குறைந்த கட்டணத்தில் மக்கள் விமான பயணம் செய்யும், மத்திய அரசின்
'உதான்' திட்டத்தின்படி ஓசூர், சேலம், நெய்வேலிக்கு விமான சேவை தொடங்க
தமிழக அரசுடன் மத்திய மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம்
ஒப்பந்தம் செய்துள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தலைமைச் செயலகத்தில் இந்த
ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்,
குறைவான கட்டணத்தில் சாதாரண மக்களும் விமான பயணம் மேற்கொள்வதற்கு ஏதுவாக
விமான சேவை வழங்குவது ஆகும்.
தமிழகத்தில் முதல் கட்டமாக ஓசூர், சேலம் மற்றும் நெய்வேலி ஆகிய இடங்களில்
இத்திட்டத்தின் கீழ் விமானச் சேவைகள் தொடங்குவதற்கு நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பெங்களூருக்கு பக்கம்
ஒசூரிலிருந்து தளி செல்லும் சாலையில், பெலகொண்டப்பள்ளி என்ற கிராமத்தில்
இந்த விமான நிலையம் அமைந்துள்ளது. பெங்களூர் நகரின் தெற்கு பகுதியில்
அதிகப்படியான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்துள்ள எலக்ட்ரானிக்
சிட்டியில் இருந்து இது சுமார் 35 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. டிராபிக்
நெரிசலற்ற அந்த சாலையில் 30 நிமிடங்களில் ஏர்போர்ட்டை அடைந்துவிடலாம்.
டிராபிக் நெரிசல்
அதேநேரம் பெங்களூர் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையமோ, எலக்ட்ரானிக்
சிட்டி பகுதியில் இருந்து 80 கி.மீ தொலைவிலுள்ளது. டிராபிக் இல்லாத
நேரங்களில் கூட இங்கிருந்து விமான நிலையம் செல்ல 2 மணி நேரமாவது
தேவைப்படும். எனவே கெம்பேகவுடா ஏர்போர்ட்டுக்கு சென்று அடைவதற்குள்ளாக,
அதேநபர் ஒசூர் ஏர்போர்ட்டை பயன்படுத்தினால், சென்னையே சென்று சேர்ந்துவிட
முடியும்.
தமிழ் சாப்ட்வேர் இன்ஜினியர்கள்
பயோக்கான், விப்ரோ, இன்போசிஸ் போன்ற பல பெரும் நிறுவனங்கள் எலக்ட்ரானிக்
சிட்டியில் உள்ளனர். அதன் தலைவர்கள், சாப்ட்வேர் நிறுவன
தொழிலதிபர்களுக்கும், தெற்கு பெங்களூரில் பெருமளவில் வசிக்கும் தமிழக
சாப்ட்வேர் இன்ஜினியர்கள் மற்றும் பல்துறை சார்ந்த தொழிலதிபர்களுக்கும்
ஒசூர் விமான நிலையம் வரப்பிரசாதம். இவர்களால் ஒசூர் விமான நிலையம் பிக்-அப்
ஆகும் என்பது நிச்சயம்.
கிருஷ்ணகிரி மாவட்ட வளர்ச்சி
மேலும் ஒசூர் ஏர்போர்ட்டால் கிருஷ்ணகிரி மாவட்ட தொழில் வளர்ச்சிக்கு ஊக்கம்
கிடைக்கும். குறிப்பாக ஒசூர் நகரிலுள்ள தொழில்நிறுவனங்கள் வளரும். ஒசூர்
தொழில்நிறுவன வளர்ச்சிக்கு உதவும் என்பதால்தான் பெங்களூரின் வடக்கே தூரமாக
கெம்பேகவுடா ஏர்போர்ட்டை அமைக்க, கர்நாடக அரசு ஒப்புதல் வழங்கியதாக
கூறப்படுவதுண்டு. இனிமேல் ஒசூரிலுள்ள டிவிஎஸ் உள்ளிட்ட பெரும்
நிறுவனங்களின் அதிபர்கள் தங்கள் விமான தேவைக்காக பெங்களூர் செல்ல
வேண்டியதில்லை.
விவசாயத்திற்கும் நல்லது
ஒசூரில் உள்ள தொழில்துறை சார்ந்த நிறுவனங்கள் மட்டுமின்றி, ரோஜா,
மாம்பழங்கள் போன்ற விவசாயம் சார்ந்த உற்பத்தி பொருட்கள் மற்றும் உணவு
பதனிடும் தொழிற்சாலைகள் வளர்ச்சிக்கும், இந்த விமான நிலையம் பெருமளவுக்கு
உதவும் என்கிறார்கள் தொழில்துறை வல்லுநர்கள். ட்ரூஜெட் என்ற விமான சேவை
நிறுவனம்தான் ஒசூருக்கு விமானங்களை இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment