டைம்ஸ் நவ்- மூன் டிவி இணைந்து நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் இருந்த 
வீடியோவில் இருந்தது நான்தான். ஆனால் அதில் பேசியது என்னுடைய குரலே அல்ல 
என்று மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் விளக்கமளித்தார்.
ஜெயலலிதா
 மறைவுக்கு பின்னர் கட்சி இரண்டாக பிரிந்தது. இதைத் தொடர்ந்து 
எம்எல்ஏ-க்கள் விலைபோக கூடுவர் என்ற அச்சத்தால் சசிகலா அவர் தரப்பு 122 
எம்எல்ஏ-க்களை கூவத்தூரில் சிறை பிடித்தார்.
அதைத் தொடர்ந்து எம்எல்ஏ-க்கள் 8 நாள்களுக்கு பின்னர் சட்டசபைக்கு 
சென்று நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்றனர். எடப்பாடி பழனிச்சாமி 
பெரும்பான்மை பலத்தை நிரூபித்து ஆட்சி அமைத்தார்.
இந்நிலையில் டைம்ஸ் நவ்- மூன் டிவி ஆகியன இணைந்து எம்எல்ஏ-க்கள் சரவணன், 
சூலூர் கனகராஜ் ஆகியோரின் குதிரை பேரத்தில் ஈடுபட்டதை போன்ற காட்சிகளை 
வீடியோவாக நேற்று வெளியிட்டது. இதனால் தமிழக அரசியலில் பெரும் புயலே 
கிளம்பியது.
இதையடுத்து மதுரையில் இருந்து இன்று சென்னை வந்த எம்எல்ஏ சரவணன் முதல்வர் 
எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து விளக்கம் அளித்தார். இதைத் தொடர்ந்து 
பன்னீர்செல்வம் வீட்டுக்கு சென்று அவரிடம் விளக்கம் அளித்தபின் 
செய்தியாளர்களுக்கு சரவணன் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டது பழைய 
வீடியோவாகும். அதில் உள்ளது நான்தான் . ஆனால் அதில் இடம்பெற்றது என்னுடைய 
குரல் அல்ல. என்னுடைய பழைய வீடியோவில் வேறு யாரோ போலியாக 
பேசியிருக்கின்றனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர் மீது வழக்கு தொடருவேன் 
என்றார்.

No comments:
Post a Comment