வொருவரும் உருவாக்கும் குப்பைகளுக்கு அவரவர்
பொறுப்பேற்க வேண்டும். மட்கும் குப்பை மற்றும் மட்காத குப்பை என தரம்
பிரித்து மட்கும் குப்பைகளை பச்சை நிற கூடைகளிலும், மட்காத குப்பைகளை நீல
நிற கூடைகளிலும் வழங்க வேண்டும். மட்கும் குப்பைகளில் இருந்து உரம்
தயாரித்து வீட்டுத் தோட்டங்களில் பயன்படுத்தலாம். பயோகேஸ் தயாரிக்கலாம்.
மேலும் மட்காத குப்பைகளை மறுசுழற்சி செய்யலாம். இதற்கு குப்பைகள் உற்பத்தி
ஆகும் இடத்திலேயே பிரித்து வழங்க வேண்டும்.
குப்பைகளை
தரம் பிரித்து வழங்குவதில் சிறப்பான பங்களிப்பு வழங்குவதுடன்,
சுற்றுப்புறத்தில் கொசு உற்பத்தியாகாமல் சிறப்பாக தூய்மையை பராமரிக்கும்
குடியிருப்போர் நலச்சங்கங்கள், முக்கிய தெருக்கள், முக்கியப் பகுதியை
சார்ந்தவர்களுக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சம், 2-வது பரிசு ரூ.1.5 லட்சம்,
3-வது பரிசு ரூ.1 லட்சம் வழங்கப்படும். இந்த பரிசுகள் ஜனவரியில் நடைபெறும்
ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் வழங்கப்படும். தற்போது மாநகராட்சி சார்பில்
டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு முழு
ஒத்துழைப்பு தரும் வகையில் வீடுகளில் குடிநீரை பாதுகாப்பாக மூடி வைப்பதுடன்
குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்து குடியிருப்புக்களை சுற்றி தண்ணீர்
தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில்
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மண்டல மேலாளர் கரிகாலன், செயற்பொறியாளர் சேகர்,
சுகாதார அலுவலர் ராஜ்கண்ணன், பொதுமக்கள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment