இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்ற வழக்கில் சிறையில் உள்ள டிடிவி தினகரனுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
அதிமுகவின் முடக்கப்பட்ட தேர்தல் ஆணைய சின்னத்தை பெற புரோக்கர் மூலம் லஞ்சம் தர முயன்றதாக அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடந்த ஏப்ரல் 26ம் தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தினகரனுக்கு உதவியதாக அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவும் கைது செய்யப்பட்டார்.
டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்ட இவர்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனு இன்று 4வது முறையாக விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் தர முயன்றதாக குற்றம் சாட்டப்படுகிறது, ஆனால் போலீசார் இது தொடர்பாக எந்த அதிகாரியையும் அடையாளம் காணாதது ஏன் எனக் கேட்டனர்.
இதனையடுத்து டெல்லி திஸ் ஹசாரே நீதிமன்ற நீதிபதி பூனம் சவுத்ரி, தேர்தல் ஆணைய அதிகாரிகள் தொடர்பு குறித்து இது வரை விசாரணை நடத்தாதது ஏன் என்று கேள்வி எழுப்பினார். மேலும் தினகரனை சிறையில் வைக்க வேண்டும் என்பது தான் நோக்கமா என்றும் கேட்டுள்ளார்.
இதனால் டிடிவி. தினகரன், மல்லிகார்ஜூனா இருவருக்கும் ஜாமீன் அளிப்பதாக நீதிபதி கூறினார். இருவரும் ரூ.5 லட்சம் செலுத்தி சொந்த ஜாமீனில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் வெளியே சென்று சாட்சியங்களை கலைக்கக் கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இருவரும் தங்களது பாஸ்போட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும், போலீசாரிடம் தகவல் தெரிவிக்காமல் வெளியூர் செல்லக் கூடாது என்ற நிபந்தனைகளையும் நீதிமன்றம் விதித்துள்ளது.
No comments:
Post a Comment