ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குச்சாவடிகள் அனைத்தும் சிசிடிவி, வெங்
கேமரா மூலம் கண்காணிக்க முடிவு செய்துள்ளதாகவும், 29 வாக்குச்சாவடிகள்
பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர்
தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ஆம் தேதி
இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தொகுதியில் திமுக, ஓபிஎஸ் அதிமுக, சசிகலா
அதிமுக, பாஜக, மேட் பேரவை தீபா, நாம் தமிழர் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி,
இந்து மக்கள் கட்சி, என் தேசம் என் உரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகள்
போட்டியிடுகின்றன.
இந்த தேர்தலில் பாஜக, விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக ஆகியன
போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளன. இதனிடையே ஆர்.கே.நகர் தொகுதி
இடைத் தேர்தலுக்கான தேர்தல் நடத்தும் அதிகாரியாக சென்னை மாநகராட்சி துணை
ஆணையர் (வடக்கு) பிரவீன் பி.நாயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று மாலை தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் செய்தியாளர்களுக்கு
பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ஆர்.கே.நகரில் 3 பறக்கும் படை
மற்றும் 3 நிலை கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது 22
குழுக்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆர்.கே. நகர் தொகுதியில்
2.62 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்குச்சாவடிகள் அனைத்தும் சிசிடிவி, வெப் கேமரா மூலம் கண்காணிக்க முடிவு
செய்யப்பட்டுள்ளது. 1638 வாக்குச்சாவடி ஊழியர்கள் தேர்தல் பணியில்
ஈடுபட்டுள்ளனர். ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா குறித்து அதிக புகார்கள்
வருகின்றன. அதுகுறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. 29 வாக்குச்சாவடிகள்
பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment