துணை ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் சார்பில் எதிர்க்கட்சிகளால்
நிறுத்தப்பட்ட கோபால கிருஷ்ண காந்தியை ஆதரிக்க ஐக்கிய ஜனதா தளம் முடிவு
செய்துள்ளது.
துணை
ஜனாதிபதியாக உள்ள ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் மாதத்தில்
நிறைவடைய உள்ளது. இதனால் அப்பதவிக்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி
நடைபெறுகிறது. அன்றைய தினமே வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது.
தேர்தலில்
பாஜக சார்பில் மத்திய அமைச்சராக இருந்த வெங்கையா நாயுடுவும்,
எதிர்க்கட்சிகளின் சார்பில் காந்தியின் பேரனான கோபால கிருஷ்ண காந்தியும்
போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் ஊழலில் சிக்கிய பீகார் துணை
முதல்வரும் லாலுவின் மகனுமான தேஜஸ்வி யாதவை பதவி விலக நிதிஷ்குமார்
கோரியும் அவர் பதவி விலக வில்லை. இதனால் தான் விலகுவதாக நிதிஷ்குமார்
அறிவித்துவிட்டு விலகினார்.
இதைத் தொடர்ந்து பீகாரின் முதல்வராக
நிதிஷ்குமார் மீண்டும் பதவியேற்க பாஜக ஆதரவு கரம் நீட்டியது. அதன்பேரில்
அவரும் பதவியேற்றார். துணை முதல்வராக பாஜகவைச் சேர்ந்த சுஷில்குமார் மோடி
பதவியேற்றுக் கொண்டார். தற்போது பீகாரில் பாஜக ஆதரவுடன் நிதிஷ்குமார் ஆட்சி
அமைந்துள்ளது.
இந்த சூழலில் துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக
வேட்பாளர் வெங்கையா நாயுடுவுக்கு தங்கள் கட்சி ஆதரிக்காது என்று
நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின்
பொதுச் செயலாளர் கே.சி.தியாகி கூறுகையில், குடியரசு துணை தலைவர் தேர்தலில்
பாஜக வேட்பாளர் வெங்கையாவை நாங்கள் ஆதரிக்கப் போவதில்லை. எதிர்க்கட்சிகள்
சார்பில் நிறுத்தப்பட்டுள்ள கோபால கிருஷ்ண காந்திக்கு ஆதரவளிக்க முடிவு
செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
கடந்த 17-ஆம் தேதி நடைபெற்ற
ஜனாதிபதி தேர்தலில் பாஜக சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் ராம்நாத்
கோவிந்துக்கு ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment