மூன்று மாதமாக காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த ராம மோகன்
ராவ் இன்று தொழில் முனைவோர் மேம்பாட்டு இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஓ. பன்னீர் செல்வம் முதல்வராக இருந்த போது சஸ்பெண்ட் செய்யப்பட்ட ராமமோகன்
ராவ், இப்போது எடப்பாடி பழனிச்சாமி முதல்வரான பின்னர் மீண்டும் பதவியில்
அமர்த்தப்பட்டுள்ளார்.
கடந்த 2016 ஜூன் மாதம் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பலரையும் பின்னுக்கு தள்ளி
தலைமை செயலர் பதவி பெற்றார் ராவ் மோகன ராவ். சீனியாரிட்டி அடிப்படையில்
20வது இடத்தில் இருந்த ராவ் பதவி பெற்றது பலரையும் ஆச்சரியத்தில்
ஆழ்த்தியது. மூத்த அதிகாரிகள் பலரையும் தாண்டி ராவ் தலைமை செயலர் பதவி
பெற்ற போதே சர்ச்சைகள் உருவாகியது.
உயர் பணமதிப்பு நீக்க அறிவிப்புக்கு பிறகு போயஸ்கார்டனுக்கு
நெருக்கமான சேகர் ரெட்டியின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு
நடத்தினர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையைல் அப்போது தலைமைச் செயலாளராக
இருந்த ராமமோகன் ராவுடனான தொடர்பு அம்பலமானது.
வருமான வரி ரெய்டு
ராமமோகன் ராவ் வீடு மற்றும் அலுவலகத்தில் கடந்த டிசம்பர் 21ஆம் தேதி வருமான
வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. அவரது மகன், சம்பந்தி, உறவினர்கள்,
நண்பர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. பணம், தங்க நகைகள்
கைப்பற்றப்பட்டது. ரூ.30 லட்சம் புதிய ரூபாய் நோட்டுகள் மற்றும் ஆவணங்கள்
கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. இருப்பினும் அவர் மீது வழக்கு எதுவும்
பதிவு செய்யவில்லை.
ராமமோகன்ராவ் சஸ்பெண்ட்
தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக தலைமைச் செயலாளர் ஒருவரிடம் வருமான
வரித்துறை சோதனை நடைபெற்றுள்ளது. எனவே அவரை அப்பதவியிலிருந்து நீக்க
கோரிக்கைள் வலுத்தன. இதனைத் தொடர்ந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
அவருக்குப் பதில், புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன்
நியமிக்கப்பட்டார்.
காத்திருப்போர் பட்டியல்
தமிழக அரசின் 78 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக வருமான வரித்துறையினர்
தலைமைச் செயலகத்திற்குள் நுழைந்து சோதனை நடத்தியது அதிர்ச்சி அலைகளை
உருவாக்கியது. ராம மோகன் ராவ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்றும் கோரிக்கை எழுந்தது. இதனையடுத்தே ராம மோகன் ராவ் காத்திருப்போர்
பட்டியலில் வைக்கப்பட்டார்.
கைது நடவடிக்கை இல்லை
வருமான வரித்துறையினர் அளிக்கும் அறிக்கையை வைத்து அவர் மீது கிரிமினல்
வழக்கு பதிவு செய்யப்படும். சேகர் ரெட்டி, அவரது கூட்டாளிகள் கைது
செய்யப்பட்டது போல அவருடன் நெருக்கமாக இருந்த ராம மோகன் ராவ் கைது
செய்யப்படுவார் என்று தகவல் வெளியானது. ஆனால் தான் குற்றமற்றவர் என்று
ஊடகங்களை அழைத்து பேட்டி கொடுத்தார் ராமமோகன்ராவ்.
புதிய பதவி
இந்த நிலையில் மூன்று மாதமாக காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த
ராம மோகன் ராவ் இன்று தொழில் முனைவோர் மேம்பாட்டு இயக்குனராக
நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கூடுதல் தலைமை செயலர் அந்தஸ்தில் பணியிடம்
ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுவரை தொழில்முனைவோர்
மேம்பாட்டு துறையின் இயக்குனராக இருந்த ராஜாராமனை நில நிர்வாக துறையின்
முதன்மை செயலாளராக நியமித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
டிடிவி தினகரன் உத்தரவா?
ஐஏஎஸ் அதிகாரிகள் விசயத்தில் மூக்கை நுழைத்தார் டிடிவி தினகரன். சில ஐஏஎஸ்
அதிகாரிகளை மாற்றவும் உத்தரவிட்டாராம். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி கண்டு
கொள்ளாமல் இருந்தார். தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை மாற்றிவிட்டு
மீண்டும் ராமமோகன் ராவை தலைமைச் செயலாளர் பதவியில் அமரவைக்க திட்டமிட்டு
காய் நகர்த்தினார். மத்திய பாஜக அரசின் சிபாரில் வந்தவர் என்பதால் கிரிஜா
வைத்தியநாதனை மாற்ற எடப்பாடி பழனிச்சாமி சம்மதிக்கவில்லை. எது எப்படியோ ராம
மோகன் ராவ் தனது லாபியை பயன்படுத்தி மீண்டும் பதவியில் அமர்ந்து விட்டார்
என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment