ஊழல் வழக்குகளுக்கு பயந்தே பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை அதிமுக
ஆதரிக்கிறது என திமுகவின் செய்தி தொடர்பாளர் டிகேஎஸ். இளங்கோவன் எம்.பி ஒன்
இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
ஜூலை 17ஆம் தேதி, நாட்டின் 15ஆவது ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல்
நடக்கவுள்ளது. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி, ராம்நாத் கோவிந்த்தை
வேட்பாளராக முன்னிறுத்தி உள்ளது. எதிர்க்கட்சிகள் இணைந்து முன்னாள்
சபாநாயகர் மீரா குமாரை வேட்பாளராக நிறுத்தியுள்ளது.
இதுகுறித்து திமுகவின் செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவனிடம் ஒன்
இந்தியா கேட்டதற்கு, ''ராம்நாத் கோவிந்த் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில்
பணியாற்றியவர். இந்துத்துவ சிந்தனைகளைத் தூக்கிப் பிடிப்பவர். அவர்
ஜனாதிபதியாவது நாட்டு நலனுக்கு நல்லதல்ல.
ஆகையால், மீரா குமாரையே நாங்கள் ஆதரிக்கிறோம்.மீரா குமார்
மதச்சார்பின்மையில் நம்பிக்கை உள்ளவர். அதனால் மதச்சார்பின்மையை விரும்பும்
அனைத்துக்கட்சிகளும் மீரா குமாரையே ஆதரிப்பார்கள்'' என கூறினார்.
மேலும், அதிமுக, பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை ஆதரித்துள்ளதே என
கேட்டதற்கு, ''அதிமுகவின் அமைச்சர்கள் மேல் பல்வேறு ஊழல் புகார்கள் உள்ளன.
மேலும் அவர்களது வீட்டில் வருமான வரிச்சோதனை நடத்தப்பட்டது. அதில் பல
ஆவணங்கள் மத்திய அரசின் கையில் உள்ளது. இதற்கெல்லாம் பயந்துதான் அதிமுகவின்
அனைத்து அணிகளும் பாஜக வேட்பாளரை ஆதரிக்கின்றது'' என தெரிவித்தார்.
No comments:
Post a Comment