ஜனாதிபதி தேர்தலில் தமிழகத்தில் ஆளும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான
அதிமுக அரசும், அக்கட்சியின் இன்னொரு அணியான ஓ.பி.எஸ். தரப்பும் பாஜகவுக்கு
ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அனைத்து
விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன்
அளித்துள்ள பேட்டியில், "காவிரி மேலாண்மை வாரியம், நதி நீர் பங்கீட்டு
ஒழுங்காற்றுக்குழு அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும்
தொடர்ந்து ஏற்க மறுத்து வருவதால் தமிழகம் பாலைவனமாக மாறி வருகிறது. சுமார் 5
லட்சத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு, விவசாயிகள், தொழிலாளர்கள் வேலை,
வருவாய் இழந்து அகதிகளாக, அண்டை மாநிலங்களுக்கு வெளியேறி வருகின்றனர்.
தமிழக
நலனுக்கு எதிராக உரிமைகள் பறிபோவதற்கு காரணமாக உள்ள மத்திய அரசிற்கு
கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழக அரசியல் கட்சிகள் ஜனாதிபதி தேர்தலை
புறக்கணிக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் பா.ஜ.க., தமிழகத்தில் அ.இ.அ.தி.மு.க., தி.மு.க.,
இடதுசாரி கட்சிகள், ஓ.பி.எஸ் அணி உள்ளிட்ட கட்சிகளிடம் ஆதரவு கேட்பது
அதிர்ச்சி அளிக்கிறது. ஆதரவளிக்க அ.இ.அ.தி.மு.க., ஓ.பி.எஸ். அணி உள்ளிட்ட
கட்சிகள் முன் வந்திருப்பது வேதனையளிக்கிறது.
ஜெயலலிதாவுக்கு துரோகம்
அதிமுக பாஜக வேட்பாளருக்கு ஆதரவளித்தால் தமிழக விவசாயிகளுக்கும்,
ஜெயலலிதாவுக்கும் இழைக்கும் துரோகமாகும். தமிழக மக்கள் மன்னிக்க
மாட்டார்கள். தமிழக மக்களின் நலன் கருதி ஆதரவு அளிப்பதை கைவிட வேண்டும்.
தமிழக அழிவை பொருட்படுத்தாத மத்திய அரசு
கர்நாடகாவில் சட்டசபைத் தேர்தலில் பாதிப்பு வந்துவிடும் என்பதற்காக
உச்சநீதிமன்ற உத்தரவை மீறி, ஒரு மாநிலம் அழிவதை கூட பொருட்படுத்தாமல்
கர்நாடக மாநிலத்திற்கு ஆதரவாக காவேரி பிரச்சனையில் மத்திய அரசு
செயல்படுகிறது.
பாஜக வேட்பாளரை கர்நாடகம் ஆதரிக்காது
கர்நாடகாவில் உள்ள எம்பிக்கள், எம்எல்ஏக்கள் பாஜகவை ஆதரித்து வாக்களிக்கும்
நிலை இல்லை. தமிழ்நாட்டில் அந்த வாய்ப்பை அதிமுக மூலமாக பெறுவதற்கு பாஜக
ஈடுபட்டுள்ளது.
தமிழகம் தனிமையில் கிடக்கிறது
கர்நாடகாவில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து மத்திய அரசை காவிரிப்
பிரச்சனையில் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கிறது. தமிழ்நாடு
தனிமைப்பட்டு கிடக்கிறது.
காவேரி மேலாண்மை வாரியம் வேண்டும்
இந்த நிலையில், ஜனாதிபதி தேர்தலை மையமாக வைத்து ஆளும் அதிமுக அரசு, காவேரி
மேலாண்மை வாரியம் அமைத்தே தீர வேண்டும் என்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும்.
அதனை ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பே செயல்படுத்தி காட்ட வேண்டும்.
முதல்வர் உத்தரவாதம் தர வேண்டும்
அந்த உத்தரவாதத்தை பெறுவதற்காவது தயாராக இருக்கிறாரா எடப்பாடி பழனிச்சாமி.
இதனை அதிமுக தமிழக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இன்று அவர் பிரதமரை
சந்திக்கப் போகிறார். பிரதமரை சந்திக்கும்போது. இதற்கான உத்தரவாதத்தை
பெறுவாரா?
தமிழகத்துக்கு துரோகம்
தமிழக மக்களின் வாக்குகளை மறைமுகமாக எம்எல்ஏக்கள் போடுகின்றனர். மக்களின்
வாக்குகளை அதிமுக மட்டுமே முடிவு எடுத்து செயல்படுத்துவது என்பது தமிழக
மக்களுக்கு செய்யும் துரோகம்.
மக்கள் மன்னிக்கமாட்டர்கள்
அதிமுக ஆதரவளித்தால் தமிழக விவசாயிகளுக்கும், ஜெயலலிதாவிற்கும் இழைக்கும்
துரோகமாகும். தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள். தமிழக மக்களின் நலன்
கருதி முதல்வர் பழனிச்சாமி ஆதரவு அளிப்பதை கைவிட வேண்டும்." என்று
கூறியுள்ளார் பாண்டியன்.
No comments:
Post a Comment