அதிமுக எம்எல்ஏக்களிடம் பணபேரம் நடந்ததாக எழுந்த புகாரை அடுத்து
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் சிபிஐ, வருமானவரித்துறை,
சட்டசபை செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் இந்த ஆணையை
பிறப்பித்துள்ளது. வழக்கு விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்து
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டசபையில் கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி கொண்டு வரப்பட்ட முதல்வர்
கே.பழனிசாமி அரசு மீதான நம்பிக்கைத் தீர்மானம் செல்லாது என அறிவிக்கக்
கோரி மு.க.ஸ்டாலி்ன் உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்கு
தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணை ஜூலை 11ஆம் தேதிக்கு தள்ளி
வைக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் கூவத்தூரில் எம்எல்ஏக்களுக்கு கோடிக்கணக்கில் பணம்,
தங்கம் கொடுக்கப்பட்டதாக எம்எல்ஏ சரவணன் பேசிய வீடியோ வெளியானது.
இதனையடுத்து சிபிஐ விசாரணை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின்
தாக்கல் செய்தார். அந்த கூடுதல் மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி தமிழக முதல்வர் கே.பழனிசாமி அரசுக்கு ஆதரவாக
கொண்டு வரப்பட்ட நம்பிக்கைத் தீர்மானம் வெளிப்படையாக, நேர்மையாக
நடைபெறவில்லை. சபாநாயகர் அனைத்து விதிகளையும் மீறி முதல்வர் கே.பழனிசாமி
அரசு கொண்டு வந்த தீர்மானத்தை வெற்றி பெற வைத்துள்ளார்.
நான் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும், அதிமுகவில் உள்ள
ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்களும் ரகசிய வாக்கெடுப்பு நடத்த
வலியுறுத்தியபோதும் அதை சபாநாயகர் ஏற்கவில்லை.
அவர் நடுநிலைமையுடன் செயல்படவில்லை. எனவே சட்டசபையில் ஜனநாயக மரபுகளைக்
காப்பாற்ற, அந்த நம்பிக்கைத் தீர்மானம் செல்லாது என அறிவித்து புதிதாக
வாக்கெடுப்பு நடத்த எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் தொடர்ந்த
வழக்கு இந்த நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் கடந்த ஜூன் 12ஆம் தேதி சில தனியார் செய்தி சேனல்கள், வீடியோ
ஆதாரங்களை வெளியிட்டன.
அதில் மதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ எஸ்.எஸ்.சரவணன், "முதல்வர்
கே.பழனிசாமி அரசு கொண்டு வந்த நம்பிக்கைத் தீர்மானம் வெற்றி பெறுவதற்காக
அதிமுக எம்எல்ஏக்களுக்கு ரூ.2 கோடி முதல் ரூ.6 கோடி வரையிலும் லஞ்சம்
கொடுக்கப்பட்டது. அதேபோல அதிமுக ஆதரவு எம்எல்ஏக்களான கருணாஸ், தனியரசு,
தமீமுன் அன்சாரி ஆகியோருக்கு ரூ. 10 கோடி வரை லஞ்சம் கொடுக்கப்பட்டது"
என்று கூறியுள்ளார்.
நான் ஏற்கெனவே தொடர்ந் துள்ள வழக்குக்கு அதிமுக எம்எல்ஏ சரவணனின் இந்த
வீடியோ ஆதாரம் முக்கியமான சாட்சியமாகும். எனவே அதிமுக
எம்எல்ஏ.க்களுக்கும், ஆதரவு எம்எல்ஏ.க்களுக்கும் லஞ்சமாக வழங்கப்பட்ட பணம்
மற்றும் தங்க நகைகள் குறித்து சிபிஐ மற்றும் வருவாய் குற்றப்
புலனாய்வுத்துறையின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
எனவே ஏற்கெனவே நாங்கள் தொடர்ந்த வழக்கில் சிபிஐ மற்றும் வருவாய்
புலனாய்வுத் துறையையும் எதிர்மனுதாரர்களாக சேர்த்து, அந்த தனியார்
டிவிக்களின் வீடியோ ஆதாரங்களைக் கைப்பற்றி அது தொடர்பாக முழுமையாக
விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிபிஐ
, வருமானவரி புலனாய்வுத்துறை, சட்டசபை செயலாளர் ஆகியோர் பதிலளிக்க
நோட்டீஸ் அனுப்பியது. ஜூன் 23 அனைவரும் பதிலளிக்க வேண்டும் என்று கூறி
வழக்கை ஒத்தி வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
No comments:
Post a Comment