தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது முதல்வர்
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி கவிழும் என்று முன்னாள் அமைச்சர்
மாஃபா பாண்டியராஜன் ஆரூடம் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைந்த பிறகு, கட்சி இரண்டாக உடைந்தது. சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என
இரண்டாக உள்ளது. சசிகலா அணிக்கு 122 எம்எல்ஏ-க்களும், ஓபிஎஸ் அணிக்கு 10
எம்எல்ஏ-க்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சசிகலா தரப்போ தங்களுக்கு பெரும்பாலான எம்எல்ஏ-க்கள் ஆதரவு
உள்ளதாகவும், ஓபிஎஸ் தரப்பினரோ பொதுமக்கள் எங்கள் பக்கம் உள்ளார்கள் என
மாறி மாறி மார்தட்டி கொண்டன.
ரகசிய வாக்கெடுப்பு
தமிழக சட்டசபையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தி அதன் மூலம் எடப்பாடி
பழனிச்சாமி அரசை கவிழ்க்க ஓபிஎஸ் அணி எத்தனையோ முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அதிமுக உள்கட்சி பூசலை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முயல்வதாக ஆளும்
கட்சி குற்றம்சாட்டியது.
அதிமுக அரசுக்கு சிக்கல்
இந்த நிலையில் தமிழக அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும் நேரத்தில் அதிமுக
அரசுக்கு சிக்கல் ஏற்படும் என்றும் அந்த அரசு கவிழும் என்றும் கருத்து
நிலவுகிறதது. இந்த பட்ஜெட் நேரத்தில் ஆட்சியை கவிழ்ப்பதற்கான அனைத்து
உள்ளடி வேலைகளும் நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது.
அதிமுக உடையவில்லை
அதிமுகவில் மௌன புரட்சி செய்து வெளியே வந்த ஓ.பன்னீர் செல்வத்தால் அதன்
சின்னத்தையும் முடக்க முடியவில்லை, கட்சியையும் உடைக்க முடியவில்லை. மேலும்
அதிமுக பொருளாளர் தாம் என்று கூறிக் கொள்ளும் அவரால் கட்சியின் வங்கிக்
கணக்குகளையும் முடிக்க முடியவில்லை.
தீவிர முயற்சி
இருப்பினும் தொடர்ந்து எடப்பாடி அரசுக்கு குடைச்சல் கொடுக்கும் வேலையில்
ஓபிஎஸ் அணி தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. தற்போது பட்ஜெட் கூட்டத்
தொடரின்போது எடப்பாடி அரசைக் கவிழ்க்க முயற்சிகள் நடப்பதாக சில நாட்களாக
பேச்சு அடிபடுகிறது.
அச்சாரம் இட்ட மாஃபா
சென்னை பாடியில் நடைபெற்ற அய்யா வைகுண்டர் தேரோட்டத்தில் கலந்து கொண்ட
மாஃபா பாண்டியராஜன், தமிழக பட்ஜெட்டின்போது வரலாற்று சிறப்பு வாய்ந்த
நிகழ்வுகள் நடைபெறும். மேலும் எடப்பாடி அரசுக்கு சிக்கல் ஏற்படும் என்று
தெரிவித்திருந்தார்.
எப்போது நிகழும்...
தமிழக பட்ஜெட்டின்போது 10 எம்எல்ஏ-க்களை அதிமுகவில் இருந்து விலகுவதற்கோ
அல்லது அணி மாறுவதற்கோ அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருவதாக சொல்கிறார்கள்.
ஒரு வேளை 10 எம்எல்ஏ-க்கள் பழனிச்சாமி அருக்கு அளித்து வந்த ஆதரவை
திரும்பப் பெற்றுக் கொண்டு திமுகவுக்குச் சென்றால் திமுக ஆட்சி அமைக்காமல்
மறுதேர்தல் நடத்த வலியுறுத்தலாம்.
பாஜகவுக்கு அவப்பெயர்
அருணாசலப் பிரதேசம், உத்தரகண்ட்டில் ஆட்சியைக் கவிழ்த்து ஜனாதிபதி ஆட்சியை
அமல்படுத்தியதால் பாஜகவுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்
தமிழகத்திலும் ஜனாதிபதி ஆட்சி அமைக்க வழிகோலினால் அதுவும் பாஜ தலையில்
விழுந்து விடும் என்பதால் இரு அதிமுக அணிகளையும் அரவணைக்கும் போக்கையே பாஜக
கடைபிடிக்கும் என்று தெரிகிறது.
அதிமுகவுக்கு தேர்தல்
இதற்கிடையே அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவின் நியமனம் குறித்து விளக்கம்
கோரிய நோட்டீஸுக்கு துணை பொதுச் செயலாளர் தினகரன் பதில் அளித்ததை தேர்தல்
ஆணையம் மறுப்பு தெரிவித்துவிட்டது. இதனால் சசிகலா நியமனத்தை தேர்தல் ஆணையமே
ரத்து செய்துவிடும் என்று தெரிகிறது. இதனால் அதிமுகவுக்கு தேர்தல்
விரைவில் நடைபெறும் என்றும் ஓபிஎஸ் அணியினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.
இப்படி ஆளுக்கு ஒரு எதிர்பார்ப்புடன் அதிமுகவினர் காத்துள்ளனர். என்ன நடக்கப் போகிறதோ!


No comments:
Post a Comment