கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏ-க்கள் பேரம் பேசப்பட்டது தொடர்பாக எழுந்த
புகாரை தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லும் விதமாக கனிமொழி
இன்று தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை இன்று 1 மணிக்கு சந்திக்கவுள்ளதாக
தகவல்கள் வெளியாகியுள்ளன.
டைம்ஸ் நவ்- மூன் டிவி ஆகிய இணைந்து
அதிமுக எம்எல்ஏ-க்கள் சரவணன், கனகராஜ் ஆகியோர் மீது ஸ்டிங் ஆபரேஷன்
நடத்தியது. அதில் வெளியான வீடியோவில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னர்
கூவத்தூரில் தங்கவைக்கப்பட்ட 122 எம்எல்ஏ-க்களுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம்
வழங்கப்பட்டதாக அவர்கள் பேசியது போல் வெளியானது.
மேலும் கூட்டணி கட்சி எம்எல்ஏ-க்களான கருணாஸ், தமிமுன் அன்சாரி,
தனியரசு ஆகியோருக்கும் தலா ரூ.10 கோடி வழங்கப்பட்டதாகவும் அந்த வீடியோ
மூலம் தகவல் வெளியானது. இதுகுறித்து சட்டசபையில் விவாதிக்க முக ஸ்டாலின்
கோரினார். எனினும் சபாநாயகர் அனுமதிக்கவில்லை.
இதைத் தொடர்ந்து எம்எல்ஏக்களுக்கு பேரம் பேசப்பட்ட விவகாரத்தை சிபிஐ அல்லது
வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தை கொண்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று
சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக முறையீடு செய்தது. மேலும் ஆளுநரிடமும்
புகார் மனு அளிக்கப்பட்டது. ஆனால் ஆளுநரோ இந்த புகார் குறித்து
சபாநாயகரும், தலைமை செயலாளரும் விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
மேலும் இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளதால் அது எந்த நடவடிக்கையும்
எடுக்க இயலாது என்பதாலேயே ஆளுநர் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்ததார் என்று
ஆளுநர் அலுவலகம் வட்டாரங்கள் தெரிவித்தன.
எனினும் இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு செல்ல
திமுக முடிவு செய்தது. அதன்படி திமுக எம்.பி. கனிமொழி இன்று மதியம் 1
மணிக்கு நஜீம் ஜைதியை சந்தித்து புகார் மனு அளிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
அப்போது ஆதாரங்களையும் கனிமொழி சமர்ப்பிப்பார் என்று தெரிகிறது.
No comments:
Post a Comment