அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர்
6. இஸ்லாமிய பொருளியல் தகவல் மையங்கள்
இஸ்லாமிய வங்கி முறை, முதலீடு, பொருளியல் தொடர்பான தகவல் மையம் ஒன்றை ஜித்தா இஸ்லாமிய டெவலெப்மெண்ட் வங்கி ஏற்படுத்தியுள்ளது. இத்தகவல் மையம் இஸ்லாமிய வங்கி தகவல் முறை, இஸ்லாமிய பொருளியல் பற்றிய நூல்கள், முஸ்லிம் நிபுணர்களின் தகவல், தொடர்புவழி
இஸ்லாமிய வங்கி முறை, முதலீடு, பொருளியல் தொடர்பான தகவல் மையம் ஒன்றை ஜித்தா இஸ்லாமிய டெவலெப்மெண்ட் வங்கி ஏற்படுத்தியுள்ளது. இத்தகவல் மையம் இஸ்லாமிய வங்கி தகவல் முறை, இஸ்லாமிய பொருளியல் பற்றிய நூல்கள், முஸ்லிம் நிபுணர்களின் தகவல், தொடர்புவழி
விபரங்கள் போன்றவற்றை உள்ளடக்கியதாகும்.
7. சட்டத்துறை நூல்கள்
இஸ்லாமிய பொருளியல் துறையை மையப்படுத்தி சட்டத்துறை நூல்கள் வெளிவந்துள்ளது. Fiqh Academy of the Organization of Islamic Countries, Fiqh Academy of India, Islamic Ideology Council of Pakistan, Association of Islamic Banks ஆகிய நிறுவனங்கள் இத்துறை பற்றிய மார்க்கத் தீர்ப்புகள் தழுவிய நூல்களை வெளியிட்டுள்ளன. குவைத்தின் மார்க்க விவகார வக்ஃப் அமைச்சகம் வெளியிட்டுள்ள ஃபிக்ஹ் கலைக்களஞ்சியம், இஸ்லாமிய பொருளியல் சார்ந்த பல விஷயங்களை உள்ளடக்கியுள்ளது. லண்டனிலுள்ள Institute of Islamic Banking and Insurance இது தொடர்பாக இரு கலைக்களஞ்சியங்களை (Encyclopedia) இதுவரை வெளியிட்டுள்ளது. பஞ்சாப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஒரு கலைக்களஞ்சியத்திலும், இஸ்தான்பூலில் வெளியிடப்பட்டுள்ள கலைக்களஞ்சியத்திலும் இஸ்லாமிய பொருளியல் தொடர்பான விவகாரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
8. கணக்குப் பரிசோதனை தரங்கள்
இஸ்லாமிய பொருளியல் வளர்ச்சியின் ஓர்அங்கமாக இஸ்லாமிய முதலீட்டு நிறுவனங்கள் ஒன்றிணைந்து கணக்குப் பரிசோதனை சபை ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக Accounting and Auditing Organization for Islamic Financial Institutions உருவாக்கப்பட்டு பஹ்ரைனில் சிறப்பாக இயங்கிவருகின்றது. இந்நிறுவனம் மிகத் திறமைமிக்க துறைசார்ந்தோரைக் கொண்டு கணக்குப் பரிசோதனை தரநிலைகளை இஸ்லாமிய வங்கிகளுக்கும், முதலீட்டு நிறுவனங்களுக்கும் ஏற்றதாய் அமைத்துள்ளது. 1994இல் அது நூல் வடிவம் பெற்று பின்னர் 1997இல் புதிய பல தலைப்புக்களுடன் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. இதே வேளை லண்டனிலுள்ள Institute of Islamic Banking and Insurance இஸ்லாமிய வங்கிகளுக்கான கணக்குப் பரிசோதனை முறை நூல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
9. துறைசார்ந்தோர்அமைப்பு
இத்துறையின் ஒரு வளர்ச்சியாக முஸ்லிம் பொருளியல் நிபுணர்களைக் கொண்ட ஓர்அமைப்பு International Association of Islamic Economics எனும் பெயரில் அமைக்கப்பட்டு காலத்திற்குக் காலம் கருத்தரங்குகளையும், மாநாடுகளையும் ஒழுங்கு செய்வதில் ஈடுபட்டு வருவதோடு, ஆய்வுப் பத்திரிக்கை ஒன்றையும் வெளியிட்டு வருகின்றது.
10. கருத்தரங்குகள், மாநாடுகள்
ஒவ்வொரு வருடமும் இத்துறைசார்ந்த கருத்தரங்குகளும், மாநாடுகளும் உலகளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டு மேலாய்வுகளுக்கு வாயில்கள் திறந்து விடப்படுகின்றன. பிரச்சினைகளுக்கு முடிவு காணப்படுகின்றது. சந்தேகங்களுக்கு தெளிவு காணப்படுகின்றது.
11. இஸ்லாமிய வங்கி முறையும், முதலீடும்
இஸ்லாமிய பொருளியல் சிந்தனை தோற்றம் பெற்றதன் பயனாக இஸ்லாமிய முதலீட்டு முறைகளுடன் கூடிய வங்கி முறைகள் அமுலுக்கு வந்துள்ளன. நூற்றுக்கணக்கான முதலீட்டு நிறுவனங்களும், வங்கிகளும் தோன்றியுள்ளதுடன் நாளுக்கு நாள் உலகின் பல பாகங்களிலும் இத்தகைய நிறுவனங்கள் தோற்றம் பெற்ற வண்ணம் இருக்கின்றன.
இஸ்லாமிய பொருளியலின் சிந்தனை, அதன் செயல்முறை அதனால் ஏற்பட்ட பல்வேறு நன்மைகள் பற்றியெல்லாம் இது வரை ஆராய்ந்த அதே வேளை இது பற்றிய ஒரு மதிப்பீட்டையும் செய்ய வேண்டியது காலத்தின் தேவையாகும்.
இஸ்லாமிய முதலீட்டு நிறுவனங்கள், வங்கிகளின் நடவடிக்கைகள் குறித்தும், உலகப் பொருளாதாரத்தின் மீது அது ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்தும் அறிஞர்கள் மதிப்பீடு செய்தனர். இதன் விளைவாக 1984இல் லண்டனில் ஒரு மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1986இல் வியன்னாவிலும், வாஷிங்டனிலும், ஜெனீவாவிலும் இது குறித்த மாநாடுகள் நடைபெற்றன. பின்னர் 1988இல் லண்டனிலும், 1992இல் இஸ்லாமாபாத்திலும் மாநாடுகள் நடைபெற்றன. அதே வேளை இக்காலப்பகுதியில் பல்வேறு கட்டுரைகள் எழுதப்பட்டும், ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டும், நூல்கள் வெளியிடப்பட்டும் உள்ளன. இத்தகைய மதிப்பீட்டுப் பணியில் ஈடுபட்ட அறிஞர்களுள் முஹம்மத் அக்ரம் கான் குறிப்பிடத்தக்கவர். இத்தகைய மதிப்பீடு இஸ்லாமிய முதலீட்டு நிறுவனங்களிடம் உள்ள சில குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டிநிற்கின்றன. அவையாவன:
1. குறுகிய பார்வை
இது வரையும் இஸ்லாமிய பொருளியல், அதன் அகன்று விரிந்த உட்பிரிவுகள் உள்ளடக்கப்படாமல், முராபஹஹ், முஷாரக்கஹ், முழாரபஹ், இஜாரஹ் போன்ற சிலவற்றுடன் மட்டுப்படுத்தப்பட்டு எழுதப்பட்டும், பேசப்பட்டும் வருகின்றது. இதனால் இஸ்லாமிய பொருளியல் என்பது வட்டியில்லா வங்கி முறை என அர்த்தம் கொள்ளப்படுகின்றது. பாரம்பரிய வட்டி வங்கிகளுடன் தொடர்புள்ள முஸ்லிம் செல்வந்தர்களை வட்டியில்லா அமைப்பின் பக்கம் திருப்பும் உடனடி ஆரம்ப முயற்சியாகவே இது அமைந்துள்ளது. இதனால் சில செல்வந்தர்கள் மாத்திரம் வட்டி என்ற பாவத்திலிருந்து விடுபட்டனரே தவிர நடுத்தர மக்களும், ஏழைகளும் அதிலிருந்து இன்னும் விடுபடவில்லை. எனவே இஸ்லாமிய பொருளியல், அதன் உட்பிரிவுகள் முழுமையாக உள்வாங்கப்பட்ட நிலையில் இஸ்லாமிய முதலீட்டு நிறுவனங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டிய தேவையுள்ளது. இதற்கான ஆய்வுகள் அறிஞர்களால் செய்யப்பட வேண்டும். சமூகத்தின் சகல தரத்தில் உள்ளவர்களுக்கும் இஸ்லாமிய பொருளியல் ஏற்புடையது, நடைமுறைச் சாத்தியமானது என்பது அப்போது மாத்திரமே நிரூபிக்கப்படும்.
2. முறை பற்றிய குழப்பம்
இஸ்லாமிய பொருளியல் என்பது முற்றிலும் வித்தியாசமான தனிப்பெரும் தத்துவங்களையும், நெறிமுறைகளையும் உள்ளடக்கியதாகும். இது பற்றிய ஆழமான அறிவில்லாதோர் மூலம் இஸ்லாமிய முதலீட்டு அமைப்புக்களை நடத்த முடியாது. பெரும்பாலான இஸ்லாமிய முதலீட்டு நிறுவனங்களில் உயர்மட்டம் முதல் அடி மட்டம் வரையிலான சகல ஊழியர்களும், போர்ட் மெம்பர்ஸ் கூட இத்துறையில் போதிய ஞானமற்ற நிலையிலுள்ளனர். குறிப்பாக முடிவெடுக்கும் அதிகாரமுள்ள நிர்வாகத்தில் உள்ளோர் வட்டி அடிப்படையிலான பாரம்பரிய வங்கிகளில் வேளை பார்த்து அந்த சிந்தனைகளுடனும், பயிற்சிகளுடனும் இருப்பவர்கள். எனவே இஸ்லாமிய பொருளியல் பற்றி அறை குறை ஞானத்துடனும் பாரம்பரிய வங்கிகளின் அறிவு, பயிற்சிகளுடனும் இஸ்லாமிய முதலீட்டு நிறுவனங்கள் இயக்கப்படுவதால் பெரும்பாலான கொடுக்கல் வாங்கல்கள் அவர்களுக்கும் தெளிவில்லாமல், வாடிக்கையாளர்களுக்கும் தெளிவில்லாமல் நடந்தேறுகின்றன. உதாரணமாக: இஜாரஹ்வின் அடிப்படையை தெரிந்த நிலையில், அதன் உட்பிரிவுகள் பற்றிய தெளிவு இல்லாமல் நடைபெறும் இஜாரஹ் உடன்படிக்கைகள் பல. இதன் காரணமாக இத்தகைய உடன்படிக்கைகள் பல பிழைகளை சுமந்த வண்ணம் நடைபெறுகின்றன. இதன் விளைவாக சிலநேரம் நிறுவனங்களுக்கும், வாடிக்கையாளர்களுக்குமிடையே பல பிரச்சினைகள் எழுகின்றன. எனவே இஸ்லாமிய முதலீட்டு நிறுவனங்களைச் சார்ந்தோர் இஸ்லாமிய பொருளியல் தொடர்பாக நன்கு அறிவும், பயிற்சியும் முஸ்லிம் அறிஞர்களால் பெறவேண்டியுள்ளனர்.
3. ஷரீஆ விதிகளைப் பேணுவதில் அசிரத்தை
முராபஹஹ், முழாரபஹ், முஷாரக்கஹ், இஜாரஹ் போன்ற உடன்படிக்கைகள் சில பல வேளைகளில் ஊழியர்களின் அசிரத்தை காரணமாக அவற்றின் ஷரீஆ விதிகளில் சில பேணப்படாத நிலையில் நடந்தேறுகின்றன. ஆவணங்களில் கையொப்பம் இடுவதன் மூலம் இவ்வுடன்படிக்கைகள் பரிபூரணம் அடைவதில்லை. ஒவ்வோர்உடன்படிக்கையும் அதற்குரிய சகல விதிகளும் முழுமையாக சரியாக பின்பற்றப்பட்ட நிலையில் நடைபெறுவதை நிறுவனங்கள் உறுதி செய்தல் வேண்டும்.
4. குறைவான விழிப்புணர்வு
இஸ்லாமிய பொருளியல் பற்றி குறிப்பாக முஸ்லிம்களுக்கும், பொதுவாக சகல மதத்தவர்களுக்கும் விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. இதனால் இஸ்லாமிய முதலீட்டு நிறுவனங்கள் நடைமுறைப் படுத்திவரும் முழாரபஹ், முராபஹஹ், முஷாரக்கஹ் இஜாரஹ் போன்றவை கூட சமூக மட்டத்தில் பிழையாக விமர்சிக்கப்படுகின்றன. பாரம்பரிய வங்கிகளின் வட்டி வீதத்தை விட இஸ்லாமிய முதலீட்டு நிறுவனங்களின் வட்டி வீதம் அதிகம் என்றெல்லாம் விமர்சிக்கப்படுகின்றது. எனவே மக்களுக்கு இஸ்லாமிய பொருளியல் குறித்து விழிப்புணர்வு ஊட்டுவதையும் ஒரு முக்கிய பணியாக ஆக்கிக்கொள்வது முதலீட்டு நிறுவனங்கள் முன்னுள்ள ஒரு முக்கிய பொறுப்பாகும்.
எந்தவொரு அறிவுத்துறையும் காலத்துக்குக் காலம் வளர்ச்சியடையாமலில்லை.
இஸ்லாமிய பொருளியலும் இதில் விதிவிலக்கன்று. தொடர்ந்து ஆய்வுகள்
மேற்கொள்ளப்பட வேண்டும். விமர்சனங்கள் செய்யப்பட வேண்டும். இப்பொருளியல்
தத்துவங்களில் பலவற்றுக்கு உருவம் கொடுக்கும் நிறுவனங்களாக இஸ்லாமிய
முதலீட்டு நிறுவனங்கள் திகழ வேண்டும். அறிஞர்களின் மார்க்கத் தீர்ப்புக்களை
அவை ஏற்க வேண்டும். ஆக்கபூர்வ விமர்சனங்களை புறம்தள்ளாது, அவை தம்
வளர்ச்சிக்கு உந்து சக்தியென உள்வாங்கி தம்மை செப்பனிட்டுக்கொள்ள வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக அல்லாஹ்வைப் பயந்த நிலையில்
ஒவ்வோர்உடன்படிக்கையும் நடைபெற வேண்டும்.
நன்றி : சமூகநீதி அறக்கட்டளை
No comments:
Post a Comment