உள்ளாட்சி தேர்தலை நடத்த இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்
என்பது குறித்து மாநில தேர்தல் ஆணையம், தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
தமிழக உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் பதவி காலம் கடந்த செப்டம்பர்
மாதத்துடன் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் தேர்தல் நடத்த
இருந்தது. இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு
வெளியிட்டது. இந்த அறிவிப்பில் எஸ்.டி. பிரிவினருக்கு போதிய இட ஒதுக்கீடு
வழங்கப்படவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை ஹைகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன்,
உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு, தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை முறையாக
பின்பற்றி பிறப்பிக்கப்படவில்லை என்றும், எனவே தேர்தல் அறிவிப்பை ரத்து
செய்வதாகவும் கூறினார்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஹைகோர்ட்டில் தமிழ்நாடு மாநில தேர்தல்
ஆணையம், தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு
உயர்நீதிமன்ற டிவிசன் பெஞ்சில் விசாரணையில் உள்ளது.
இந்த நிலையில், நீதிபதி கிருபாகரன் முன்பு உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனுவை
நிராகரித்ததை எதிர்த்து தொடரப்பட்ட கோர்ட்டு அவமதிப்பு வழக்கு இன்று
காலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது உள்ளாட்சி தேர்தல் நடத்த ஏன் இவ்வளவு
கால தாமதம் ஏற்பட்டுள்ளது எனவும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி
எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் சார்பில் மதியம் 2.15 மணிக்கு விளக்கம்
அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். பிற்பகலில் மாநில தேர்தல் ஆணையம்
சார்பில் வழக்கறிஞர் நெடுஞ்செழியன் ஆஜராகி, உள்ளாட்சி தேர்தலை
நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார். இதனையடுத்து வழக்கு
விசாரணை ஏப்ரல் 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
No comments:
Post a Comment