தமிழ் மீது உள்ள அளவற்ற காதலால்தான் இந்தியை நாங்கள் எதிர்க்கிறோம் என்று மு.க.ஸ்டாலின் புதிய விளக்கம் கூறியுள்ளார்.
திராவிடர்
கழகம் சார்பில் இந்தி-சமஸ்கிருத திணிப்பு எதிர்ப்பு மாநாடு சென்னை
வேப்பேரியில் பெரியார் திடலில் நேற்று நடந்தது. இந்த மாநாட்டுக்கு
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். தி.மு.க. செயல்
தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலை
வகித்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், திராவிடர்
இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்ட பல தலைவர்கள்
பங்கேற்றனர்,
'பெரியார் கொட்டிய போர் முரசு' என்ற நூலை மு.க.ஸ்டாலின் வெளியிட, இந்திய
கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் பெற்றுக்கொண்டார்.
மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "1968-ம் ஆண்டு ஜனவரி 23-ந் தேதியை
தமிழினம் ஒருபோதும் மறக்காது. அன்றைய தினம்தான் இந்தி எதிர்ப்பு போராட்டம்
நடைபெற்று, வெற்றி பெற்றது. தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு விடை
கொடுத்து, இரு மொழி கொள்கை தொடங்கப்பட்டது. இந்தி எதிர்ப்புப் போராட்டம்
வெற்றி பெற்ற பொன் விழா ஆண்டு கொண்டாட்டத்தின், தொடக்க நிகழ்வாக இந்த
மாநாடு அமைந்திருக்கிறது.
இந்தியை எதிர்ப்பது கோபத்தால் அல்ல. தமிழ் மீது உள்ள அளவற்ற காதலால் தான்.
என் மொழியில் வளரவிடுங்கள், என் மொழியிலேயே படிக்கவிடுங்கள்
என்பதற்காகத்தான் போராடுகிறோம். தமிழ் மொழிக்காக திராவிட இயக்கத்தின்
போராட்டம் உணர்வு மிக்கது.
தமிழ் மொழிக்கான போராட்டத்தில் இருந்து தி.மு.க., திராவிட இயக்கங்கள்
ஒருபோதும் பின்வாங்காது. மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னர் இந்தி
திணிப்பு தீவிரமாக இருக்கிறது.
புதிதாக வெளியிடப்பட்ட 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளில்
தேவநாகரி எழுத்து அச்சடிக்கும் கொடுமை, பாராளுமன்றத்தில் இந்தியில் உரை,
சி.பி.எஸ்.இ., கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 10-ம் வகுப்பு வரை இந்தி
கட்டாய பாடம், சென்னை மெட்ரோ ரெயில் நிலையத்தில் இந்திக்கு முன்னுரிமை என
இந்தி திணிப்பு கொடுமை நடந்து வருகிறது.
பா.ஜ.க.வின் இந்த கொடுமைக்கு, தமிழகத்தில் உள்ள குதிரை பேர ஆட்சி துணை
போகிறது. தலைக்கு மேலே வருமான வரி சோதனை என்ற கத்தி தொங்குவதால் மத்திய
அரசுக்கு தமிழகத்தில் இருக்கும் ஆட்சியாளர்கள் அடங்கிப்போகிறார்கள். இந்தி
ஒழிக, தமிழ் வாழ்க என்ற முழக்கத்தோடு தான் தி.மு.க. தலைவர் கருணாநிதி
தன்னுடைய பொதுவாழ்வை தொடங்கினார்.
தமிழுக்காக போராடி உயிர் நீத்த ராஜேந்திரன் என்ற மாணவனுக்கு, சிதம்பரம்
பல்கலைக்கழகத்தில் சிலை உள்ளது. நாட்டிலேயே வேறு எந்த பல்கலைக்கழகத்திலும்
மாணவனுக்கு சிலை இல்லை. திணிக்கப்படும் இந்தி, பறிபோகும் மாநில சுயாட்சி
இவை அனைத்துக்கும் முடிவு கட்ட இந்த மாநாடு உதவியாக இருக்கும். இந்தி
திணிப்பை முறியடிக்க நாம் அனைவரும் உறுதி ஏற்போம்," என்றார்.
No comments:
Post a Comment