தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற ஜெயலலிதா விதிமுறைகள் போட்ட
நிலையில் அது ஏற்றுக் கொள்ளப்படாவிட்டாலும், ஜெயலலிதா மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்ட பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
மத்திய
அரசு கொண்டு வந்த தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் என்பது தமிழக அரசு தனது
திட்டத்தை தாரை வார்ப்பதற்கு சமம் என்று அறிமுகப்படுத்தப்பட்ட போதே அபாய
மணி ஒலிக்கப்பட்டது. தமிழகத்தில் அனைத்து குடும்பங்களுக்கும் பொது
வினியோகத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசின் உணவுப்
பாதுகாப்புத் திட்டப்படி கிராமப்புறங்களில் 75 சதவீத மக்களுக்கும்,
நகர்ப்புறங்களில் 50% மக்களுக்கும் மட்டும் தான் உணவு தானியங்களை வழங்க
முடியும் என்ற நிலை நிலவியது.
தமிழகம் வேகமாக நகரமயமாகும் மாநிலம் என்பதால் மத்திய அரசின் திட்டப்படி
50.55 சதவீத மக்களுக்கு மட்டும் தான் உணவு தானியங்களை வழங்க முடியும்.
அதனால் தான் உணவுப் பாதுகாப்பு சட்டத்தை, தமிழகத்திற்கு முழுமையாக
பயனளிக்கும் திட்டமாக மாற்றியமைக்க வேண்டும் என்று ஜெ. அரசும், அரசியல்
கட்சிகளும் வலியுறுத்தி வந்தன.
ஜெயலலிதா எதிர்த்த திட்டம்
தமிழகத்தின்
சுயாட்சி உரிமைக்கு வைக்கப்பட்ட வேட்டு என்று தேசிய உணவுப் பாதுகாப்புத்
திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா கடுமையாக எதிர்த்து வந்தார். 2011ம் ஆண்டு
முதல்வராக பதவியேற்ற பின்னர் 20.12.2011 அன்று அப்போதைய பிரதமர் மன்மோகன்
சிங்குக்கு எழுதிய கடிதத்தில், இந்தியா போன்று கூட்டாட்சி தத்துவம்
கடைபிடிக்கப்படும் நாடுகளில் மாநில அரசுகள் தான் மக்களுடன் நேரடியாகவும்,
நெருக்கமாகவும் தொடர்பு வைத்துள்ளன. இத்தகைய சூழலில் மக்களுக்கான
நலத்திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு
வழங்கப்பட வேண்டும். மாறாக மாநில அரசுகளின் அதிகார எல்லையை ஆக்கிரமிக்கவோ,
அத்தகைய தோற்றத்தை ஏற்படுத்தவோ மத்திய அரசு முயலக்கூடாது என ஜெயலலிதா
கூறியிருந்தார்.
மாற்றம் செய்யப்படவில்லை
பிரதமர்
நரேந்திர மோடியிடம் வழங்கிய மனுக்களிலும், உணவுப் பாதுகாப்பு சட்டத்தில்
உறுதியளிக்கப்பட்டதை விட அதிக உணவு தானியங்களை தமிழகம் ஏற்கனவே பெற்று
வரும் நிலையில், அதே அளவு தானியங்களை தொடர்ந்து வழங்க மத்திய அரசு
உறுதியளிக்க வேண்டும். நகர்ப்புறங்களில் வாழும் மக்களில் அனைவருக்கும்
இத்திட்டப்படி உணவு வழங்கப்பட வேண்டும். இத்திட்டத்திற்கான மத்திய அரசின்
மானியம் 3 ஆண்டுகளுக்கு பதிலாக 10 ஆண்டுகளுக்கு வழங்கப்பட வேண்டும் என
ஜெயலலிதா வலியுறுத்தியிருந்தார்.
அரசிதழில் வெளியீடு
தமிழக
அரசின் கோரிக்கைகள் எதையும் மத்திய அரசு ஏற்றுகொள்ளவில்லை. ஆனால் ஜெயலலிதா
மருத்துவமனையில் இருந்த போது இந்த திட்டத்திற்கு எந்த ஆட்சேபனையும்
சொல்லாமல் தமிழக அரசு அப்படியே ஏற்றது. தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தை
மத்திய அரசு அறிவித்தது போலவே ஏற்று அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால்
இது அரசாணையில் மட்டுமே இடம் பெற்றுள்ளதாகவும், வழக்கம் போல பொது விநியோகத்
திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
இதுவும் அப்படியா?
ஆனால் நீட் தேர்வு வராது என்று சொல்லிக் கொண்டிருக்கும் வேளையிலேயே நீட்
தேர்வு நடத்தப்பட்டது, மீத்தேன் எடுக்கும் திட்டம் திமுக காலத்தில்
அறிவிக்கப்பட்டது என்று எல்லாவற்றிற்கும் காரணம் சொல்லும் அரசு கொஞ்சம்
கொஞ்சமாக தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தை மறைமுகமாக செயல்படுத்துமோ என்ற
அச்சம் தான் மிஞ்சியுள்ளது.
No comments:
Post a Comment