போர்க்குற்ற விசாரணைக்கு இலங்கை அரசு கேட்கும் கால நீட்டிப்பு
கொடுக்கக் கூடாது என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செனட் உறுப்பினர்
பேராசிரியர் சரசுவதி வலியுறுத்தியுள்ளார்.
போர்க் குற்ற விசாரணை தொடர்பாக இலங்கை அரசு 2019ஆம் ஆண்டு வரை கால
நீட்டிப்பு கோரியுள்ளது. இந்த நீட்டிப்பை இலங்கைக்கு வழங்கக் கூடாது என்று
தமிழகத்தில் உள்ள தபெதிக பொதுச் செயலாளர் கு. ராமகிருஷ்ணன், விடுதலை
சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் தொடர்ந்து குரல்
கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நாடு கடந்த தமிழீழ
அரசாங்கத்தின் செனட் உறுப்பினர் பேராசியர் சரசுவதி இலங்கைக்கு கால
நீட்டிப்பு வழங்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர்
மேலும் கூறியதாவது:
போர்க் குற்ற விசாரணைக்கு இலங்கை அரசு மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம்
வேண்டும் என கோரியுள்ளது. அப்போதுதான் தாங்கள் நினைத்துக் கொண்டிருக்கின்ற
செயல்களை செய்ய முடியும் என்று கோரிக்கை வைத்திருக்கிறது.
அந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா போன்ற
நாடுகள் இன்னும் 2 ஆண்டுகள் கால நீடிப்பு கொடுக்கலாம் என்ற நிலைக்கு
வந்திருக்கிறார்கள். அப்படி கால நீடிப்பு தருவது என்பது எந்த விதத்திலும்
தமிழர்களுக்கு தீர்வாக அமையாது.
எனவே, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கால நீடிப்பு தரக் கூடாது என்று
வலியுறுத்துகிறது. மேலும், ஈழப் பிரச்சனையை ஐ.நா.வின் பொதுச் சபைக்கு
கொண்டு செல்ல வேண்டும் என்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரிக்க
வேண்டும்.
இவ்வாறு பேராசிரியர் சரசுவதி வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக இது தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர்
உருத்திரகுமாரன் ஸ்கைப் மூலமாக தமிழக மற்றும் இந்திய தலைவர்களுக்கு
வேண்டுகோள் விடுத்து உரையாற்றினார்.
No comments:
Post a Comment