அதிமுகவின் பொதுச்செயலராக நியமிக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் தர
சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் அதிரடியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த
நோட்டீஸ் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவிடம் இன்று வழங்கப்பட்டது.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுக பொதுக் குழுவில் இடைக்கால பொதுச்செயலராக
சசிகலா நியமிக்கப்பட்டார். இதற்கு அதிமுக தொண்டர்கள் கடும் எதிர்ப்பு
தெரிவித்தனர்.
இதையடுத்து அதிமுக சசிகலா, ஓபிஎஸ் என இரண்டு அணிகளாகப் பிளவுபட்டது.
அத்துடன் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அணியின் 10
எம்.பிக்கள் கடந்த 16 ஆம் தேதி தேர்தல் ஆணையத்திடம் ஒரு மனுவை அளித்தனர்.
அந்த மனுவில் அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலர் பதவி என்பது இல்லை. ஆகையால்
சசிகலா பொதுச்செயலராக நியமிக்கப்பட்டது செல்லாது என அறிவிக்க வேண்டும் என
வலியுறுத்தியிருந்தனர். இந்த மனுவை ஏற்று சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம்
நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், ஓபிஎஸ் அணியினரின் புகார் குறித்து வரும்
28-ந் தேதிக்குள் விளக்கம் தர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நோட்டீஸுக்கு பதில் தராவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கையை தேர்தல்
ஆணையம் மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தல்
ஆணையத்தின் நோட்டீஸ் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவிடம் இன்று
வழங்கப்பட்டது. அதிமுக வழக்கறிஞர் பாபு தலைமையில் 5 பேர் சிறை அதிகாரிகள்
மூலம் சசிகலாவிடம் நோட்டீஸ் தந்தனர்.
No comments:
Post a Comment